ஜல்லிக்கட்டு: `வாடிவாசலுக்கு மூடுவிழா நடத்துவதா..?' – தமிழக அரசுமீது ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

Whatsapp Image 2024 01 04 At 13 53 23.jpeg

“நம் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக முயற்சி நடைபெறுகிறதோ என்கிற ஓர் அச்சம் ஏற்படுகிறது…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தபோது, அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்த போராட்டத்துக்குப் பின் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை வைத்து வந்தனர். அதே கோரிக்கைகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருடையை கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து வருகிறது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது முன்னோர்களின் வார்த்தை. நமது பண்பாடு, நாகரிகத்தின், வீரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டு திகழ்ந்து வருகிறது.

ஆர்.பி.உதயகுமார்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடிவாசல் வழியாக மாடுகள் அனுப்பப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது தமிழர்கள் பாரம்பர்யமாகக் கடைபிடித்து வரும் வாடிவாசலுக்கு மூடு விழா நடத்தப்படுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

பொதுவாக கிராமங்கள்தோறும் குல தெய்வங்களை வழிபட்டு, வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிடுவார்கள். இப்படி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுதான் வீரத்தின் அடையாளம், அது கண்காட்சிக் கூடம் அல்ல.

ஜல்லிக்கட்டு

மண்வாசனை மிக்க இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு, எங்கள் கருத்தை கேட்காமல் வாடிவாசலுக்கு மூடு விழா நடத்தாதீர்கள் என மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு மைதானம் எந்த நாட்டிலும் கிடையாது. இந்த புத்திசாலித்தனமான முடிவை யார் கூறியது என்று தெரியவில்லை, இல்லாத ஒன்றை உருவாக்கக் கூடாது. நம் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக முயற்சி நடைபெறுகிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அலங்காநல்லூர் வாடிவாசலில் தனது பொற்கரங்களால் பச்சைக்கொடியை அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து, ஒரு முதலமைச்சர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் என்ற வரலாற்றை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார்.

ஜல்லிக்கட்டு மைதானம்

தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு, பராமரிப்பு செலவுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தனர். அந்த அறிவிப்பு இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. அதை வழங்கி காளை வளர்ப்பை ஊக்கப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதை விடுத்து யாருமே கேட்காத, யாருமே விரும்பாத ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்திருப்பது  திணிக்கப்படுகிற திட்டமாக உள்ளது.

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்றுவதற்கும், ஒவ்வொரு கிராமத்தின் பாரம்பர்யத்தைக் காப்பாற்றுவதற்கும் அரசு முன் வருமா… மண்வாசனை கொண்ட கிராம பாரம்பர்யத்தின் பண்பாட்டை குழி தோண்டி புதைத்துவிட்டு, பொம்மை விளையாட்டுபோல் ஜல்லிக்கட்டை இந்த மைதானத்தில் நடத்துவார்களா… இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்ற அச்சத்தோடு வாழ்கிற உலகத் தமிழர்களுக்கு  முழு விவரத்தை வெளியிடுவீர்களா?’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *