“பாஜக-வை பாதுகாக்கும் கருவியாக, ராமர் கோயிலை எடுத்து வருகிறார்கள்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Img 20221007 121417.jpg

விருதுநகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆண்டுக்கான கடைசி குளிர்கால கூட்டத்தொடர் 9 நாள்கள் நடைபெற உள்ளது. கடந்த ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க. ஆட்சி கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான பட்ஜெட்டை மட்டும் தான் தாக்கல் செய்திருக்கிறது. இந்த அரசு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதற்கான வழியைத்தான் கடைப்பிடித்திருக்கிறது. ஆகவே தொடங்கப்படவுள்ள குளிர்கால கூட்ட தொடரிலும் இடைக்கால பட்ஜெட் மற்றும் இதர விஷயங்கள் குறித்து தான் பேசப்படும்.

எம்.பி.

ஆனால் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் விஷயங்களான பெட்ரோல் டீசல் விலை, சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைப்பது போன்ற பிரச்னைகள் மீது இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம் தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசலாம் என சிந்தித்திருக்கின்றனர்.

ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழாவிற்கு, சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர், பாராளுமன்ற குழு தலைவர் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. அழைப்பிதழ் கிடைக்க பெற்றவர்கள் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வது குறித்து தனிப்பட்ட முறையில் முடிவை எடுத்திருப்பார்கள். அதேசமயம் மற்ற நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களும், தலைவர்களும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி, இன்னொரு நாளில் கோவிலுக்கு சென்றுவர தயாராக இருக்கிறோம்.‌

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் தோல்வி பயம் பா.ஜ.க.வுக்கு கண் முன்னே நிற்கிறது. கேஸ் விலை, பெட்ரோல்-டீசல் விலை, விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு விஷயங்களை இவர்களை விரட்டியடிக்க காத்திருக்கின்றன. அவைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் விஷயமாக ராமரையும், ராமர் கோயிலையும் கையிலெடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்திய மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எதற்காக பா.ஜ.க.வினர் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

ரயில்வே துறையை பொருத்தமட்டில் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சருடன் நாங்கள் ஆலோசித்திருக்கிறோம். ஆனால் மத்திய அரசு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு ரயில்வே துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும் வசதிகளைப் போன்று தென் தமிழகத்திற்கு தராமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது.

மாணிக்கம் தாகூர் எம்.பி.

இந்தியா கூட்டணிக்குள் தலைவர்கள் ஆலோசனைகள் உள்பட கூட்ட விவாதம் நடக்கும் விஷயங்களை எந்த மொழியில் பேசுகிறார்களோ அதை மொழிபெயர்த்து எல்லோருக்கும் புரியும்படி வழங்குவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் அதைமொழி திணிப்பு, கட்டாயப்படுத்தல் என்றும் சின்ன, சின்ன விஷயங்களை இந்தி பத்திரிகைகள் பேசி பெரிதாக்குகின்றன.

தமிழக ஆளுநர் ரவி ஆளுநர் பதவிக்கான தகுதியை இழந்து விட்டார். ஒரு மாநில பா.ஜ.க. தலைவர் எப்படி செயல்படுவாரோ, பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர் எப்படி செயல்படுவாரோ அதேபோன்று ஆளுநர் செயல்படுகிறார். தமிழகத்திலே மோடி எதிர்ப்பு அலை உருவாகியிருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கான வாக்குகள் வருவதற்கான வாய்ப்பு இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்டு விட்டது. நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றினை கையில் எடுத்துக் கொண்டு அதில் நான் கண்டுபிடித்துவிட்டேன் என பா.ஜ.க. அண்ணாமலை சொல்வது திசைத்திருப்பும் முயற்சி.

இந்தியா முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிராக உருவாகி இருக்கின்ற பெட்ரோல் டீசல் விலை, சமையல் கேஸ் விலை, விவசாய பிரச்சனைகள், அதானி குழுமத்துக்கான திட்டங்கள் போன்றவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போடுகின்ற திட்டம் தான் இது. பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் பாராளுமன்ற உரையிலேயே 100 நாள் வேலை திட்டம் ஒரு வரலாற்று பிழை. அந்தத்திட்டமானது நிறுத்தப்பட வேண்டியது‌, நான் அதை நிறுத்துவேன் என கூறினார். தற்போது அந்த திட்டத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளர்களாக இருந்த 7.5 கோடி பேர் அத்திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே வருகின்ற தேர்தலில் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.

காங்கிரஸில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழுவினர், மக்களிடம் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கைகளை தயார் செய்ய உள்ளனர். இதற்காக பிரத்தியேக வலைத்தளமும் இ-மெயில் முகவரிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *