Vijay: களத்தில் நடிகர் விஜய்… அரசியலில் காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?!

0115e241 F89d 4454 Ade2 5c2a261049a9.jpeg

புதிய கட்சி அறிவித்த விஜய்!

நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. திரைப்படங்களில் நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், புதிய கட்சியைத் தொடங்குவதற்கான பணிகளையும் அவர் ஒருபக்கத்தில் பார்த்துக்கொண்டேதான் இருந்தார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளைச் சந்தித்த நிகழ்வும் நடந்தது. அதிலும் கடந்த சில மாதங்களாக அவர் அரசியல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்ததைக் காணமுடிந்தது.

தமிழக வெற்றி கழகம்

தொடர்ச்சியாக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. நிர்வாகிகள் சந்திப்பு தாண்டி, நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் நடிகர் விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் புதிதாக “தமிழக வெற்றி கழகம்” என்ற தனது கட்சியைத் தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

விஜய் தனது கட்சியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்தும் முடித்திருக்கிறார். இந்த சூழலில் நடிகர் விஜய் புதிதாகக் கட்சி தொடங்கியதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருவதை காண முடிகிறது. அரசியலுக்கு நுழையும் நடிகர் விஜய், ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர்கள்

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், தனது ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை என்பதையும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடப்போவதில்லை. அந்த கட்சியின் இலக்கு வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்பது தெளிவாகிறது.

காத்திருக்கும் சவால்கள்!

புதிய கட்சி தொடங்கியிருக்கும் விஜய்க்கு அரசியலில் காத்திருக்கும் சவால்கள் என்னென்ன என்பது குறித்து அரசியல் ஆலோசகர்கள் சிலரிடம் பேசினோம். “இந்திய அரசியலில் தமிழக அரசியல் முற்றிலும் வேறு ஒரு கோணம் உடையது. சினிமாவிலிருந்து வந்தவர்கள் அரசியலில் இடம் பிடித்துவிடலாம் என்பது எம்.ஜி.ஆர் தொடங்கி விஜயகாந்த் வரை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அதேநேரம் மாபெரும் நடிகர் என பெயர் பெற்ற சிவாஜியால் அரசியலில் நிலைத்து நிற்க முடியவில்லை. அதனால், திரைத்துறையில் இருந்து வரும் அனைவருமே வெற்றிபெற்று விடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது.

Vijay – விஜய்

ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு பெரும் வரவேற்பு இருப்பது உண்மைதான். ஆனால், தேர்தல் களத்தில் அந்த ஆதரவு வாக்காக மாறும் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. திராவிட கட்சிகள் ஆழமாக வேரூன்றி நிற்கும் தமிழகத்தில் இன்னொரு கட்சி விதை தற்போது தான் வைக்கப்பட்டிருக்கிறது. அது முளைத்து வரவே விஜய் கடினமான உழைப்பைப் போடவேண்டியது இருக்கும். கட்சி விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். கட்சிக்கு மாவட்ட வாரியாக ரசிகர் மன்றம் இருப்பது அவருக்கு ஒரு பக்கபலம். அதனை கட்சியாக மாற்றி, ரசிகர் மன்ற நிர்வாகிகளை கட்சி நிர்வாகிகளாக மாற்றி அவர்கள் கட்சி பணி செய்து மக்கள் மத்தியில் விஜய்யின் கட்சியை எடுத்துச் செல்லும் அளவுக்கு உழைக்க வேண்டும்.

இவை அனைத்துக்கும் பெரும் பொருள் செலவும் இருக்கிறது. இத்தனை ஆண்டுக்காலம் தான் சம்பாதித்த அனைத்தையும் அரசியலில் செலவு செய்யவும் அவர் தயாராக இருக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி பூத் கமிட்டி அமைப்பது வரை ஒரு அரசியல் கட்சியில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜகவால் கூட தமிழகத்தில் மொத்தம் உள்ள 75 ஆயிரம் பூத் கமிட்டியில் 12 ஆயிரம் பூத் கமிட்டியைத்தான் இதுவரை முழுமையாக போட முடிந்திருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சியால் கூட அவ்வளவு எளிதில் கட்சி கட்டமைப்பை இங்கு வலுப்படுத்திவிட முடியாது. அந்தளவுக்குத் திராவிட கட்சிகளின் வளர்ச்சி தமிழக மக்களிடம் ஆழமாக உள்ளது.

Vijay – விஜய்

எல்லாவற்றையும் தாண்டி ஒரு அரசியல் கட்சி நிலைத்து நிற்க அந்த கட்சி எடுத்துக்கொள்ளக் கூடிய கருத்தும், கொள்கையும் மிக முக்கியம். திமுகவுக்கு, சமத்துவம், சமூக நீதி என்ற கொள்கைகள் தான் அன்று முதல் இன்றுவரை கைகொடுக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக தொடங்கி இங்குப் பல கட்சிகள் காலப்போக்கில் கரைந்து போனதற்குச் சரியான கொள்கைகள் எதுவும் இல்லை என்பதே முக்கிய காரணம். இன்றுவரை சீமானின் நாம் தமிழர் கட்சி நிலைத்து நிர்வகிக்கும் அவர் கையிலெடுத்த தமிழ்த் தேசியம் என்று ஒரு கொள்கை முக்கிய காரணம். ஏதாவது ஒரு பிரச்னையைச் சொல்லி அரசியலுக்கு வருகிறோம். அந்த பிரச்னை முடிந்துவிட்டால் அடுத்து என்ன… என்ற கேள்வி வந்துவிடும். காலப்போக்கில் மக்களும் அந்த கட்சியை மறந்துவிடுவார்கள். அதனால், ஒரு கட்சியின் கொள்கை மட்டுமே அந்த கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும். அதனை யோசித்து முடிவு செய்யவேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார்” என்றார்கள் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *