சங்கரய்யா “தங்கய்யா”.. அழுக்கு மூட்டைக்கிடையே.. வறுமையை அழிக்க வந்த “சிவப்பு”.. கிரேட் என்.சங்கரய்யா | CPM Sr Leader and Freedom Fighter Leader Sankaraiah and turns 103nd birthday today

Newhome1 1689344705.jpg

Chennai

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

சென்னை: இடதுசாரி இயக்கத்தில் என்.எஸ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் என்.சங்கரய்யா.. இவர் இந்தியாவில் எங்கெல்லாம் தலைமறைவாக இருந்திருக்கிறார் என்று லிஸ்ட் போட்டால், அதுபாட்டுக்கு நீளும்.. அந்த அளவுக்கு நீண்டநெடிய முத்திரையை பதித்தவர் என்.சங்கரய்யா.

இவரது தாத்தா பெயர்தான் சங்கரய்யா.. இவரது பெயர் பிரதாப சந்திரன்.. ஆனால், தாத்தா பெயர்தான் தனக்கும் வேண்டும் என்று வீட்டில் அடம்பிடித்தார்.. ஸ்கூலுக்கு போகாமல் உண்ணாவிரதமும் இருந்தார்.. அதற்கு பிறகுதான், சங்கரய்யா என்று பெயர் மாறியது.

CPM Sr Leader and Freedom Fighter Leader Sankaraiah and turns 103nd birthday today

கோவில்பட்டியை சேர்ந்தவரான இவரது முதல் போராட்டமே இந்தி திணிப்பை எதிர்த்து நடந்ததுதான்.. இந்திய தேசத்தில் எந்த போராட்டம் எடுத்துக்கொண்டாலும், அங்கே சங்கரய்யாவின் பெயரும் தவறாமல் ஒலிக்கும். ஒருமுறை துப்பாக்கியைக் காட்டி போலீஸார் மிரட்டியபோதும்கூட தன்னுடைய போராட்டத்தை துணிச்சலுடன் தொடர்ந்தவர்.

தண்டனைகள்: கிட்டத்தட்ட 8 வருஷம் ஜெயில் தண்டனை.. 5 வருஷம் தலைமறைவு வாழ்க்கையென இவரது பருவம் ஓடியது.. எத்தனையோ அடக்குமுறைகளின் தடியடிக்கு ஆளானவர்.. எத்தனையோ இன்னல்களுக்கு உள்ளானவர்.. வழக்கறிஞராக வேண்டும் என்று ஆசைப்பட்ட இவரது அப்பாவின் கனவும் நொறுங்கியது.

இவரது தலைமறைவு வாழ்க்கை மிகவும் துயரமானது.. சலவை தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்த நிகழ்வும் உண்டு.. அவ்வளவு ஏன், தோல் நோய்கள் வந்தநிலையிலும் கூட டாக்டரிடம் போக முடியாத துயரத்தையும் சங்கரய்யா எதிர்கொண்டார்.

கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை 1942 ஜூலையில் நீக்கப்பட்டது. அந்த சமயம் நடந்த, மாணவர் சங்க மாநாட்டில் தமிழ்நாட்டுப் பிரிவின் பொதுச்செயலாளராகச் சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொறுப்புகள்: ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும்சரி, 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியிலும் சரி, உயர் பொறுப்புகள் சங்கரய்யாவை தேடி வந்தன. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், மத்தியக்குழு உறுப்பினர், விவசாயிகள் சங்கத்தின் தமிழக தலைவர், அனைத்திந்திய நிர்வாகி போன்ற பொறுப்புகளை அலங்கரித்தார்.. 1967, 1977, 1980 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மொத்தம் 11 வருடங்கள் எம்எல்ஏவாக தன் கடமையை செய்தார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் “ஜனசக்தி”யின் பொறுப்பாசிரியராக பணிபுரிந்திருக்கிறார்.. பிறகு தீக்கதிர் நாளிதழ் தொடங்கப்பட்டபோது, நெருப்பு எழுத்துக்களில் பல கட்டுரைகளை எழுதினார்.. இறுதியில், அதன் ஆசிரியருமானார்.

திரளும் கூட்டம்: சங்கரய்யா கூட்டங்களில் பேச போகிறார் என்றாலே, மொத்த இளைஞர்களும் திரண்டு வந்துவிடுவார்களாம்.. இவர் பேச பேச, இளைஞர் கூட்டத்துக்கும் நரம்புகள் புடைக்குமாம்.. அதுமட்டுமல்ல, பொதுக்கூட்டங்கள் என்றாலே சங்கரய்யாவிடம் சொல்லிதான் ஏற்பாடு செய்ய சொல்லுவாங்களாம்.. காரணம், கட்சி கொள்கைகளின் பாடல்களை பாட வைத்தே, கூட்டத்தை ஆயிரக்கணக்கில் திரட்டி விடுவாராம்.

CPM Sr Leader and Freedom Fighter Leader Sankaraiah and turns 103nd birthday today

எந்த மேடை ஏறினாலும், சாதி மறுப்புத் திருமணங்களை பற்றிதான் அதிகமாக இவர் பேசுவார்.. “குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்பு வரலாம்.. விரோதம் வரும்… ஆனாலும் சாதி மதம் பார்க்காமல் உங்கள் வீட்டு பெண்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்” என்று ஓயாமல் வலியுறுத்தி கொண்டே இருந்தவர்.. அதை தன் வீட்டிலேயே நடத்தியும் காட்டியவர்.
தொழிலாளர் நலன்களில் சங்கரய்யா போல அக்கறை காட்டியவர் வேறு யாரு இருக்க முடியாது.. உழைக்கும் வர்க்கத்தின்மீது ஓயாமல் பாசத்தை பொழியவிட்டவர்..

எம்ஜிஆர்: இவர் மீது மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆருக்கும், கருணாநிதிக்கும் தனிப்பட்ட பாசம் உண்டு. இதில் கலைஞருடனான நட்பி அலாதியானது – ஆழமானது..

கூட்டணியில் இல்லாதபோதும்சரி, இவர்கள் 2 பேரின் நட்பு வானமே எல்லையாய் விரிந்து கிடந்தது.. கருணாநிதி அமைச்சராக இருந்தபோதிருந்தே, சங்கரய்யாவின் பல கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திருக்கிறார்.. முதல்வரான பிறகு, சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டங்களை கொண்டுவந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சங்கரய்யாதான்.

கலைஞர் கருணாநிதி: கலைஞரைவிட, சங்கரய்யா 3 வயது மூத்தவர்.. ஆனால் மிகுந்த பற்று உள்ளவர்.. ஒருமுறை கருணாநிதி பேசும்போது, “திராவிட இயக்கம் என்ற ஒன்று தோன்றாமல் இருந்திருந்தால்.. பெரியார் பிறக்காமல் இருந்திருந்தால்.. அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால்.. நான் நல்லகண்ணு பக்கத்திலும், சங்கரய்யா பக்கத்திலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவராக உட்கார்ந்திருப்பேன்” என்று நெஞ்சுயர்த்தி சொன்னார்.

அதேபோலதான் சங்கரய்யாவும் ஒரு பேட்டியில் சொல்கிறார், “ஜூலை 15-ம்தேதி எனக்கு பிறந்தநாள்.. அன்னைக்கு காலைல 6 மணிக்கு எனக்கு ஒரு போன் தவறாமல் வந்துவிடும்.. அது நிச்சயம் கருணாநிதியிடமிருந்து வரும் போனாகத்தான் இருக்கும்… நானே அதை நிறைய நேரத்தில் மறந்துடுவேன்.. ஆனால், அவர் என் பிறந்தநாளை மறந்ததில்லை.. அவருக்கு உடம்பு சரியில்லாததில் இருந்து அவரிடமிருந்து போனே வரவில்லை” என்று நா தழுதழுக்க சொல்லியிருந்தார்.

கருணாநிதி: கருணாநிதி மறைந்தபோது சங்கரய்யாவில் ஜீரணிக்கவே முடியவில்லை.. நிலைகுலைந்து போய்விட்டார்.. அந்த நேரத்தில், அவரால் அஞ்சலி செலுத்தவும் போக முடியவில்லை.. வீட்டில் இருந்து கொண்டு, கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்த்து, வழிந்தோடும் கண்ணீரை துடைத்து கொண்டேயிருந்தார்.. திடீர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு நாற்காலியில் இருந்து எழுந்து எழுந்து உட்கார்ந்து கைகளை உயர்த்தி உயர்த்தி காட்டினார்.

முகமெல்லாம் சோகம் வடிந்து நின்றது. கண்களிலிருந்து சங்கரய்யாவுக்கு தண்ணீர் வழிந்தோடி வந்தது… அடக்க முடியாமல் அழுது கொண்டு, கண்ணீரை தன் கைகளால் துடைத்துக் கொண்டே இருந்தார்.. அந்த உணர்ச்சி பெருக்கின் தருணம் மறக்க முடியாதது.. நெகிழ்வின் பிணைப்பு அது.. பாசத்தின் அதிதீவிரம் அது.. நட்பின் உச்சக்கட்ட அடர்த்தி அது..!

கடந்த 2021-ல் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய, தகைசால் தமிழர் விருது நிதியான ரூ.10 லட்சத்தை, தமிழ்நாடு அரசுக்கே கொரோனா நிதியாக, திரும்ப வழங்குவதாக அறிவித்த குணாளன் சங்கரய்யா.

வகுப்புவாதம்: சங்கரய்யாவுக்கும் ஒரு ஆசை உண்டு.. அதை அவரே பலமுறை சொல்வார்.. “எனக்கு ஒன்னுதான் ஆசை… இன்றைய வகுப்புவாத, பிற்போக்கு சக்தியை எதிர்த்து போராடணும்.. எப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் போராடினாங்களோ, அதே போல போராடணும்.. சோஷலிசம் தவிர வேறு எந்த சமூக அமைப்பினாலும் இது முடியாது.. மார்க்ஸ் தான் ஒரே தீர்வு.. வேற வழியேயில்லை” என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி உள்ளார் சங்கரய்யா..!

தோழர் சங்கரய்யாவுக்கு இன்று 102வது பிறந்தநாள்..!!

சமூக வேள்வியில் சிக்கி, மீண்டு வர முடியாமல் தகித்து கிடக்கும் மக்களை விடுவிக்க ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விடிவெள்ளிகள் தோன்றுவார்கள்.. அப்படிப்பட்ட விடிவெள்ளிகளில் நமக்கு கிடைத்த ஒருவர்தான் தோழர் சங்கரய்யா!

மார்க்ஸ்: “வரலாறு என்பதே வர்க்க போராட்டங்களின் தொகுப்புதான்” என்கிறார் மார்க்ஸ்.. அப்படி ஒரு வரலாறைதான் என்.சங்கரய்யாவும் வாழ்ந்து வருகிறார்.. இந்த மண்ணில், மார்க்சிய இயக்கம் மகத்துவம் பெறும் என்றால், அது சங்கரய்யா போன்ற தோழர்களின், ரத்தத்தாலும், சதையாலும், நாடி நரம்பாலும் என்பதில் சந்தேகமே இல்லை..!

English summary

CPM Sr Leader and Freedom Fighter Leader Sankaraiah and turns 103nd birthday today

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *