தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியை பெண்களுக்கு ஒதுக்க திமுக முடிவா?! – ரேஸில் யார் யார்?!

Whatsapp Image 2024 02 27 At 15 34 14.jpeg

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விறுவிறுப்புகள் சூடு பிடிக்க தொடங்கி விட்டன. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் காட்டி வரும் மும்முரம் அனல் பறக்கின்றன. நாம் தழிழர் கட்சி எப்போதும் போல் பல தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி, போட்டியிடப்போகும் தொகுதிகள் முடிவுக்கு வந்தும் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்

கூட்டணி பேச்சு வார்த்தை நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, தி.மு.க, அ.தி.மு.க-வில் விருப்ப மனுக்கள் பெறுவதில் அக்கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டினர். தொகுதியை கைப்பற்றி வேட்பாளர் ஆகிவிட வேண்டும் என திரைமறைவில் காய் நகர்தல்களில் வேகம் காட்டினர். குறிப்பாக தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க-வில் சீட்டை பெறுவதற்கான ரேஸில் ஏராளமானவர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.

சிட்டிங் எம்.பி., எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, முரசொலி, எல்.ஜி.அண்ணா, முன்னாள் அமைச்சர் மறைந்த அழகு.திருநாவுக்கரசு மகன் டாக்டர் சண்முகராஜா, சூர்யா வெற்றிக்கொண்டான், பெண்களான துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, பேராசிரியர் ராதிகா மணிமாறன் என பட்டியல் நீள்கின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்குத்தான் சீட் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் நடைபோடுகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பெண் ஒருவரை வேட்பாளாராக நிறுத்துவதற்கு தி.மு.க தலைமை முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்

இது குறித்து தி.மு.க வட்டத்தில் சிலரிடம் பேசினோம், “தஞ்சாவூர் தொகுதியின் சிட்டிங் எம்.பியான பழநிமாணிக்கம் சீனியர். ஏற்கனவே ஒன்பது முறை போட்டியிட்டிருக்கிறார். தற்போது சீட் கிடைத்தால் பத்தாவது முறை போட்டியிடப்போறவர் என்ற சிறப்பை பெறுவார். அவரும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன்னுடைய ஆதரவாளர்களை களத்தில் முடுக்கிவிட்டுள்ளார். ஆனால் தலைமையின் எண்ணம் வேறு மாதிரியாக இருப்பதாக தெரிகிறது.

தொடர்ந்து ஒருவருக்கு சீட் கொடுப்பது கட்சிக்குள் அலுப்பை ஏற்படுத்தும் என கருதுகிறது. அதனால் இந்த முறை புது முகத்தை களம் இறக்கலாம் என நினைக்கிறது. உதயநிதி இதற்கான முன்னெடுப்பை செய்கிறார் என்கிறார்கள். தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக யார் நின்றாலும் எளிதாக வெற்றி பெறலாம் என்பதே தலைமையின் எண்ணம். இதை பயன்படுத்தி புதியவர்களை களமிறக்க நினைக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என தலைமை முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

பழஞ்சூர் செல்வம்

இந்த தகவல் தஞ்சாவூர் தி.மு.கவினருக்கு ஆச்சர்யாமகத்தாக் உள்ளது. எனினும் கட்சித் தலைமை தமிழகம் முழுவதும் 8 தொகுதிகளில் பெண்களை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளது. அதில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்று. இதையறிந்து துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மன்னார்குடியை சேர்ந்த பேராசிரியர் ராதிகா மணிமாறன் ஆகிய இருவருக்குமிடையே தொகுதியை கைப்பற்ற பலத்த போட்டி நிலவுகிறது.

அரசு மருத்துவராக இருந்த அஞ்சுகம் பூபதி, அந்த வேலையை உதறி விட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உட்கட்சி சூழ்நிலையால் தோல்வியை தழுவியர். இவருடைய அப்பா மறைந்த பூபதி, கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர். அந்த குடும்ப உறவு இப்போதைய தலைமுறை வரை தொடர்கிறது.

டாக்டர் அஞ்சுகம் பூபதி

அஞ்சுகத்தை தஞ்சாவூர் மாநகராட்சி மேயராகக்க நினைத்தார் ஸ்டாலின். ஆனால் அந்த வாய்ப்பு கை நழுவி போக சண்.இராமநாதன் மேயர் ஆனார். அதை மனதில் வைத்திருக்கும் ஸ்டாலின் அஞ்சுகத்திற்கு வாய்ப்பளிக்கலாம் என நினைக்கிறார். ஆனால் உதயநிதி, ராதிகா மணிமாறனை களமிறக்கலாம் என கருதுவதாக தெரிகிறது. மதுக்கூர் அருகே உள்ள சொக்கனாவூர் கிராமத்தை சேர்ந்த ராதிகா மணிமாறன் மன்னார்குடியில் வசிக்கிறார். இவருடைய கணவர் மணிமாறன் லண்டலின் தொழில் செய்து வருகிறார். பாரம்பர்யமான தி.மு.க குடும்பத்தை சேர்ந்தவர்.

அரசுக் கல்லூரியில் பேரசிரியராக இருக்கும் ராதிகா, சமூக சேவகராக அறியப்பட்டவர். 26 கோவில்களுக்கு திருப்பணி செய்து குட முழுக்கு நடத்தியிருக்கிறார். ஏழை மாணவர்கள் பலருக்கு கல்வி உதவி செய்து வருகிறார். முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் 400 நபர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி தி.மு.க நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தினார்.

பேராசிரியர் ராதிகா மணிமாறன்

முதல் ஆளாக சென்று விருப்ப மனு வாங்கியதன் மூலம் தலைமையின் ஆசி இவருக்கு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசுகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஸ், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமை யாரை வேட்பாளராக கை காட்டினாலும் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு வாக்குகளை பெற்றுத்தருவோம் என்றனர். இதன் மூலம் தஞ்சாவூர் தொகுதியில் புதுமுகத்தை களமிறக்க்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது” என்றனர். அந்த புதுமுகம் யார்? இன்னும் சில நாள்களில் தெரிந்து விடும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *