நிதிப் பகிர்வு: `வடக்கு… தெற்கு எனப் பிரிக்கின்றனர்!' – பிரதமர் மோடி கொந்தளிப்பது சரிதானா?

Screenshot 2024 02 07 17 21 32.png

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், துரோகம் இழைப்பதாகவும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தீவிரமடைந்திருக்கிறது.

டெல்லியில் முதல்வர் சித்தராமையா போராட்டம்

‘நிதிப் பகிர்வில் கர்நாடகாவுக்கு பாரபட்சம் காட்டும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து’ கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 7-ம் தேதி தர்ணாவில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, ’பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைத்திருக்கும் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் கர்நாடகாவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அதனால், தென்னிந்தியாவில் மக்கள்தொகை குறைந்தது. அதைக் காரணம் காட்டி, கர்நாடகாவுக்கு நிதிப் பகிர்வில் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இது, பொருளாதாரக் கொடுங்கோன்மை’ என்று கொந்தளித்தார்.

சித்தராமையா போராட்டம் நடத்திய மறுநாள், மத்திய அரசைக் கண்டித்து அதே ஜந்தர் மந்தரில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் நடத்தினார். அதில், தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்ல, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

டெல்லி போராட்டத்தில் சித்தராமையா

இந்தப் போராட்டம் நடைபெற்ற அதே நேரத்தில், நாடாளுமன்ற வாளகத்திலுள்ள காந்தி சிலை முன்பாக தி.மு.க கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிப்பூர் விவகாரம், அதானி விவகாரம் என மத்திய அரசுக்கு எதிரான எந்தவொரு பிரச்னையிலும் மௌனத்தைக் கடைப்பிடிக்கும் பிரதமர் மோடி, உடனடியாக பதிலளிக்கும் அளவுக்கு, மாநில முதல்வர்கள் டெல்லியில் நடத்திய போராட்டங்கள், மத்திய பா.ஜ.க அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்றுவந்த வேளையில், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘வடக்கு, தெற்கு என்று நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதை நிறுத்துங்கள்’ என்று கூறினார்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, ‘எங்களைப் பொறுத்தளவில், நாடு என்பது வெறும் நிலமல்ல. அது மனித உடலைப் போன்றது. காலில் முள் குத்தி வலி ஏற்பட்டால், உடனே அந்த முள்ளை கை எடுக்கும். காலில்தானே முள் இருக்கிறது. எனக்குக் கவலை இல்லை என்று கை இருக்காது. அதுபோலத்தான் நம் தேசமும்.

நாட்டின் எந்தப் பகுதியில் வளர்ச்சியில் விடுபட்டாலும், இந்தியா வளர்ந்த தேசமாக உருவெடுக்க முடியாது. நாட்டை ஒன்றாகப் பார்க்க வேண்டுமே அல்லாமல், தனித்தனிப் பகுதிகளாகப் பார்க்கக் கூடாது’ என்று பிரதமர் மோடி கொந்தளித்தார்.

அதேபோல, ‘தேசத்தின் ஒரு பகுதியில் தயாராகும் தடுப்பூசியை, இதர பகுதிக்குத் தரக் கூடாது என்று சிலர் பேசுகின்றனர். இது என்ன மாதிரியான சிந்தனை. இமயமலையில் உருவாகும் நதி நீரை வேறு மாநிலங்களுடன் பகிர முடியாது என்று சம்பந்தப்பட்ட மாநிலத்தவர் கூறினால் என்னவாகும்? எங்கள் வரி, எங்கள் பணம் என்று கூறுவது சரியா?’ என்று பல கேள்விகளை பிரதமர் எழுப்பினார். மேலோட்டமாகப் பார்த்தால், பிரதமரின் இந்த வாதம் சரியானது போலத் தெரியலாம். ஆனால், இந்தப் பிரச்னைகளை, மத்திய அரசின் நிதிப் பகிர்வு விவகாரத்துடன் ஒப்பிட முடியாது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

பினராயி விஜயன்

காவிரி நீர் தமிழ்நாட்டின் உரிமை. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீரை பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உட்பட இது தொடர்பான அனைத்து அமைப்புகளும் இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டன. ஆனால், அந்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய மத்திய பா.ஜ.க அரசு, கடந்த பத்தாண்டுகளாக வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

‘காவிரி நதி நீர் பிரச்னை பற்றி பிரதமர் மோடி என்றைக்காவது வாய்திறந்திருக்கிறாரா?’ என்ற கேள்வி தமிழ்நாட்டிலிருந்து எழுப்பப்படுகிறது. நிதிப் பகிர்வு என்று வருகிறபோது, வேறு பிரச்னைகளுடன் ஒப்பிட்டு, பிரதமர் திசைத்திருப்ப முயல்கிறார் என்று தென் மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

மோடி

இப்போது பேசுவதைப்போலத்தான், குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது பிரதமர் மோடி பேசினாரா? ‘எங்கள் வரி, எங்கள் பணம் என்று சிலர் பேசுகிறார்கள். இது என்ன மாதிரியான பேச்சு? இது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல’ என்று நாடாளுமன்றத்தில் ஆவேசப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

“குஜராத் முதல்வராக இருந்தபோது, ‘குஜராத் மக்கள் ரூ.60,000 கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், திரும்பிவருவது என்ன? குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா? நாங்கள் என்ன டெல்லியில் திருவோட்டை ஏந்திக்கொண்டு நிற்க வேண்டுமா?’ என்று கொந்தளித்தவர்தான் பிரதமர் மோடி. எனவே, தற்போது மத்தியில் ஆட்சியிலிருக்கும் அவர், எதிர்க்கட்சிகளை இப்படிப் பேசுவது சரியல்ல” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *