“பாஜக-வைத் தமிழ்நாட்டுக்கு அடையாளம் காட்டியதே கருணாநிதியின் குடும்பம்தான்" – கொதித்த கே.சி.வீரமணி

Whatsapp Image 2024 01 06 At 3 08 58 Pm.jpeg

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியிலுள்ள சாதிக்பாட்ஷா நகர், எம்.ஜி.ஆர் நகர், கருணாநிதி நகர் ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 353 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். மின் இணைப்பு, குடிநீர் வசதி, சிமென்ட் ரோடு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, இங்கு வசித்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவையும் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதியில் வசித்த அனைவருமே தினக்கூலித் தொழிலாளர்களாக மிகவும் வறுமையில் இருந்தவர்கள்தான். இந்த நிலையில், ‘நீர்நிலைப் புறம்போக்கு’ எனக் காரணம் காட்டி, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகம், குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது.

சாதிக்பாட்ஷா நகர்

அதன்படி, கடந்த 2022 ஜூன் மாதம் 21-ம் தேதி அங்கு வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மாற்று இடம் வழங்கப்படாததால், வீடுகளை இழந்த மக்கள் அகதிகளைப்போல கண்ணீரும் கம்பலையுமாக குழந்தை குட்டிகளுடன் எங்குச் செல்வது எனத் தெரியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள். 713 நாள்களாகியும் இன்று வரை மாற்று இடம் வழங்கப்படவே இல்லை. வீடுகளை இழந்த மக்கள் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், சாதிக்பாட்ஷா நகர் விவகாரத்தை அ.தி.மு.க கையிலெடுத்தது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதியன்றே… இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க அரசுக்கெதிரான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்துதான், வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி… ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையிலான அ.தி.மு.க-வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன உரையாற்றுவதற்காக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அழைக்கப்பட்டிருந்தார். வீடுகளை இழந்த மக்களும் பங்கேற்றனர்.

அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் பேசுகையில், ‘‘இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் போலீஸாரிடம் அனுமதி கேட்டபோது… ‘இன்று போய் நாளை வா..’ என அலைக்கழித்தனர். என்னை வீட்டுக்காவலில் வைக்கவும் திட்டம் போட்டிருந்தார்கள். வீடுகளை இழந்த மக்களையும் போராட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுக்க முயன்றனர். தி.மு.க கூட்டணியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் எதாவது சாதிக்பாட்ஷா நகர் விவகாரத்தில் உதவி செய்தார்களா?. இல்லை. எப்போதுமே… எதையும் எதிர்பார்க்காத அ.தி.மு.க-தான் மக்களுக்காக உடன் நிற்கிறது. தி.மு.க-வினருக்குச் சொந்த புத்தி கிடையாது.

அமைச்சர் துரைமுருகனின் உறவினர் என்று சொல்லிக்கொண்ட செந்தில்ராஜன் என்பவர்தான் சாதிக்பாட்ஷா நகர் குடியிருப்பகளை அகற்றக் காரணமானவர். அவரின் கம்பெனிக்கு வழிக் கிடைக்கவே, நீர்நிலை ஆக்கிரமிப்பு என வழக்குப் போட்டார். வீடுகளை இழந்த ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கைந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே இழுத்து தெருவில் போட்டுவிட்டீர்களே… நியாயமா?’’ என்றார்.

கே.சி.வீரமணி

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘தி.மு.க பொய் பிரசாரம் செய்ததன் காரணமாக சிறுபான்மையின மக்கள் ஏமாற்றமடைந்துவிட்டார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி வீடுகளை இடித்தீர்கள். உத்தரவுக்கு நாம் எல்லோருமே அடிப்பணிய வேண்டும். அதேசமயம், ‘மாற்று இடம் வழங்கிவிட்டுதான் அவர்களை அப்புறப்படுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் சொன்னதே… அதைச் செய்தீர்களா?. தி.மு.க-வினருக்குப் பாவம், புண்ணியம் தெரியாது. பா.ஜ.க என்ற இனவெறி கட்சியோடுச் சேர்ந்துகொண்டு, பொய் பிரசாரத்தை முன்னிறுத்துகிறார்கள். பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டுக்கு அடையாளம் காட்டியதே கருணாநிதியின் குடும்பம்தான். காலச்சூழல் காரணமாக அ.தி.மு.க சிறிதுகாலம் பா.ஜ.க-வுடன் இருந்தது. அதற்காக நம்முடைய உரிமையை விட்டுக்கொடுத்தோமா. என்ன குறைகளை கண்டுபிடித்தீர்கள். எதை விட்டுக்கொடுத்தோம். ‘பா.ஜ.க-வுடன் இனி ஒட்டுமில்லை; உறவுமில்லை’ என எடப்பாடியார் தெளிவாகச் சொல்லிவிட்டார். சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பாக இருப்போம்’’ என்றார் கொதிப்போடு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *