ஆன்மிக அரசியலும்… திமுக – பாஜக மோதலும்!

Hero.jpg

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்ற அதே நாளில் (ஜன.22), தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு சம்பவங்கள் நடந்தேறின. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவைக் காண்பதற்காக காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அகண்ட திரை அகற்றப்பட்டு, பின்னர் மீண்டும் வைக்கப்பட்டு… என சில அதிரடி சம்பவங்களும் நிகழ்ந்தன.

அயோத்தி ராமர் கோயில்

இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறும் அளவுக்கு பரபரப்பின் உச்சத்துக்குச் சென்றது தமிழ்நாட்டின் நிலைமை.

ராமர் கோயில் திறப்பு விழாவை நேரலையில் காண்பதற்காக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் திரை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியைக் காண்பதற்கு வருவதாக இருந்தது. இந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த அகண்ட திரையை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதாகப் பிரச்னை எழுந்தது.

நிர்மலா சீதாராமன்

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் உடனடியாக வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றங்கள், ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியை அகண்ட திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உத்தரவிட்டன. அதையடுத்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் அகண்ட திரை வைக்கப்பட்டு, நேரலை ஒளிபரப்பு நடைபெற்றது. அதன் பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்டோர் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

அதன் பின்னர், ‘அகண்ட திரையில் ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தவறு என்று பலமுறை சொல்லியும், அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. தனியார் கோயில்களில் இந்து அறநிலையத்துறை தலையிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் என்று உத்தரவிட்டு, இந்துக்களின் உரிமையை நிலைநாட்டியிருக்கின்றன. நீதிமன்றங்களுக்கும், ராமபிரானுக்கும் நன்றி’ என்றார் நிர்மலா சீதாராமன்.

அயோத்தி ராமர் கோயில்

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், ‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய்களைப் பரப்புகிறார்’ என்று குற்றம்சாட்டினார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. ‘அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியையொட்டி தமிழக கோயில்களில் நடைபெறும் எந்தவித நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. ஆன்மிகத்தை ஆன்மிகமாகப் பார்க்கிறபோது, நாங்கள் எந்தத் தடையும் விதிக்கத் தயாராக இல்லை. ஆன்மிகத்தை அரசியலில் கலப்பதற்கும், அரசியலாக்குவதற்கும் முயலும்போதுதான், சட்டத்துக்கு உட்பட்டு இந்து அறநிலையத்துறை முடிவுகளை எடுக்கிறது’ என்றார்.

அதேபோல, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள கோதண்டராமர் கோயிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றிருந்தார். அப்போது, அந்தக் கோயிலில் இருந்த பூசாரிகளும், ஊழியர்களும் ஒருவித அச்ச உணர்வுடன் இருந்தனர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.என்.ரவி பதிவிட்டிருந்தார்.

ஆளுநர் ரவி

ஆனால், ஆளுநரின் குற்றச்சாட்டை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயில் பட்டாச்சாரியார் மோகன் மறுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில், ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் கோயில்களில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபுவும், தி.மு.க-வினரும் கூறிவருவதை மறுக்கிறார், பா.ஜ.க-வின் மாநிலச்செயலாளரான பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன்.

இராம ஸ்ரீநிவாசன்

“ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி தமிழக கோயில்களில் எந்த நிகழ்ச்சிகளையும் அனுமதிக்காதீர்கள் என்று இந்து அறநிலையத்துறை அலுவலர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிக்கிறது. அது, கீழ்மட்ட அளவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தியது. அன்றைய தினம், நிகழ்ச்சி நடத்துவதற்கான கோயில்களில் பா.ஜ.க-வினர் சுத்தம் செய்து, எல்.இ.டி விளக்குகள் பொருத்தி, பல ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். ஆனா, அவை எல்லாவற்றையும் அகற்றிவிட்டார்கள்.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய நிதியமைச்சர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியில், எல்.இ.டி திரை அமைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றிவிட்டனர். மத்திய நிதியமைச்சர் வரக்கூடிய நிகழ்ச்சி என்று தெரிந்தும், எல்.இ.டி திரையை ஏன் அகற்றினார்கள்? மேற்கு மாம்பலத்திலுள்ள கோதண்டராமர் கோயில் அர்ச்சர்கள் முகத்தில் அச்சத்தைப் பார்த்தேன் என்று ஆளுநரே கூறியிருக்கிறார். தி.மு.க அரசின் இத்தகைய அணுகுமுறை கண்டனத்துக்குரியது’ என்று அவர் கூறியிருக்கிறார்.

கலாநிதி வீராசாமி

பா.ஜ.க-வினரின் குற்றச்சாட்டுகளை தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மறுக்கிறார். ‘தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். கோயில்களில் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தடுக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமே கிடையாது. அப்படி எந்தவொரு சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை. எழுத்துப்பூர்வமான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டுகிறார்கள். எந்த அதிகாரி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார் என்று அவர்களால் சொல்ல முடியுமா? தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் பா.ஜ.க-வினர் செயல்படுகிறார்கள் என்பதை முதல்வரே சொல்லியிருக்கிறார். அமைச்சர் சேகர்பாபு தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார். ஆகவே, பா.ஜ.க-வினரின் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *