“அப்பாவின் புகழைப் பாடுவதற்கு மட்டும்தான் பணம் இருக்கிறது!" – ஸ்டாலினைச் சாடிய ஜெயக்குமார்

Whatsapp Image 2023 07 16 At 3 02 24 Pm.jpeg

மதுரையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அ.தி.மு.க மாநாடு தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள், மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் – ஜெயக்குமார்

இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதுரையில் ரூ.215 கோடி செலவில் கட்டப்பட்ட நூலகத்தை நேற்று கலைஞர் பெயரில் திறக்கப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசை விமர்சித்திருக்கிறார். “நூலகத்துக்குத் திருவள்ளுவர் பெயரை வைத்திருக்கலாம். தமிழுக்காகத் தொண்டாற்றிய தமிழ் அறிஞர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். அவர்களின் புகழைப் பறைசாற்றுகின்ற வகையில் அவர்களின் பெயர்களை வைத்திருந்தால் அது ஒரு நல்ல விஷயமாகப் பாராட்டியிருக்கலாம். ஆனால், அதற்கு அவரின் (முதல்வர் ஸ்டாலின்) அப்பா பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள்.

அதேபோல் அவருக்கு (கருணாநிதி) மெரினாவில் ரூ.38 கோடியில் நினைவிடம் கட்டினார்கள். திரும்ப இப்போது ரூ.81 கோடியைக் கடலில் கொட்ட வேண்டுமா… அதை சென்னை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கலாம், வடசென்னைக்கு நிதி ஒதுக்கலாம், கிராம மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கலாம்… ஆனால் அதற்கெல்லாம் பணம் இல்லை, அவரின் அப்பாவின் புகழ் பாடுவதற்கு மட்டும் பணம் இருக்கிறது. எனவே அந்த பேனா சிலையை அவர்களின் சொந்த செலவில் அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. அது அண்ணா சாலைதானே, அனைவரும் பார்த்துக் கொண்டே செல்லட்டும்.

கலைஞர் பேனா சிலை – ஜெயக்குமார்

அரசாங்க செலவில் ஏற்கெனவே கருணாநிதி புகழ் பாடுவதற்குப் பல கோடி ரூபாய் செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில், ரூ.81 கோடியைத் தண்டச் செலவாகக் கடலில் கொட்ட வேண்டுமா இதுதான் எங்களுடைய கேள்வி” என்று கூறினார்.

அதேபோல் காய்கறிகளின் விலையேற்றம் பற்றி பேசுகையில், அ.தி.மு.க ஆட்சியில் வெங்காயத் தட்டுப்பாடு வந்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ததாகக் கூறிய ஜெயக்குமார், இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த `சுமார் ரூ.,1000 கோடி நிதி ஒதுக்கி மக்களுக்கு மானிய விலையில் காய்கறிகளை விற்கலாம்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *