மணிப்பூர்: "நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடிப் பெண்கள் அல்ல, பாரதத் தாய்; நாட்டுக்கே தலைகுனிவு"- சீமான்

Whatsapp Image 2023 07 20 At 4 02 13 Pm.jpeg

பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் குக்கி மற்றும் மைதேயி சமூகத்தினரிடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரம் ஓயாமல் பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், குக்கி சமூக பெண்கள் இருவரை ஆண்கள் கூட்டமொன்று நிர்வாணமாக்கி சாலையில் இழுத்துச்செல்லும் வீடியோ தற்போது மனிதத்தையே எரித்துக்கொண்டிருக்கிறது.

மணிப்பூர் – மோடி

இந்தச் சம்பவம் மே 4 அன்று அரங்கேறிய நிலையில், தற்போது வீடியோ பரவிக்கொண்டிருக்கிறது. இதனைப் பார்க்கையில், உண்மையிலேயே மணிப்பூர் மாநில அரசு ஒடுக்கப்பட்டவர்களுக்காகத்தான் செயல்படுகிறதா என்று சந்தேகத்தை எழ வைத்திருக்கிறது. இன்னொருபுறம் வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் இது விவாதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கண்டங்களைத் தெரிவித்த பிறகு, `மணிப்பூர் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்’ என்று முதல்முறையாக மோடி வாய்திறந்தார். இதற்கிடையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “அரசு இதில் நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்தினால் நாங்கள் இதில் தலையிட நேரும்” என்று எச்சரித்தார். அதையடுத்து உடனடியாக, இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி கைதுசெய்யப்பட்டதாக, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அறிவித்தார்.

இவ்வாறிருக்க, `மணிப்பூரில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல, பாரதத் தாய்’ என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “பா.ஜ.க ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் இருவர் பெரும்பான்மை மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் இழுத்துச்செல்லப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.

சீமான்

ஒரு பழங்குடி பெண்ணை இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆக்கிவிட்டதாகப் பெருமை பேசிய பா.ஜ.க இரண்டு பழங்குடி பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ள மனச்சான்றற்ற அநீதிக்கு என்ன பதில் கூறப்போகிறது? கண்முன்னே சக மனிதர்களுக்கு நிகழ்த்தப்படும் சிறிதும் மனிதத் தன்மையற்ற இதுபோன்ற கொடுமைகளை அனுமதித்துவிட்டு, நிலவுக்கு செயற்கோள் அனுப்பியதை அறிவியல் வளர்ச்சி என்று இந்த நாகரீக நாடு கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் மோடி கண்டுபிடித்த புதிய இந்தியாவா?

மோடி

இந்தியாவில் மத, சாதி பாகுபாடுகள் இல்லையென்று கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி இப்போது வாய் திறப்பாரா? மல்யுத்த வீராங்கனைகள் முதல் பழங்குடியின பெண்கள் வரை பா.ஜ.க ஆட்சியில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல, பாரதத் தாய் தான். பழங்குடியின மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து கட்டுக்கடங்காத கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *