`மணிப்பூர் விஷயத்தில் ஒரு சமூகத்தின்மீது மட்டுமே பழிசுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது!' – சந்திரசூட்

Dy Chandrachud .jpeg

நாட்டையே நாளும் நோட்டமிட வைத்துக்கொண்டிருக்கும் மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றம், நீதிமன்றங்களில் பெரும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜூலை 20-ம் தேதி முதல் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தும்கூட, கடந்த ஒன்பது நாள்களாக விவாதம் நடத்தப்படவில்லை. இன்னொருபக்கம், மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுமீதான விசாரணையின்போது, `இந்த விவகாரத்தில் நாங்கள் உத்தரவிட முடியாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார்.

மணிப்பூர்

அதன் பின்னர், குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவர், மைதேயி இனத்தவர்களால் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டதும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதும் வெளியில் தெரியவந்தபோது, “இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தாமதப்படுத்தினால் நாங்களே இதில் தலையிட நேரும்” என்று சந்திரசூட் எச்சரித்தார். இந்த நிலையில் மணிப்பூர் தொடர்பான வழக்கு ஒன்றில், இந்த விவகாரத்தை விசாரிப்பது கடினம் என்று சந்திரசூட் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக மணிப்பூரைச் சேர்ந்த ஒருவர், போதைப்பொருள், சட்டவிரோத ஊடுருவலில் குறிப்பிட்ட சமூகம் ஈடுபடுவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், “இந்த மனுவை ஏற்றுக்கொள்வதென்பது மிகவும் கடினமான விஷயம். ஏனெனில் இந்த மனு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின்மீது மட்டும் பழிசுமத்துகிறது.

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

அவர்களை மட்டுமே இதற்குப் பொறுப்பேற்கச் சொல்கிறது. மேலும், புலம்பெயர்ந்தவர்கள்தான் வன்முறையைத் தூண்டிவிட்டதாகவும், இதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்த மனு கூறுகிறது. இந்த மனு வன்முறை, போதைப்பொருள், காடழிப்பு என அனைத்தையும் காட்டுகிறது. அரசியலமைப்புப் பிரிவு 32 அதைக் கட்டுப்படுத்த முடியுமா… இது நீதித்துறையின் தரங்களுக்கு ஏற்றதல்ல. எனவே, இந்த நிலையில் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும், சட்டத்தின்கீழ் கிடைக்கும் தீர்வுகளைப் பின்பற்றுமாறும் நாங்கள் கூறுவோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *