ஒன்னு கூடிட்டாங்களே.. ஓரணியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, நாதக, மதிமுக – பாஜக ஷாக் | All TN parties including DMK, ADMK, Naam Tamilar join together and oppose Uniform civil code

Uniform1 1689424205.jpg

Chennai

oi-Noorul Ahamed Jahaber Ali

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக அரசின் கனவு திட்டமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அக்கட்சியின் கூட்டணி கட்சிகளே தற்போது அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது அதற்கான பணிகளை தொடங்கி மக்களிடமும் கருத்து கேட்டு உள்ளது. இதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்தும் இருக்கிறது.

All TN parties including DMK, ADMK, Naam Tamilar join together and oppose Uniform civil code

மத்திய அரசின் இந்த பொதுசிவில் சட்டத்துக்கு இஸ்லாமிய இயக்கங்களும் கட்சிகளும் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. சிறுபான்மையினரின் மத சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

அண்மையில் சட்ட ஆணையருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “பன்முகத் தன்மையை கொண்ட இந்தியாவின் முன்னேற்றத்துக்கும், ஒற்றுமைக்கும் பொது சிவில் சட்டம் ஊறு விளைவிக்கும். பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது. சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளுக்கு சவால் விடுவதாக பொது சிவில் சட்டம் உள்ளது.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக பொது சிவில் சட்டம் உள்ளது. அதனால் பொது சிவில் சட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்க்கிறது. மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, “ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை உறுதி செய்துள்ளது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியோ, “உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான 21வது சட்ட ஆணையம் நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி இருந்து மீண்டும் ஒரு கருத்து கேட்பு நடத்துவது வியப்பளிக்கிறது. இதற்கான ஒரு காரணத்தை சட்ட ஆணையம் சரியாக குறிப்பிடவில்லை. தனது திட்டங்களின் தோல்வியை திசைதிருப்பும் பாஜக அரசு இதனை செய்கிறது.

பெரும்பாலான நாடுகள் சிறு சிறு பாகுபாடுகளை களைய முடியாது என்பதால் அவற்றை அங்கீகரிக்க தொடங்கிவிட்ட நிலையில்,நாட்டின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு பல ஆண்டுகளாக முக்கியத்துவம் அளித்து வரும் சட்ட ஆணையம், பாஜகவின் ஆதாய அரசியலை விட்டுவிட்டு நாட்டு நலனில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், கடந்த சில நாட்களுக்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டாம் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும் என்று இடம்பெற்று இருந்ததை சுட்டிக்காட்டினார். இதன் மூலமாக பொது சிவில் சட்டத்தை அதிமுக ஆதரிக்காது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

All TN parties including DMK, ADMK, Naam Tamilar join together and oppose Uniform civil code

இதேபோல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதே இஸ்மாலிய, கிறிஸ்தவர்களின் சட்ட முறையை தகர்க்க வேண்டும் என்பதுதான். என் சட்டையும் உங்கள் சட்டையும் ஒரே மாதிரி இருக்கிறதா? ராணுவத்திற்கு வரும்போது தாடியை எடுக்கிறேன். முடியை ஒட்ட வெட்டிக்கொள்கிறேன். சீக்கியரை தாடியை எடுத்து விட்டு முடியை வெட்டி வர சொல்லிவீர்களா?

என்னால் கோவிலுக்கு உள்ளே போக முடியுமா? ஒரே குளத்தில் குளிக்க முடியுமா? ஒரே சுடுகாட்டில் புதைக்க முடியுமா? பின்னர் ஏன் ஒரே நாடு, ஒரே சட்டம் என பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? சட்டத்தின் முன்பு சமம் இல்லை என்று உள்ளபோது ஏன் இந்த பொது சிவில் சட்டம்? வேலையில்லாத வேலை” என்றார்.

All TN parties including DMK, ADMK, Naam Tamilar join together and oppose Uniform civil code

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்திய சட்ட ஆணையத் தலைவருக்குஎழுதிய கடிதத்தில், “இந்த சட்டம் பன்மைத்துவத்துக்கும், பழங்குடி சமூகங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சட்ட வரம்பிலிருந்து கிறிஸ்தவர்கள் மற்றும் சில பழங்குடியினப் பிரிவினருக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், பொது சிவில் சட்டத்தின் நோக்கம் குறித்தே கேள்வி எழுகிறது.

பெரும்பான்மை மதமான இந்து மதத்தில் நிலவும் பாரபட்சமான நடைமுறைகளை ஒழிக்க, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து கோயில்களில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு இயற்றிய சட்டம், நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டிய முக்கியமான எடுத்துக்காட்டு. பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவதைவிட, இதுபோன்ற நடவடிக்கைகளே முக்கியமானவை. சட்டமேதை அம்பேத்கர் மீது அரசுக்கு மரியாதை இருந்தால், இந்து மதத்தின் அனைத்து சாதியினருக்குமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில், “பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்த ஒரு மதத்தினரின்/சிறப்புப் பிரிவினரின் உரிமைகளும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.

இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரின் திருமணங்கள், மண விலக்குகள், குழந்தைகளை தத்தெடுத்தல், சொத்துரிமை ஆகியவை தொடர்பாக தனித்தனியான சிவில் சட்டங்கள் உள்ளன.

ஒவ்வொரு மதப்பிரிவினரின் பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட அத்தகைய சட்டங்கள் அப்படியே தொடர வேண்டும்; பல்வேறு மதப்பிரிவினரின் சிவில் உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பல்வேறு மாநாடுகள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் இந்த நிலையை பா.ம.க. தெளிவுபடுத்தியுள்ளது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுதிய கடிதத்தில், “இந்தியாவில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை டாக்டர் கிரோடிலால் மீனா அறிமுகப்படுத்தியதை எதிர்த்து, 09.12.2022 அன்று, மாநிலங்களவையில் நான் பேசும் போது, “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் தங்களது செயல் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தி வருகின்றனர்.

காஷ்மீரை முடித்துவிட்டார்கள். இப்போது அவர்கள் பொது சிவில் சட்ட மசோதாவைக் கொண்டுவந்துள்ளனர். அப்படியானால், நாம் எங்கே செல்கிறோம்? பேரழிவை நோக்கியும், சிதைவை நோக்கியும் இந்தியாவை இட்டுச் செல்கின்றனர். இச்சட்டம் வந்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் உணர்வுகள் முற்றிலும் அழிந்துவிடும். எனவே, தயவு செய்து இந்த மசோதாவை இன்று அறிமுகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டு பேசினேன்.

அரசியலமைப்பையே சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்.. பிளவுகளை ஏற்படுத்தும் - வைகோ பரபர கடிதம்!அரசியலமைப்பையே சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்.. பிளவுகளை ஏற்படுத்தும் – வைகோ பரபர கடிதம்!

பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் மத விஷயங்களில் அரசின் முரண்பாடாக கருதப்படலாம். மேலும் பல்வேறு மத சமூகங்களுக்கிடையில் ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் முயற்சியாகவும் கருதப்படும். அரசியலமைப்புச் சீர்குலைவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று ம.தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

English summary

While the BJP government is trying to implement the dream plan of the Common Civil Code, not only the opposition parties but also the party’s allies are strongly opposing it.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *