Election 2024: `மகனுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியா?' – என்ன சொல்கிறார் பிரேமலதா?

Whatsapp Image 2024 02 07 At 19 24 47.jpeg

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

விஜயகாந்த் நினைவிடத்தில்

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கில் பல்வேறு விதங்களில் கலந்துகொண்ட, அஞ்சலி செலுத்திய, முதல்வர், ஆளுநர், பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள், கலைத்துறையைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் நன்றி. அரசு மரியாதை செலுத்திய தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி.

மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சித் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில், தே.மு.தி.க யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதி முடிவாக தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என மூன்று கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன்தான் கூட்டணி அமைக்க முடியும். எனவே, இந்தக் கட்சிகளில் யார் எங்களுக்கு அதிக சீட் ஒதுக்குகிறார்களோ அவர்களுடன் எங்களின் கூட்டணி இருக்கும்.

ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

2014-ல் வழங்கியதுபோல, 14 நாடாளுமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கும் கட்சிக்குத்தான் எங்களின் ஆதரவு, அவர்களுடன்தான் கூட்டணி என்பதை அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, அதற்கான பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிக்காக இனிதான் குழு அமைக்கவிருக்கிறோம். 12-ம் தேதி தே.மு.தி.க-வின் கொடி நாள். அதைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறோம்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் கேப்டன் விஜயகாந்த்துக்கு நினைவேந்தல் பொதுக்குழு நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் நிறைவடைவதற்குள் எங்களின் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். இதுவரை எந்தக் கட்சியுடனும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூட்டணி குறித்துப் பேசவே இல்லை. சமூகநீதி, சித்தாந்தரீதியான கட்சிதான் தே.மு.தி.க. அதில் உங்களுக்குச் சந்தேகமும் வேண்டாம்.

பிரேமலதா

கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய்க்கு எங்கள் கட்சி சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நானும், என் மகன் பிரபாகரனும் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *