“எடப்பாடியே தான் அனைத்து தொகுதியிலும் போட்டியிடணுமா?” – அதிமுகவினரின் தேர்தல் அட்ராசிட்டீஸ்

65dd49bc528df.jpg

நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியான தி.மு.க கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க, பா.ஜ.க-வில் கூட்டணி அமைப்பதில் இன்னும் ஒரு முடிவுக்கு வராததால், எதுக்கு ரிஸ்க் என்று சில மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகள் போட்டியிட தயக்கம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்படுக்கிறது.

விருப்ப மனு கொடுக்கும் அதிமுக-வினர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர், “கடந்த 2019 தேர்தலின்போது ஒவ்வொரு தொகுதிக்கும் ஏகபட்ட பேர் விருப்ப மனு கொடுத்து போட்டி போட்டதில் யாருக்கு தொகுதியை ஒதுக்குவது என்பதில் தலைமையே கிறுகிறுத்துப் போனது. குறிப்பாக, மதுரையில் போட்டியிட்ட ராஜ் சத்யனே, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமாரின் ஆட்களை சரிகட்டி கடுமையான போராட்டத்துக்குப் பின்புதான் சீட்டை பெற்றார்.

ஆனால், இந்த முறை விருப்ப மனுக்களை கொடுக்கவே முக்கிய நிர்வாகிகள் தயங்கி வருகிறார்கள். மாநகரச் செயலாளர் செல்லூர் ராஜூ முக்கிய புள்ளிகள் யாராவது சீட் கேட்டு வருவார்கள் என்று காத்திருக்கிறார். டாக்டர் சரவணனைத் தவிர வேறு யாருமே முன்வர மாட்டேங்கிறாங்க. இதேதான் பல மாவட்டங்களின் நிலை, அப்படியே விரும்பி சீட் கேக்குறவங்களை பார்த்தா மக்களுக்கு தெரியாதவங்களா இருக்காங்க. இந்த நிலையிலதான் கடந்த மாதம் 21-ஆம் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

ஆனால், விருப்ப மனு வாங்குவதும் கொடுப்பதும் ரொம்ப மந்தமா நடந்துகிட்டிருக்கு. விருப்ப மனு கொடுக்கிற இறுதி நாளை 6-ஆம் தேதி வரை நீட்டித்தும் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை. அ.தி.மு.க சரித்திரத்தில் தேர்தல் நேரத்தில் கட்சி அலுவலகம் பரபரப்பில்லாமல் காணப்படுது. இது ஒரு பக்கம்னா, பல மாவட்ட செயலாளர்கள், எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிடணும்னு அவர் பெயரில் மனு கொடுத்துட்டு போறாங்க” என்றார்.

ஜெ பேரவை சார்பில் விருப்ப மனு கொடுக்க சென்றவர்கள்

“மாவட்டத்தில் செல்வாக்கு உள்ள, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி-க்கள், நம் ஆட்சியில் பலனடைந்த அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களிடம் பேசி  சிலரை தேர்வு செய்து பட்டியல் கொடுங்கள், விருப்ப மனு வாங்கியபிறகு அந்த பட்டியலை பரிசீலனை செய்யலாம்” என்று எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டும், இதுவரை  பட்டியல் அனுப்பவில்லை என்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தினர்.

இந்த நிலையில்தான் ‘எடப்பாடி பழனிசாமியே எங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என ஆரம்பித்து அனைத்து மாவட்டத்திலிருந்தும் மாவட்ட நிர்வாகிகள் விருப்ப மனுவை கொடுத்து வருகின்றனர்

எடப்பாடி பழனிசாமி

இதில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளராக பொறுப்பு வகிப்பதால், அதன் மாவட்ட நிர்வாகிளை சென்னைக்கு அழைத்து சென்று தனித்தொகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியே போட்டியிட வேண்டுமென்று விருப்ப மனுக்களை கொடுக்க வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து பல மாவட்ட நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.

“வேடிக்கையை பாருங்க, அவங்க கட்சியில போட்டியிட ஆளில்லாததால், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை எம்.பி-க்கு போட்டியிட மனு கொடுக்குறாங்க. அவர் எம்.பி-யாகிவிட்டால், 2026-ல் யாரு முதலமைச்சர் வேட்பாளர்?” என்று சமூக ஊடகங்களில் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

“அ.தி.மு.க-வினர் போட்டியிடத் தயங்குகிறார்களா? கட்சியினரிடம் உற்சாகமில்லையா? அதனால்தான் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுவா?” என்று, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைதலைவர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டோம். “தேர்தல் நேரங்களில் ஜெயலலிதா இருக்கும்போது இருந்த அதே உற்சாகம் கட்சி நிர்வாகிகளிடம் இப்போதும் உள்ளது. தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் முன்வரவில்லை என்று சொல்வதெல்லாம் பொய்யான தகவல். இதுவரை 2000-க்கு மேல் விருப்ப மனுக்கள் வந்துள்ளது, இன்னும் வரும். தனித்தொகுதி நீங்கலாக தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் எடப்பாடியார் பெயரில் விருப்ப மனு கொடுப்பது, ஒவ்வொரு தொகுதியும் எடப்பாடியாரே போட்டியிடுவதாக நினைத்து வேலை செய்யத்தான். 

அது கட்சியினரை உற்சாகப்படுத்த தான். ஏதோ ஆளில்லாமல் அவர் பெயரில் விருப்ப மனு கொடுப்பதாக பேசுவது தவறானது. இதை ஜெயலலிதாவுக்கும் செய்தோம், தற்போது அவர் இடத்தில் எடப்பாடியாரை வைத்து பார்க்கிறோம். இன்று மாநில அரசையும், மத்திய அரசையும் அவர்களின் அதிகார பலத்தையும் மீறி தேர்தலை சந்திக்க உள்ள எங்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, விமர்சனம் செய்கிறோம் என்று உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. கட்சி நிர்வாகிகள் நல்ல நாள், நேரம் பார்த்துதான் விருப்ப மனு வாங்குவார்கள்,கொடுப்பார்கள். அதற்காக கட்சி அலுவலகத்தில் கூட்டம் இல்லையென்று சொல்வதெல்லாம் மிகையானது. 

ஜெ பேரவை சார்பில் விருப்ப மனு கொடுக்க சென்றவர்கள்

இன்றைக்கு இரண்டு கோடி தொண்டர்கள், எட்டு கோடி தமிழக மக்களின் நன்மதிப்பை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். தமிழக முழுவதும் 68,520 வாக்கு சாவடிகளில் வலுவான கட்டமைப்பு உள்ளது. தற்போது ஒவ்வொரு தொகுதிக்கும் போட்டியிட சராசரியாக 80-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்துள்ளது. தகுதி உள்ள நபர்களை தேர்வு செய்து தலைமை கழகம் அறிவிக்கும், நாடாளுமன்றத் தேர்தலில் பெறு வெற்றி பெறுவோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *