NLC: `நாட்டைப் பிரிக்காதீர்கள்!' – `ஏன் வேலி அமைக்கவில்லை?' – நீதிமன்றத்தில் அனல்பறந்த விவாதம்!

Cor1.jpg

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் உள்ள வளையமாதேவி, மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் இன்று உயர் நீதிமன்றத்தில் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தன்னுடைய மனுவில், “என்.எல்.சி நிறுவனத்துக்காக 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் எனது நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளாக அந்த நிலத்தைப் பயன்படுத்தாமல், தற்போது நெல் பயிரிடப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 26-ம் தேதி கால்வாய் வெட்டுவதாகக் கூறி, பயிர் விளைந்து நிற்கும் நிலத்தில் புல்டோசர்களை வைத்து நாசப்படுத்தியிருக்கின்றனர். என்னுடைய நிலம் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் 50,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்படுகிறது.

பாடுபட்டு மேற்கொள்ளப்பட்ட விவசாயத்தையும், எங்களது வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை சுவாதீனம் எடுக்கின்றனர். நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு, செட்டில்மென்ட் உரிமைச் சட்டத்தின் 101-வது பிரிவு என்பது, குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தை 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தாவிட்டால், உரியவரிடம் அந்த நிலத்தை திருப்பிக் கொடுக்க வகைசெய்வதால், அதன்படி எனது நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். நிலத்தில் அறுவடையை முடிக்கும்வரை எங்களது அனுபவ உரிமையில் தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

என்.எல்.சி

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு, வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி முறையிட்டார். அதனை ஏற்ற நீதிபதி, இன்று பிற்பகலில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்த வழக்கறிஞர் பாலு, “இந்தப் பிரச்சனையால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது” எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட என்.எல்.சி தரப்பு வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “நண்பர் பாலு கடலூரில் பதற்றமான சூழல் நிலவுவதாகக் கூறுகிறார். அவரது கட்சியினரால்தான் பதற்றம் ஏற்படுகிறது. இதை அரசியலாக்குகின்றனர். நிலம் எப்படி கையகப்படுத்தப்பட்டது, எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை நாளையே அறிக்கையாக தாக்கல் செய்கிறோம்” என்றார். 

கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எவ்வளவு ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது என்ற நீதிபதியின் கேள்விக்கு, “விவசாயமே நடைபெறவில்லை” என என்.எல்.சி தரப்பு கூற, “அப்படியெனில், ஊடகங்களில் வெளியான புகைப்படத்தை நீங்கள் பார்க்கவில்லையா… எப்படி விவசாயமே நடைபெறவில்லை என்று கூறுகிறீர்கள்… விவசாய நிலத்தை சேதப்படுத்தினீர்களா… இல்லையா என்பதே என் கேள்வி. நிலத்தைக் கையகப்படுத்திவிட்ட பின்னர், ஏன் அவர்களை விவசாயம் செய்ய அனுமதித்தீர்கள்… இரும்பு வேலி அமைத்திருக்க வேண்டியது தானே?” என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பல கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு, “என்.எல்.சி-க்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளதால், அது சாத்தியப்படவில்லை” என விளக்கமளிக்கப்பட்டது. அதையடுத்து, “அப்படியெனில், குறைந்தபட்சம் வெளி நாடுகளில் உள்ளதுபோல், நீங்கள் மேற்பார்வையாவது செய்திருக்கலாமே. நீங்கள் பயன்படுத்தாததால்தானே அவர்கள் விவசாயம் செய்தார்கள்” என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்றம்

என்.எல்.சி தரப்பில், “2012-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அன்று, நில உரிமையாளர்களின் இசைவோடு நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவசரத் தேவைக்காக நிலம் பயன்படுத்தப்படும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஜனவரிக்குப் பிறகு அறுவடை செய்த பிறகே நிலம் கையகப்படுத்தப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால், ஜனவரிக்குப் பிறகும், இழப்பீடு வழங்கப்பட்ட பிறகும் நில உரிமையாளர்கள் விவசாயம் செய்திருக்கின்றனர்” என என்.எல்.சி தரப்பு வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார்.

மேலும், “நில உரிமையாளர்கள் விருப்பப்பட்டால் தற்போது விளைவிக்கப்பட்டிருக்கும் பயிர்களுக்குக்கூட இழப்பீடு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதில் தாமதமானால் மின் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 5 ஆண்டுகள் பயன்படுத்தாவிட்டால் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற சட்டத்தில் New industrial act-படி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது” எனவும் என்.எல்.சி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

அவரைத் தொடர்ந்து, “என்.எல்.சி நிர்வாகத்தில் வட இந்தியர்களே அதிகம் வேலை பார்க்கிறார்கள். உறுதி அளித்தபடி தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை” என வழக்கறிஞர் பாலு வாதிட்டார். அதற்கு, “தமிழர்கள் பலர் பெங்களூரு ஐ.டி துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே, வட இந்தியா, தென் இந்தியா என்று நாட்டைப் பிரிக்காதீர்கள்” எனத் தெரிவித்த நீதிபதி, “அரசியல் என்பது நம் நாட்டில் தவிர்க்க முடியாதது. நீங்கள் அரசியல்ரீதியான காரணங்களை முன்வைப்பதை நான் தடுக்கவில்லை” என வழக்கறிஞர் பாலுவிடம் தெரிவித்தார். அப்போது அரசு தரப்பில், “இது வேலை வாய்ப்பு குறித்த வழக்கு அல்ல” என குறுக்கீடு செய்யப்பட்டது.

வழக்கறிஞர் பாலு

இதைத் தொடர்ந்து, “மின்சார தட்டுப்பாடு என்பது அரசுக்கும் என்.எல்.சி-க்குமான தொழில்நுட்ப விவகாரம்” எனக் குறிப்பிட்ட நீதிபதி, “வாய்க்கால் போகும் இடம் தவிர, மற்ற இடத்தில் விவசாயம் பாதிக்கப்படாது என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும். சம நிலையுடன் யோசிக்க வேண்டும். நாளைக்கே வெள்ளம் வந்தால் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியுமா?” என்றும் வழக்கறிஞர் பாலுவை நோக்கி கேள்வி எழுப்பினார். 

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், “நீதிமன்றம் உணர்வுகளை வைத்து மட்டும் முடிவெடுக்க முடியாது. எது சரியான அணுகுமுறை என்பதை வைத்தே முடிவுசெய்ய முடியும்” என்ற நீதிபதி, “வருங்காலங்களில் இது போன்ற விவகாரங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வராத அளவுக்கு என்.எல்.சி பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்.எல்.சி

குறைந்த பட்சம் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும். அதே நேரம், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு விரைவில் இழப்பீடு கிடைப்பதை உறுதிசெய்கிறோம். பயிர் சேதம் குறித்து புதன்கிழமைக்குள் என்.எல்.சி, அரசு தரப்பு விளக்கமளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

மேலும், தற்போதைய பயிர் சாகுபடிக்குப் பிறகு நில உரிமையாளர்கள் விவசாயம் செய்யக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *