திருவண்ணாமலை கோயிலில் பெண் போலீஸ்மீது தாக்குதல்? – திமுக பிரமுகர்மீது வழக்கு! – பின்னணி என்ன?

Whatsapp Image 2023 12 30 At 2 14 26 Pm 1 .jpeg

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ‘ஆருத்ரா’ தரிசன விழா டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் தலைவருமான இரா.ஸ்ரீதரன் என்பவரும் தன்னுடைய துணைவியார் சிவசங்கரி மற்றும் குடும்பத்தினருடன் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். மூலவரை வழிபட்ட இவர்கள், உண்ணாமுலையம்மன் சன்னதியிலும் சாமி தரிசனம் செய்தனர். அப்போது, நீண்ட நேரம் கருவறை முன்பு நின்றுகொண்டிருந்தார்கள். இதனால், தரிசன மேடைகளில் நின்றிருந்த பக்தர்கள் அம்மனை வழிபட முடியாமல் சிரமத்துக்குள்ளானார்கள். இது குறித்து, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசூர் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் காந்திமதியிடம் பக்தர்கள் முறையிட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீதரன்

இதையடுத்து, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஒதுங்கி நிற்குமாறு, ஸ்ரீதரன் மற்றும் அவரின் துணைவி சிவசங்கரியிடம் பெண் இன்ஸ்பெக்டர் கூறியிருக்கிறார். உடனே கடும் கோபமடைந்த ஸ்ரீதரன், ‘‘நான் யார்த் தெரியுமா… தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர். அண்ணாமலையார் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தமே என்னுடைய சகோதரர்தான். கோயில் நிர்வாகமே எங்களிடம்தான் இருக்கிறது. எங்களையே ஒதுங்கச் சொல்றியா?’’ என்று மிரட்டல் விடுக்கும் வகையில் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீதரனின் துணைவியாரும் இன்ஸ்பெக்டரை முறைப்புக் காட்டி எகிறியிருக்கிறார். ‘‘நீங்கள் யாராக இருந்தாலும் மரியாதையாகப் பேசுங்கள். பக்தர்களும் காத்துக் கிடக்கிறார்கள். வழிவிடுங்கள்’’ என்று இன்ஸ்பெக்டரும் பதிலுக்கு கண்டிப்புக் காட்டியிருக்கிறார்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த ஸ்ரீதரன் பக்தர்கள் முன்னிலையிலேயே பெண் இன்ஸ்பெக்டர் என்றும் பார்க்காமல், இன்ஸ்பெக்டர் காந்திமதியின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். இது குறித்து, இன்ஸ்பெக்டர் காந்திமதி கொடுத்த புகாரின்பேரில், தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், அவரின் துணைவியார் சிவசங்கரி, இவர்களின் செயலுக்கு உடந்தையாக இருந்த கோயில் ஊழியர் ரமேஷ் ஆகிய 3 பேர்மீதும் திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல், வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதனிடையே, போலீஸ் உயரதிகாரிகள் சிலர்… தி.மு.க பிரமுகர் ஸ்ரீதரனுக்கு ஆதரவாகச் செயல்படும் நோக்கத்துடன் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த இன்ஸ்பெக்டர் தாக்கப்படும் காட்சிகளை அழித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீதரன்

சம்பவம் நடைபெற்றபோது, பக்தர்கள் சிலர் தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். அங்கு வந்த உயரதிகாரி ஒருவர், பக்தர்களையும் மிரட்டி செல்போன்களை பறித்து வீடியோ காட்சிகளை அழித்ததாகவும் கூறப்படுகிறது. உயரதிகாரிகளும் தி.மு.க பிரமுகருக்குச் சாதகமாகப் பேசுவதால், மன உளைச்சலுக்கு ஆளான பெண் இன்ஸ்பெக்டர் காந்திமதி விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். விளக்கம் கேட்பதற்காக அவரைத் தொடர்பு கொண்டபோது, அழைப்பை அவர் எடுக்கவில்லை. வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமியை தொடர்புகொண்டபோதும், அவரும் அழைப்பை எடுக்கவில்லை.

இது குறித்து, திருவண்ணாமலை தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது, ‘‘இரா.ஸ்ரீதரன் திருவண்ணாமலை நகராட்சித் தலைவராக 2 முறை இருந்துள்ளார். தி.மு.க-வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பையும் வகித்துள்ளார். இப்போது, தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவரின் சகோதரர் ஜீவானந்தம் வர்த்தகப் பிரிவில் மாவட்ட அமைப்பாளராகவும், அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராகவும் உள்ளார். ஸ்ரீதரனின் மகன் டாக்டர் பிரவீன் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராகவும், தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இப்படி, ஸ்ரீதரனின் குடும்பமே தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்” என்றனர்.

ஸ்ரீதரன்

‘இன்ஸ்பெக்டரைத் தாக்கியது ஏன்’ என்ற கேள்வியுடன் தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரனை தொடர்புகொண்டோம். அழைப்பை ஏற்றவர், ‘நாம் யார்?’ என்று கேட்டுவிட்டு, ‘திரும்ப அழைக்கிறேன்’ என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டார். சிறிது நேரத்தில் புதிய செல் நெம்பரில் இருந்து நம்மைத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், ‘அண்ணன்கிட்ட பேசினீங்களா. செய்தி போடப் போறிங்களா. கொஞ்சம் தவிர்க்கப் பாருங்க. இல்லைனா, கொஞ்சம் சாஃப்ட்டா போடுங்க’ என்று கட்டளையிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். அதன் பிறகு, ஸ்ரீதரன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் அண்ணாமலை, ‘‘தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. அரசு அதிகாரிகளே மணல் கொள்ளையர்களால் கொலைசெய்யப்படுவதும், தி.மு.க-வினரால், காவல்துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதும், பெண் காவலர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதும் என அரசு இயந்திரம் முற்றிலுமாகச் செயலிழந்திருக்கிறது.

அண்ணாமலை

இந்த நிலையில், திருவண்ணாமலை கோயிலில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை, தி.மு.க மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் என்ற நபர், கன்னத்தில் அறைந்திருக்கிறார் என்ற செய்தி, தி.மு.க ஆட்சியில், காவல்துறையின் மாண்பு எந்த அளவுக்கு கீழிறங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தி.மு.க கட்சிக்காரர் என்ற ஆணவத்தில், பொதுமக்கள் முன்னிலையில் பெண் காவல்துறை அதிகாரியையே தாக்க முடியுமென்றால், சாதாரண பொதுமக்கள் நிலை என்ன… தனது 2006 – 2011 ஆட்சிக் காலத்தில் செய்த அடாவடிகளால், தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல் இருந்ததை மறந்துவிட்டதா தி.மு.க?

பொதுமக்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. தி.மு.க குண்டர்களைப்போல, பொதுமக்களும் சட்டத்தை தங்கள் கையிலெடுத்தால், தி.மு.க-வினருக்குத் தெருவில்கூட இடம் இருக்காது என்பதை மறந்துவிட வேண்டாம். பெண் காவல் அதிகாரியைத் தாக்கிய ஸ்ரீதரன் என்ற தி.மு.க நபரை உடனடியாகக் கைதுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கும் அவரின் அண்ணன் ஜீவானந்தம் என்ற நபரை, உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *