சின்னம்… சிக்கல்… கதறும் கட்சிகள்!

Symbol.jpg

தேர்தலில் வெற்றி பெறுவது எத்தனை முக்கியமோ, அதே அளவு சின்னங்களை பெறுவதிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுவார்கள். இதற்கு அந்த சின்னங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதுதான் காரணம். இதற்கு எடுத்துக்காட்டாக காங்கிரஸின் கை சின்னத்தையும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தையும் கூற முடியும். தமிழகத்தின் பல இடங்களில் மக்களில் சிலர் ‘காமராஜரின் சின்னம் கை’ என்றும் ‘எம்ஜிஆரின் சின்னம் இரட்டை இலை’ என்றும் அந்த கட்சிகளுக்கு வாக்களித்து வருகிறார்கள். அந்த கட்சியில் தற்போது இருக்கும் தலைவர் யார்?, தங்கள் தொகுதியின் வேட்பாளர் யார்? என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை.

இரட்டை இலை

ஒருவேளை கூட்டணி கட்சிகள் சம்மந்தப்பட்ட இடத்தில் போட்டியிட்டால் எங்கே சின்னத்தை காணவில்லை என தேடும் சம்பவங்களும் நடந்தேறும். எனவேதான் சின்னங்களை பெறுவதற்கு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அது கிடைத்துவிட்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விடுகிறார்கள். மநீமவுக்கு டார்ச் லைட் கிடைத்ததும், “தேர்தல் ஆணையத்தில் நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள்” என கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார். இதேபோல் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற சீமான், “பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். நிச்சயமாக இந்த தேர்தல் முடிந்தபிறகு, வழக்குத் தொடர்வேன்” என கொதித்து இருந்ததை பார்க்க முடியும். இதன் மூலம் சின்னம் எவ்வளவு முக்கியமானது என்பது தெளிவாகிறது.

பொதுவாக சின்னங்களை பெறுவதில் அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்குத்தான் சிக்கல் ஏற்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, “மக்களைவைத் தேர்தலில் 2% சீட்டுகளை பெறுவதுடன் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கட்சி இருக்கும் பட்சத்தில் தேசிய கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். இதேபோல் மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்க சட்டப்பேரவையில் 6% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். கூடவே மக்களவையில் 6% வாக்குகளுடன், ஒரு தொகுதியை வைத்திருக்க வேண்டும். இதனால்தான் காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம், அதிமுக, திமுக, ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக உள்ளன. எனவே அவர்களுக்கு சின்னத்தில் எந்த சிக்கலும் இல்லை. மறுபக்கம் மதிமுக, பாமக, அமமுக, கொமதேக, மநீம, நாதக, தமாகா ஆகிய கட்சிகள் அங்கீகாரம் பெறாததால் தேர்தலுக்கு தேர்தல் சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

பாஜக, காங்கிரஸ்

இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம், அதிமுக, திமுக ஆகியவற்றின் சின்னனங்களுக்கு பின்னாலும் சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது. அதாவது தற்போது மத்தியில் இருக்கும் பாஜக, ஜனசங்கமாக இருக்கும் போது தீபம் (அ) விளக்கு சின்னம்தான் வைத்து இருந்தது. பிறகுதான் தாமரை சின்னம் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை காளை மாடு சின்னம்தான் முதலில் இருந்தது. பிறகு இந்திரா காங்கிரஸ் பிரிந்த போது கன்றுடன் இருக்கும் பசு மாடு சின்னமும், ஸ்தாபன காங்கிரஸுக்குக் கைராட்டை சுற்றும் பெண் சின்னமும் ஒதுக்கப்பட்டன. பிறகு அனைவரும் இணைந்ததும் கை சின்னம் வழங்கப்பட்டது.

இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இருக்கும் போது கதிர் அரிவாள், சுத்தியல் சின்னம் இருந்தது. பிறகு அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதும் இந்திய கம்யூனிஸ்ட்டுக்குக் கதிர் அரிவாள் சின்னமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 1988 தேர்தலில் முடக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக கட்சி உடைத்து. அப்போது ஜானகி அணிக்கு இரட்டை புறா, ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கொடி

பிறகு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ், ஓபிஎஸ் அணி என பிரிந்தது. அப்போது நடந்த ஆர்கேநகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம், டிடிவிக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டது. அந்த தேர்தல் ரத்து ஆனதால் மீண்டும் நடந்த தேர்தலில் டிடிவிக்கு குக்கர் சின்னம் கிடைத்தது. பிறகு அமமுக ஆரம்பித்த பிறகு குக்கர் சின்னத்தை பெற முயன்ற தினகரனுக்கு கிப்ட் பாக்ஸ் சின்னம் தான் கொடுக்கப்பட்டது. பிறகு நடந்த 2021 தேர்தலில் போராடி குக்கர் சினத்தை பெற்றார், அவர்.

தற்போது மீண்டும் இரட்டை இலை சின்னம் தனக்கு வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்து இருக்கிறது. இதேபோல் மதிமுகவை வைகோ ஆரம்பித்த போது முரசு சின்னம்தான் கிடைத்து. பின்னாளில்தான் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

தமாகா ஆரம்பிக்கப்பட்ட போது சைக்கிள் சின்னம் கிடைத்தது. பிறகு தென்னைமரம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்த முறை சைக்கிள் சின்னம் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருவதால் நீதிமன்றத்தை நாடி இருக்கிறது, அந்த கட்சி. பாமக ஆரம்பிக்கப்பட்ட போது யானை சின்னம்தான் ஒதுக்கப்பட்டது. பிறகு மாயாவதியின் பகுஜன் ஜமாஸ் கட்சி தேசிய அளவில் உருவெடுத்ததால் யானை சின்னம் அவர்களுக்கு சென்றது. பிறகு பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதேபோல் மோதிரம், பானை சின்னங்களில் விசிக போட்டியிட்டது. இந்தமுறை தங்களுக்கு பானை சின்னம் வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள்.

உதயசூரியன்

ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் களம் கண்ட நாம் தமிழர் கட்சிக்கு பிறகு கரும்பு விவசாயிகள் சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது சீமானின் தம்பிகளை கொதிப்படைய செய்து இருக்கிறது. ஆனால் திமுக தொடங்கப்பட்டது முதல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. ஆனால் வைகோ தனி கட்சி ஆரம்பித்த போது எனக்குதான் உதயசூரியன் சின்னம் என நீதிமன்றத்தை நாடி கருணாநிதி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஆனால் கலைஞருக்கு தான் உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. எனவே அங்கீகாரம் இல்லாமல் நீதிமன்றத்தை நாடி இருக்கும் கட்சிகளின் கோரிக்கை என்னவாகும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *