`Hit & Run' – திருத்தப்பட்ட தண்டனைச் சட்டம்.. போராட்டத்தில் இறங்கிய லாரி ஓட்டுநர்கள் – பின்னணி என்ன?

Gc0dnetw8aaiqth.jpeg

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் என்பது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மிக முக்கியமான கூட்டத்தொடராக அமைந்திருக்கிறது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 140-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. மற்றொன்று, ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்டு, நூற்றாண்டுக்கும் மேலாக நடைமுறையில் பின்பற்றப்பட்டு வரும் குற்றவியல் சட்டங்களில் பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் திருத்தங்கள்.

இந்திய நாடாளுமன்றம்

அடிப்படையில், முதலில் இந்தக் குற்றவியல் சட்டங்களின் பெயர்களிலேயே திருத்தம் கொண்டுவந்திருக்கிறது பா.ஜ.க. இந்திய தண்டனைச் சட்டம் (1860) என்பதை `பாரதிய நியாய சன்ஹிதா’ எனவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1898) என்பதை ‘பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா‘ எனவும், இந்திய சாட்சியச் சட்டம் (1872) என்பதை ‘பாரதிய சாட்சிய அதினியம்’ எனவும் பா.ஜ.க அரசு மாற்றியிருக்கிறது. இந்த நிலையில், இந்திய தண்டனைச் சட்டமான புதிய பாரதிய நியாய சன்ஹிதாவில் `ஹிட் அண்ட் ரன் (Hit-And-Run)’ பிரிவில் அரசு கொண்டுவந்திருக்கும் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய அளவில் லாரி ஓட்டுநர்கள் மூன்று நாள்கள் போராட்டத்தை நேற்று ஆரம்பித்திருக்கின்றனர்.

முன்பிருந்த இந்திய தண்டனைச் சட்டத்தின் ஹிட் அண்ட் ரன் பிரிவில், சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் கொல்லப்பட்டால், ஓட்டுநருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் கொல்லப்பட்டால் ஓட்டுநருக்கு அபராதத்துடன் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம். அதுமட்டுமல்லாமல், குற்றவாளி தப்பித்துவிட்டாலோ அல்லது சம்பவம் குறித்து உடனடியாகப் புகாரளிக்கத் தவறினாலோ 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

லாரி ஓட்டுநர்கள் போராட்டம்

இதன் காரணமாகத்தான், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிர, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், அந்தந்த மாநிலங்களில் வாகனப் போக்குவரத்தும், எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டன. பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகன ஓட்டிகள் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்தப் போராட்டம் குறித்து பேசியிருக்கும் அகில இந்திய மோட்டார் மற்றும் சரக்கு போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ராஜேந்திர கபூர், “எங்கள் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை. இதுபற்றி யாரிடமும் எந்த விவாதமும் நடத்தவில்லை, யாரிடமும் கேட்கவுமில்லை. முன்னதாக கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் நடந்திருக்க வேண்டும். அதனால், அகில இந்திய மோட்டார் மற்றும் சரக்கு போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மோசமான சூழ்நிலை தற்போது உருவாகியிருக்கிறது. புதிய சட்டம் பற்றி மக்களுக்கு முழுமையாகத் தெரியாது. இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்று ஊடகத்திடம் கூறினார். அதேபோல், மகாராஷ்டிராவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் டேங்கர் லாரி டிரைவர் ஒருவர், “புதிய சட்டத்தின்படி, ஹிட் அண்ட் ரன் வழக்குகளில் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஓட்டுநராகிய நாங்கள், எப்படி இவ்வளவு பெரிய அபராதத் தொகையை செலுத்த முடியும்” எனக் கேள்வியெழுப்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *