“அந்த தகவல் கமலாலயத்திலிருந்து வந்திருக்கும்..!” – துரை வைகோ காட்டம்

Durai Vaiko.jpg

மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சார்பில் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை. கூட்டம் தொடங்கும் போதே தேசிய கீதம் பாடவில்லை என கூறுவது முரண்பாடான விஷயம். சட்ட சபை மரபின்படி தமிழ் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கும். முடியும் போது தான் தேசிய கீதம் பாடப்படும். கடந்த முறை சட்ட சபையில் தேசிய கீதம் வாசிக்கும் முன்பாக ஆளுநர் மதிக்காமல் சென்றார். அதேபோல், சென்ற முறை அவர் ஆற்றிய உரையில் காமராஜர், அண்ணா, தந்தை பெரியார், அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களைத் தவிர்த்து விட்டு வாசித்தார்.

சட்டப்பேரவை | வெளியேறிய ஆளுநர் ரவி

அவர் தான் மரபை மீறி நடந்து கொண்டார். தமிழ்நாடு அரசுக்கு இடைஞ்சல் கொடுப்பது தான் அவரின் வேலையாக இருக்கிறது. இனி, வரக்கூடிய காலங்களில் ஆர்.எஸ்.எஸ் கொடி ஏற்றி ஆர்.எஸ்.எஸ் ஸ்லோகம் வாசிக்க சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை. ஆர்.என்.ரவிக்கு ஆளுநருக்கான தகுதி இல்லை. ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்பு செயலாளராக இருக்க தான் அவருக்கு தகுதி இருக்கிறது. மத்திய அரசு பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு இணை அரசை நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். கூட்டணியின் சார்பில் தான் போட்டியிடுவோம். மதவாத பா.ஜ.க அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். தி.மு.க கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழு திருப்திக்கரமாக தான் நடந்தது. எங்கள் கட்சியில் ஒரு மக்களவை உறுப்பினரும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் இருக்கிறார்கள். தற்போது கூடுதலாக ஒரு மக்களவைக்கு தொகுதியில் சீட்டு கேட்டு இருக்கிறோம். திருச்சியில் நான் போட்டியிடுவது குறித்து எங்கள் கூட்டணி தலைமை முடிவெடுக்கும்.

இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார் தவிர மற்ற அனைத்து கட்சியும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒருசில மாநிலங்களில் சில கட்சிகள் இடையே முரண்பாடு இருக்கிறது. ஆனால், குறைந்தபட்ச புரிந்துணர்வுடன் தேர்தலை சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

துரை வைகோ

400 -க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க-வினர் பேசி வருகிறார்கள். அவர்கள் ஓட்டு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணமே தவிர, மாநில அரசு அல்ல. மதத்தை வைத்து அவர்கள் அரசியல் செய்வதை மக்கள் புரிந்து கொண்டார்கள். அதனால், பா.ஜ.க வெற்றி பெறாது. பா.ஜ.க-வை வீழ்த்தி இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தனிப்பட்ட முறையில் தேர்தல் அரசியலில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், ஓர் அரசியல் கட்சியில் பயணிக்க உரிய நிலையில் தேர்தல் அரசியலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நான் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து கட்சி தலைமை கூட்டணி தலைமை முடிவு செய்யும்.

திமுக, தங்களின் கூட்டணி கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் நிற்க வைக்க உள்ளதாக தகவல் வருவதாக நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். அந்த கேள்விக்கு என்னுடைய பதில் என்னவென்றால், அந்த தகவல் கமலாலயத்திலிருந்து வந்திருக்கும். சென்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால், இந்த முறை தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது தான் கட்சியினர் விருப்பமாக இருக்கிறது. தி.மு.க-விடமும் அதுகுறித்து வேண்டுகோள் விடுத்துள்ளோம். கூட்டணி தலைமை நல்ல முடிவெடுப்பார்கள்.

தனி சின்னத்தில் போட்டியிட அனுமதி தருவார்கள் என்கிற முழு நம்பிக்கையோடு இருக்கிறோம். தமிழ்நாடு சூழல் குறித்து அனைவருக்கும் தெரியும். அதனால் தான் இங்கு அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வட இந்தியாவில் பா.ஜ.க வெற்றி பெறும் என்கிற கார்த்தி சிதம்பரம் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தியா கூட்டணியில் அனைத்து மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளும் இருக்கிறார்கள். ஆனால், இந்திய கூட்டணியை சேர்ந்தவர்கள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள் என பா.ஜ.க-வினர் பேசி வருகிறார்கள். மதத்தை வைத்து பிரிவினை பேசும் அவர்களின் கருத்துக்களை கடந்து தான் செல்ல வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *