`அனைத்து மொழிகளும் என்னுடைய மொழிகள்தான்!’ – புதுவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு

1691412123302.jpg

குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் திரௌபதி முர்மு, முதன்முறையாக புதுவைக்கு இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று வந்தார். சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்த அவரை, துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். அதையடுத்து ஜிப்மர் வளாகத்துக்கு வந்த அவர், புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரூ.17 கோடியில் புதிதாக  நிறுவப்பட்டிருக்கும் புற்றுநோயாளிகளுக்கான கதிரியக்க சிகிச்சைக் கருவியை மக்களுக்கு அர்ப்பணித்தார்.

குடியரசுத் தலைவருடன் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி

தொடந்து ஜிப்மர் அப்துல் கலாம் கலையரங்கத்துக்கு வந்த அவரை, ஆளுநர் தமிழிசையும், முதல்வர் ரங்கசாமியும் வரவேற்றனர். அப்போது சிறப்புரையாற்றிய ஆளுநர் தமிழிசை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தாய்மொழியான ஒடிய மொழியில் அவரை வரவேற்றார். அதையடுத்து புதுவை வில்லியனூர் ஒதியம்பட்டு சாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஆயுஷ் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காணொளி மூலம் திறந்துவைத்தார்.

அதையடுத்து- பேசிய அவர், “புதுவைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறும்போது, இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நாட்டுக்கு முழுச் சுதந்திரம் தேவை என்ற விருப்பத்தை, `வந்தே மாதரம்’ பத்திரிகையில் வெளிப்படுத்திய இந்தியாவின் முதல் அரசியல் தலைவர்களில் அரவிந்தரும் ஒருவர். ஒடிய மொழியில் என்னை வரவேற்றாலும், இந்தப் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து மொழிகளும் என்னுடைய மொழிகள்தான்.

விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை வரவேற்ற முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி, வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு மக்களை ஈர்த்திருக்கிறது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. 350 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நிறுவினர். இந்தியாவில் பிரெஞ்சுப் பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக இருந்த துய்ப்ளே, புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களின் பெரும் கோட்டையாக மாற்ற விரும்பினார். ஆனால், பிரெஞ்சுக்காரர்களின் காலனித்துவ விருப்பத்துக்கு முற்றிலும் மாறாக, 20-ம் நூற்றாண்டில் இந்த இடத்தை ஆன்மிக ஆறுதலுக்கான சிறந்த உறைவிடமாகத் தேர்ந்தெடுத்தார் அரவிந்தர்.

புதுச்சேரியின் ஒவ்வொரு பகுதியிலும் வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. புதுவையில் மணக்குள விநாயகர், திருக்காஞ்சி கோயில்களில் தரிசனம் செய்து கடவுள்களின் ஆசீர்வாதம் பெறத் திட்டமிட்டிருக்கிறேன். புதுவையின் ஆன்மிக அம்சங்களில் யோகாவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. சர்வதேச யோகா விழா நடத்தி, யோகாவை புதுவை ஊக்குவிக்கிறது. புதுவையில் வசித்தவர்கள் சுதந்திரப் போராட்டத்தின்போது இந்திய மக்களோடு சமமாகச் செயல்பட்டனர். புதுவை சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாயகமாகத் திகழ்ந்திருக்கிறது.

விழாவில்

பாரதிதாசன் இங்கு பிறந்தவர், மகாகவி பாரதியார் இங்கே வசித்து சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார். சுதந்திரப் போராட்டத்தில் புதுவையில் தங்கி பங்கேற்ற வி.வி.எஸ்.ஐயர் சிறந்த தமிழ் அறிஞர். புதுவையின் அரசியலும், சமூகவியலும் அசாதாரணமானவை. புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களும், `மொழி வேற்றுமையில் ஒற்றுமை’ என கலாசாரத்தையும் பாராம்பர்யத்தையும் முன்னெடுத்துச் செல்கிறது. இங்கு பலதரப்பட்ட கலாசார நீரோட்டங்களின் கலவையைக் காண்கிறோம். புதுவையின் கட்டடக்கலை, திருவிழாக்கள், வாழ்க்கை முறை ஆகியவை பல்வேறு தாக்கங்களைப் பிரதிபலிக்கின்றன.

பிரான்ஸ், இந்தியாவுக்கு இடையிலான நட்புறவின் வாழும் பாலமாக புதுவை விளங்குகிறது. அளவில் சிறியதாக இருக்கும் இந்த யூனியன் பிரதேசம் மிகவும் அழகானது. சர்வதேச அளவில் புதுவை சமூக முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியறிவில் புதுவை முதலிடத்தில் இருப்பது பாராட்டுக்குரியது. புதுவையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க மேற்படிப்புக்காக வந்து செல்கின்றனர். ஜிப்மர் அப்துல் கலாம் அரங்கில் நாம் இருக்கிறோம். அவரின் பங்களிப்புகளை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

மருத்துவ நோக்கங்களுக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சியைப் பயன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜிப்மரில் திறந்துவைக்கப்பட்டிருக்கும் கதிரியக்கச் சிகிச்சை மூலம் மேம்பட்ட சேவையைப் புற்றுநோயாளிகளுக்கு அளிக்க முடியும். ஆயுஷ் மருத்துவமனை, புதுவை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புதுவை ஆன்மிகச் சுற்றுலாவுக்கு அற்புதமான இடம். புதுவையின் வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறைகொண்டிருக்கிறது. புதுவையின் சுற்றுலாவை மேம்படுத்த சுதேஷ் திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்திவருகிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *