`சூர்யா, ஜெய்பீம் நிஜ நாயகர்களை உருவாக்க முன்வந்தது பெரிய விஷயம்!' – நீதியரசர் சந்துரு பேட்டி

476207a2 0a06 4cd5 909e 4a344ce84e6a.jpg

ஏழை, எளிய சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘சத்யதேவ் லா அகாடமி’யை ஏற்படுத்தி மீண்டும் பிரமிக்க வைத்திருக்கிறார், ‘ஜெய்பீம்’ நிஜ ஹீரோவும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான சந்துரு.

நடிகர் சூர்யாவின் முன்னெடுப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘சத்யதேவ் லா அகாடமி’யின் கெளரவ இயக்குனராக பொறுப்பேற்றுள்ள நீதியரசர் சந்துருவிடம் “எப்படி இந்த எண்ணம் வந்தது?” என்று கேட்டேன்.

நான், ஓய்வுபெற்றப் பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலுள்ள சட்டக்கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்துவருகிறேன். பெரும்பாலான அரசு சட்டக்கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களைவிட தற்காலிக ஆசிரியர்கள்தான் அதிகமாக பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலுள்ள ஒரு சட்டக்கல்லூரியில் மூன்றே மூன்று நிரந்தர ஆசிரியர்கள்தான் உள்ளார்கள். மீதமுள்ள பதினேழு ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்கள்தான்.

சத்யதேவ் லா அகாடமி தொடக்கம்

பெரும்பாலான தற்காலிக பேராசிரியர்கள் தகுதி குறைந்தவர்களாக மாணவர்களுக்கு சட்டப் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால், மாணவர்கள் எப்படி முறையான கல்வியைப் பெற்று வழக்கறிஞர்களாக வெளிவருவார்கள்? இப்படிப்பட்ட, மாணவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று யோசித்தபோதுதான் ‘சத்யதேவ் லா அகாடமி’ தொடங்கும் திட்டம் உருவானது. சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்திட்டம் அனைத்தையும் உருவாக்கினேன். “லா அகாடமி தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்” என்று சூர்யாவிடம் சொன்னபோது, ‘ரொம்ப நல்ல விஷயம். எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்’ என்றார். ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், அதன் நிஜ நாயகர்களை உருவாக்க முன்வந்தது பெரிய விஷயம்” என்கிறவர், ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் பெயரில் லா அகாடமி தொடங்கியதற்கான காரணத்தையும் கூறுகிறார்,

“ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் நேரம் தவறாமைக்கு பெயர் போனவர், நேர்மை தவறாதவர், அறத்துடன் செயல்படுபவர். மகன் திருமணத்தின்போதுகூட காலையில் திருமணம் முடிந்ததும் மதியம் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். மீனாட்சி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் நடந்தது. போக்குவரத்து இடையூறு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி காவல்துறை போராட்டத்துக்குத் தடை விதித்தது. அப்போது, அது தொடர்பான வழக்கு வந்தபோது, சத்யதேவ் அவர்கள்தான் நீதிபதி. அதேநாளில், எம்.ஜி.ஆரும் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து மெரினாவில் போராட்டம் செய்துகொண்டிருந்தார்.

நீதியரசர் சந்துரு

‘எம்.ஜி.ஆர் போராட்டத்தில் ஈடுபடும்போது போக்குவரத்து பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதா? பேராசிரியர்கள் போராடினால் மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போக்குவரத்து இடையூறு ஏற்படுமா?’ என்று நான் வழக்கறிஞராக வாதாடினேன். அதை ஏற்றுக்கொண்டு பேராசிரியர்கள் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்து நீதியின் பக்கம் நின்றார் நீதிபதி சத்யதேவ்.

‘ஜெய்பீம்’ படத்தில்கூட நீதிமன்றத்தில் ஒரு பக்கம் சத்யதேவ் புகைப்படத்தையும் மற்றொரு பக்கம் வி.ஆர் கிருஷ்ணய்யர் புகைப்படத்தையும் வைத்திருப்பார்கள். அதை, நான் தான் அந்தக் காட்சியில் வைக்கச்சொன்னேன். சத்யதேவ் மீது இருக்கும் மரியாதை காரணமாகத்தான் இந்த லா அகாடமிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது” என்கிறவர், லா அகாடமி தொங்கப்பட்டதன் நோக்கம், செயல்பாடுகள் குறித்து சொல்ல ஆரம்பித்தார்,

“வழக்கம்போல் பாடமாக நடத்தினால் மாணவர்களுக்கு போர் அடிக்கலாம். அதனால், சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்களை ஆடியோ வடிவில் யூடியூபில் பதிவிடுவோம். மாணவர்கள் இலவசமாக டவுன்லோடு செய்து கேட்டு சட்ட அறிவை வளர்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து ஓராண்டு சட்டப்பயிற்சி அளிக்கவும் இருக்கிறோம்.

முதல்வருடன் நீதியரசர் சந்துரு, நடிகர் சூர்யா

மிக முக்கியமாக சட்ட அனுபவம் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு சட்ட ஆலோசனைகளையும் வழங்க இருக்கிறோம். இது தொடர்பாக முதல்வரிடம் சொன்னபோது, ‘நல்ல திட்டம், அரசோடு இணைந்தே செயல்படலாமே? அரசின் கல்வித் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பலாமே’ என்று கூறி ஊக்கப்படுத்தினார். கொடைக்கானலில் ஷூட்டிங்கில் இருந்த சூர்யாவும் உடனடியாக கிளம்பி வந்துவிட்டார். முதல்வரைக்கொண்டே ‘சத்யதேவ் லா அகாடமி’யைத் தொங்கிவிட்டோம்” என்றவரிடம், “சூர்யா எந்தளவுக்கு ஆர்வமாக இருந்தார்?” என்று நாம் கேட்டபோது,

“சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் என்ன நல்ல விஷயங்களை செய்யணும்னாலும் சூர்யா ரொம்ப ஆர்வமா இருப்பார், உடனடியாக செயல்படுத்தவேண்டும் என்று நினைப்பார். ஒழுக்கமான பண்புகளைக்கொண்ட திரைக்கலைஞர் அவர். தனக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை, ஆனால் சமூகத்திற்காக பங்காற்றவேண்டும் என்ற அவரது கொள்கையில் உறுதியாக இருப்பவர். ‘ஜெய்பீம்’ படத்தில் ஆரம்பத்தில் அவர் நடிப்பதாக இல்லை. திரைக்கதையை படித்துவிட்டு அக்கறையுடன் ஒப்புக்கொண்டார். யாருடைய பாதிப்பு குறித்து ஜெய்பீம் படத்தில் காண்பிக்கப்பட்டதோ, அந்த பார்வதிக்கு 15 லட்ச ரூபாய் கொடுத்தார். இருளர் மக்களின் கல்வி முன்னேற்றத்துக்காக 1 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். ‘ஜெய்பீம்’ பட வெற்றியைத் தொடர்ந்து ஒரு அன்பளிப்பை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் எனக்கும் கொடுக்க முன்வந்தது. நான், வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன். தற்போதும், லா அகாடமி மூலம் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முன்னேற வகையில் பங்களிப்பைச் செய்துள்ளார்.

நீதியரசர் சந்துரு, சூர்யா

தமிழ்நாடு முழுக்க 16 அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன. இங்கு, சுமார் 4,000 மாணவர்கள் படிக்கிறார்கள். இதில், 60 சதவிகிதம் பேர் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான். இங்கு, தரமான ஆசிரியர்கள் இல்லை. சட்டப்படிப்பு முடித்ததும் சட்டமேற்படிப்பு பக்கம் செல்வதில்லை. பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள் ஆகவே விரும்புகிறார்கள். நீதிபதியாகக்கூட விரும்புவதில்லை. காரணம், வழக்கறிஞர் தொழிலில்தான் வருமானம் அதிகம். இந்தியாவின் பல முன்னணி வழக்கறிஞர்களுக்கு ஒருநாள் கட்டணமே 25 லட்ச ரூபாய்க்குமேல் கொடுக்கப்படுகிறது. ஆனால், நீதிபதிக்கு வெறும் மாத சம்பளம்தான். அப்படியிருக்க, இதைவிட குறைந்த வருமானம் வரும் சட்டக்கல்லூரி பேராசிரியர்களாக எப்படி வருவார்கள்?

அதேபோல, அரசு சட்டக்கல்லூரிகளில் 3,000 ரூபாய்தான் கட்டணம். அதுவே, அரசின் ‘ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் லா’ கல்லூரிகளில் 1 லட்ச ரூபாய் கட்டணம் ஆகிறது. அதேபோல், இந்தியாவில் 14 தேசிய சட்டக்கல்லூரிகள் உள்ளன. அங்கும், லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தவேண்டிய சூழல். பணம் கட்டினால் தரமான கல்வியைக் கொடுக்கிறார்கள். இந்தியாவிலேயே ஜிண்டால் சட்டப்பள்ளியில்தான் 10 லட்ச ரூபாய் என அதிக கட்டணம் வாங்கப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக சட்டத்துறையில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளையும், பேரன் பேத்திகளையும் அங்கு அனுப்பி பணம் கட்டிப் படிக்க வைக்கிறார்கள். அங்கு, நன்றாக படித்துவிட்டு கார்ப்பரேட்டுக்கு தொழில் ஆலோசகராக வந்து இடங்களை பிடித்துக்கொள்வதோடு, வழக்குகளையும் அதிகமாக கைப்பற்றிக்கொள்கிறார்கள். 95 சதவிகித வழக்குகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரிடமும் உயர்சாதி இந்துக்களின் வசம்தான் உள்ளது. கார்ப்பரேட்டுகளிலும் வேலைக்கு சேர்ந்து 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் என சம்பாதிக்கிறார்கள். மீதமுள்ள, 5 சதவிகிதம்தான் அரசு சட்டக்கல்லூரிகளில் படித்துவிட்டுவரும் வழக்கறிஞர்களிடம் உள்ளது. இவர்கள் பெயில் வாங்கும் வழக்குகளை எடுத்து 500, 1000 ரூபாய்க்குத் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். திறமையற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் திறமையான மாணவர்களை எப்படி உருவாக்கமுடியும்? சத்யதேவ் லா அகாடமி திறமையான மாணவ சமுதாயத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார் உறுதியாக.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *