`இறப்பதே விதியானால் இந்தியாவோ இஸ்ரேலோ எங்கு இறந்தால் என்ன?' – ஆள்சேர்ப்பு முகாமில் குழுமிய இளைஞர்கள்

Gegk4iwxcaajwpi.jpeg

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் (Eli Cohen) கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியா வந்தபோது, இஸ்ரேலில் நர்சிங் மற்றும் கட்டுமானத் துறைகளில் 42,000 இந்தியர்கள் பணியாற்ற அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. பின்னர், அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாலஸ்தீனம்மீது நான்கு மாதங்களாகப் போர்தொடுத்துவரும் இஸ்ரேல், தங்கள் நாட்டில் வேலைபார்த்துவந்த பாலஸ்தீனர்களின் பணி அனுமதியை ரத்து செய்தது. இதனால், இஸ்ரேலில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படிபடி, இந்தியாவின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், இந்திய தொழிலாளர்கள் இஸ்ரேலில் வேலைபார்ப்பது பற்றியும், அவர்கள் அங்கு தங்குவது பற்றியும் அறிவிப்புகளை வெளியிட்டது. ஹரியானா மாநில அரசு இந்த விஷயத்தில், அரசு நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் பணியாளர்களை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஹரியானா கௌஷல் ரோஸ்கர் நிகாம் (HKRN) என்ற கார்ப்பரேட் நிறுவனம் மூலம் இஸ்ரேலில் 10,000 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்தது. மேலும் அந்த விளம்பரத்தில், மாதம் ரூ.1.5 லட்சம் வரை சம்பளம் இருக்கும் என்றும், ஒப்பந்த காலம் ஐந்து வருடங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான, விண்ணப்பங்கள் பெறும் பணிகள் நிறைவுபெற்று அடுத்தகட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக்கில் நேற்று நடைபெற்ற ஆள்சேர்ப்பு முகாமில் பட்டம் பெற்ற இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், இதில் கலந்துகொண்ட லெகாரம் என்ற நபர், இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை உணர்த்தும் வகையில், “இங்கு வேலையின்மை நிலவுகிறது. அதனால்தான், மக்கள் இங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள். ஒருவேளை, இறப்பதுதான் நம்முடைய விதியென்றால், இங்கு இறந்தால் என்ன… அங்கு (இஸ்ரேல்) இறந்தால் என்ன… ஆனால், அதற்குள் அங்கு சென்று நல்லபடியாக வேலைசெய்து, சில காலம் இருந்துவிட்டு மீண்டும் இங்கு வருவோம் என்பது எனது நம்பிக்கை” என்று கூறியிருக்கிறார்.

வேலைவாய்ப்பு ஆள்சேர்ப்பு முகாம் – ஹரியானா

மேலும், இவரைப்போலவே 28 வயது கொத்தனார் விவேக் ஷர்மா, “அங்கு நிலவும் மோதலைப் பற்றி எனக்குத் தெரியும். இருந்தாலும் குறுகிய காலத்திலேயே என்னால் நிறைய பணம் (ஆண்டுக்கு 12,000 டாலர்) சம்பாதிக்க முடியும். இதே அளவு பணம் இந்தியாவில் சம்பாதிக்க எனக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகலாம்” என்று கூறினார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்

இதற்கிடையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்த ஒப்பந்தத்தின் பின்னணி என்பது, தொழிலாளர்கள் இடம்பெயர்வதை ஒழுங்குபடுத்துவதற்கும், அங்கு செல்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது. மேலும், இஸ்ரேலிலுள்ள தொழிலாளர் சட்டங்கள் மிகவும் கண்டிப்பானவை. அதனால், வெளிநாட்டிலுள்ள நம் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கான எங்களுடைய பொறுப்பை நாங்கள் மிகவும் உணர்ந்திருக்கிறோம்” எனக் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *