`வெள்ள நிவாரண நிதி; நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தாவது வழங்கியிருக்கலாம்..!' – ஸ்டாலின் தாக்கு

Img 20240225 Wa0007.jpg

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். எம்.எல்.ஏ-க்கள் மார்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ்,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி தி.மு.க வடக்கு மற்றும்  தெற்கு மாவட்டங்களின் சார்பில் மாவட்டச் செயலாளர்களான அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு வெள்ளியினாலான செங்கோலை நினைவுப்பரிசாக வழங்கினர்.  விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மைக் பிடித்த முதல்வர் ஸ்டாலின், “இந்த ஆண்டின்  முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இந்த தூத்துக்குடியில்தான் நடக்கிறது. இந்த தூத்துக்குடி என் தங்கை கனிமொழியின் தொகுதி.

தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில்  கனமழை, வெள்ளத்தை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இதை தேசிய பேரிடராகத்தான் பார்க்க வேண்டும்.  சீனியர் அமைச்சர்கள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு  உயரதிகாரிகள் பல நாட்கள் முகாமிட்டு இங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்தார்கள். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. மக்களுக்கு நிவாரணப் பொருட்களும் உடனுக்குடன் சென்றடைந்தன.  பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மாநில அரசு கேட்ட நிவாரண நிதியை வழங்கிட பிரதமருக்கு பரிந்துரைக்கவில்லை.  தமிழ்நாட்டை பாரபட்சமாகவே மத்திய அரசு நினைக்கிறது. சீரமைப்பு பணிகளுக்காக  மத்திய அரசிடம் ரூ.37,000 கோடி நிவாரண நிதியாகக் கேட்டோம்.

நலத்திட்ட உதவி வழங்கல்

ஆனால், ஒரு ரூபாய்கூட தரவில்லை. அந்த சூழலிலும் மக்களின் நலன் கருதி,  நிவாரணப் பணிகள் அனைத்தும் மாநில அரசின் நிதியிலேயே செய்யப்பட்டது. யாரையும் எதிர்பார்க்காமல் மக்கள் பணி செய்வது  தி.மு.க மட்டும்தான்.  மக்களுக்காக மாநில அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு தராவிட்டாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தாவது நிதி வழங்கியிருக்கலாம். தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற ஒரு கவலை, பயம்கூட பா.ஜ.க-விற்கு இல்லை.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வினர் மக்களிடம் வாக்கு  கேட்பார்கள். மக்களுக்கு நடந்தவை எல்லாமே தெரியும். எப்படி மக்கள், அவர்களுக்கு வாக்களிப்பார்கள்?  தமிழ்நாடு அரசு யாரையும் எதிர்பார்த்து காத்து நிற்கும் அரசு அல்ல. நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டு செல்லும் அரசு.  தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பார்த்துதான் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.”

விழாவில் கலந்து கொண்ட பயனாளிகள்

என்றவர், “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேம்பாரில் ரூ.5 கோடியில் பனைபொருட்கள் விற்பனை குருங்குழுமம் ஏற்படுத்தப்படும், கோவில்பட்டியில் ரூ.10 கோடியில் கடலைமிட்டாய் குருங்குழுமம் ஏற்படுத்தப்படும், தூத்துக்குடியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் வர்த்தக மையம் அமைக்கப்படும், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மாவட்ட தலைமை  மருத்துவமனை அமைக்கப்படும்.  அம்பாசமுத்திரத்தில் புதிய அரசு மருத்துவமனை, மாஞ்சோலை செல்லும் சாலை ரூ.5 கோடியில் புதுப்பிக்கப்படும்.” ஆகிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *