இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… ரூ.1000 வாங்க டோக்கன் – இந்த தேதி முதல் விநியோகம்! | Kalaignar Urimai Thogai Scheme Update Tokens For Beneficiaries Will Be Disturbuted From This Date

304662 Jul15006.png

Kalaignar Urimai Thogai Scheme: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2021ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் ஏறிய திமுக இத்திட்டம் குறித்து நீண்ட நாள்களாக ஆலோசனையில் இருந்தது. 

மகளிருக்கு பேருந்து பயணத்தை இலவசமாக அறிவித்தபோதே, மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டமும் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த திட்டம் செயல்படுத்தபடுவதில் உள்ள சிக்கல்களை களைந்துவருவதாக திமுக அரசு தெரிவித்தது. அந்த வகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல் இந்த திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டாண்டான இந்தாண்டில், முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று இத்திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கடந்த மார்ச் மாதம் 2023-2024 பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அப்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர்,”தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது. 

ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்” என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | பொங்கலுக்கு வேட்டி, சேலை: நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!

ஒன்றரை கோடி விண்ணப்பங்களுக்கு எதிர்பார்ப்பு

சமீபத்தில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த வாரம் ஜூலை 7ஆம் தேதி அன்று இத்திட்டம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். 

அதில் இத்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டிய வழிமுறைகள், ஒவ்வொரு துறைகளின் பங்களிப்பு, மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்தும் முதலமைச்சரால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இத்திட்டத்திற்கான உரிய பயனாளிகளை கண்டறிவதில் மாவட்ட நிர்வாகம் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை கோடி பேர் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆதார் இல்லாவிட்டாலும்…

குறிப்பாக, இத்திட்டத்திற்கு கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டம் குறித்த அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு, பொது விநியோக கடைகளின் மூலம் விண்ணப்பங்களையும் கொடுக்க தொடங்கியது. மேலும், ரேசன் கடைகள் மூலம் மகளிர் இந்த உரிமைத்தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு என்னென்ன தேவை உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.  

மேலும் இத்திட்டம் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது,”சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இந்தத் திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றைப் பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, இந்த மகளிர் உதவித் தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும்” என்றார். 

வேகமெடுக்கும் வேலைகள்!

திட்டம் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தற்போது துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில், வரும் ஜூலை 18ஆம் தேதி, உரிமைத்தொகை முகாம் நடக்கும் இடம் குறித்து ரேசன் கடைகளில் தமிழில் பலகை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் குடும்ப அட்டை எண், முகாம் நடக்கும் இடம் மற்றும் நாள் முதலிய விவரங்களை விண்ணப்ப படிவங்களில் எழுதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் உரிமைத்தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விநியோகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அமுதம் நியாய விலைக் கடைகளில் கொள்முதல் விலைக்கே பருப்பு வகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *