Uncategorized

ஜோதிடம்

1235925.jpg

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சூரியன், குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எந்த காரியத்தையும் சிரத்தையுடனும் வேகத்துடனும் செய்வீர்கள். தேவையற்ற மனசஞ்சலம் அகலும். எந்த ஒரு காரியம் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உங்களுடைய பணத்தேவை பூர்த்தியாகும். வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். வீண் இடையூறுகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்படும். புதிய வேலையில் சேர்ந்தவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.

அஸ்வினி: இந்த வாரம் கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பரணி: இந்த வாரம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – பஞ்சம ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். நேர்மைத்தன்மை வெளிப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்கநிலை மாறும்.

தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த உரசல்கள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சினையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப் படும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை தீரும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும்.

ரோகிணி: இந்த வாரம் காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்தகாலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய்தொழில் சிறக்கும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களுடைய பேச்சாற்றல் மூலம் அனைத்து சிக்கல்களையும் சமாளிப்பீர்கள். பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். புதியதாக வீடு, மனை, வாகன சேர்க்கை ஏற்படும். செய்தொழிலில் மனநிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும்.

மேலதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசம் நீங்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதிநுட்பத்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும்.

திருவாதிரை: இந்த வாரம் தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.

பரிகாரம்: சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசியில் இருக்கும் ராகுவால் உங்களுடைய தயாளகுணம் வெளிப்படும். சுபச்செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. மனஅமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வீடு கட்டுவதற்கான தடைகள் அகலும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும்.

பூசம்: இந்த வாரம் உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

ஆயில்யம்: இந்த வாரம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர் பயணங்கள் உண்டாகும், நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடிதப் போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும்.

தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். குடும்பத்தினருக்குத் தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும்.

பெண்களுக்கு மனத்தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இரு முறை ஆலோசிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

மகம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூரம்: இந்த வாரம் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சிவனை வழிபாடால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கோதுமை கஞ்சி செய்து பிரசாதமாக விநியோகம் செய்வது நல்லது.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனத்துணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் வாக்குவன்மை அதிகரிக்கும். வெளிநாடு பயணம் செல்வதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்களுக்கு அணுசரனையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எந்தகாரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை தூரப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

அஸ்தம்: இந்த வாரம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூரியன், குரு – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் அனைவரையும் அனுசரித்து செல்லும் திறமை அதிகரிக்கும். எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நீங்கி வேகம் எடுக்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.

பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும்.

பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. அரசியல்வாதிகள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன் – மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார் – உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும்.

சுவாதி: இந்த வாரம் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை நீங்கும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் சனி – பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், குரு – லாப ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சுபச் செலவுகள் ஏற்படும். வெற்றி கிடைப்பதில் இருந்த தடை தாமதம் நீங்கும். பணவரத்து இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகளில் இருந்து வந்த சோதனைகள் மாறும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் அகலும்.

தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டு விட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்

அனுஷம்: இந்த வாரம் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம்.

கேட்டை: இந்த வாரம் வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், குரு – தொழில் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்கு வன்மை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடை நீங்கும். ஆரோக்கிய குறைபாடு நீங்கும். மனசோர்வு அகலும். உங்களிடமிருக்கும் நிதானம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் முன்பு ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அரசியல்வாதிகள் முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

மூலம்: இந்த வாரம் தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை.

பூராடம்: இந்த வாரம் அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சூரியன், குரு – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். ராசிநாதன் சனியின் சஞ்சாரத்தால் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். மேலிடம் உங்களுக்கு அனுக்கூலமாக இருக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் நீங்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

திருவோணம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். உதவிகளை செய்து மனதிருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், குரு – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகமாகும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். சக ஊழியர்கள் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து கனிவான உபசரிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் அகலும். எந்த விஷயத்தையும் லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும்.

பெண்களுக்கு பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.

சதயம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும்.

பரிகாரம்: சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், குரு – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்தால் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும்.

கலைத்துறையினருக்கு புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் எடுக்கும் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

உத்திரட்டாதி: இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

ரேவதி: இந்த வாரம் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *