Zombie Virus: 48,500 ஆண்டுகள்… `பனியில் உறைந்து கிடக்கும் பேராபத்து!' – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

2.png

உலகம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அழிவுகளைச் சந்தித்திருக்கிறது. அதில் குறிப்பிடும்படியானது 2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று. அதுதான் வைரஸ் பற்றிய விழிப்புணர்வையும், அச்சத்தையும் மக்களுக்கு மத்தியில் அதிகரித்தது. கொரோனா தொற்றின் பாதிப்பு இன்றளவும் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஆர்க்டிக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் பனிக்கட்டிகளுக்கு அடியில், செயலற்ற நிலையில் வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

வைரஸ்

இந்த வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவரும் Aix-Marseille பல்கலைக்கழகத்தின் மரபியல் நிபுணர் ஜீன்-மைக்கேல் கிளவேரி, “ரஷ்யாவில் உள்ள சைபீரியன் பெர்மாஃப்ரோஸ்டில் பகுதியிலிருந்து, சில வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வைரஸ் மாதிரியை ஆய்வு செய்ததில் அது 48,500 ஆண்டுகள் பழைமையான `ஜோம்பி வைரஸ்’ எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ்கள் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் மனிதர்களுக்கு நோய்களை உருவாக்கும் நோய்க்கிருமிகளான போக்ஸ் வைரஸ்கள் மற்றும் ஹெர்பெஸ் வைரஸ்களின் மரபணுக்களுடன் இவை இணைந்து செயல்பட்டால், பெரும் அழிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆர்க்டிக் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பெர்மாஃப்ரோஸ்ட் பனிப்பிரதேசங்கள், குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், ஆக்ஸிஜன் இல்லாமலும் இருக்கிறது.

வைரஸ்

அதனால், பழங்கால வைரஸ்களுடன் அழிந்துபோன உயிரினங்களின் எச்சங்கள், அந்தப் பகுதியில் பாதுகாப்பாக இருக்கின்றன. நீங்கள் தயிரை அந்தப் பகுதியில் வைத்துவிட்டு, 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து பார்த்தாலும், அது உண்ணும் பதத்திலேயே கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் தற்போதைய சூழலில், சராசரி புவி வெப்பமடைதல் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதனால் ஏற்படும் பனி உருகுதல் நிலையால், அந்த வைரஸ்கள் வெளிப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுவருகிறது. இந்த வைரஸ்களின் தொற்று ஏற்பட்டால், பூமியின் தென் பகுதிகளில் தொடங்கி, வடக்கு நோக்கி அதன் பாதிப்பு தொடரும்” எனக் குறிப்பிட்டு எச்சரித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *