“ஆளுநர்‌ ரவியின்‌ புலம்பல்கள்‌ பற்றி எங்களுக்கு எந்தக்‌ கவலையும்‌ இல்லை!" – தங்கம் தென்னரசு

Whatsapp Image 2023 05 04 At 21 57 59.jpeg

தமிழக நிதியமைச்சர் தங்கம் தன்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் ஏதாவது புலம்பிக்‌ கொண்டு இங்குள்ள அரசியல்‌ களத்தை குழப்ப முயற்சித்து வருவதாகவும், அவரின் புலம்பல்கள் பற்றி தங்களுக்கு எந்தக்‌ கவலையும்‌ இல்லை என்றும் சாடியிருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தங்கம் தன்னரசு, “தமிழ்நாடு சட்டமன்றத்தால்‌ நிறைவேற்றி அனுப்பப்படும்‌ சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல்‌ அளிப்பது நீங்கலாக அனைத்துச்‌ செயல்களையும்‌ ஒழுங்காகச்‌ செய்து கொண்டிருக்கிறார்‌ ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி என்பதை தமிழ்நாட்டு மக்கள்‌ நன்கு அறிவார்கள்‌. திருக்குறள்‌ மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா, வள்ளலார்‌ பாட்டு முறையாக இருக்கிறதா என்பதைப்‌ பார்ப்பது முதல்‌, சனாதனம்‌ குறித்த தனது ஆய்வை தினமும்‌ செய்துகொண்டு வருகிறார்‌.

அமைச்சர் தங்கம் தென்னரசு

‘திராவிடம்‌’ என்ற சொல்லைக்‌ கேட்டாலே அவருக்கு எரிகிறது. திராவிடத்துக்கு எதிரான தனது வன்மம்‌ நிறைந்த வார்த்தைப்‌ போரைத்‌ தொடர்ந்து நடத்தி வருகிறார்‌. பா.ஜ.க.வின்‌ முந்தைய தலைவர்களில்‌ ஒருவரான தீனதயாள்‌ உபாத்தியாயாவின்‌ நூலை வெளியிட்டு நேற்றைய தினம்‌ பேசிய ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி, ‘திராவிடம்‌ பற்றிய பேச்சு பிரிவினையைப்‌ பிரதிபலிக்கும்‌ வகையில்‌ இருக்கிறது’ என்று பேசியிருக்கிறார்‌. இப்படிச்‌ சொல்லும்‌ அவர்‌, எந்த வகையில்‌ பிரிவினையைப்‌ பிரதிபலிக்கிறது என்று சொல்லியிருந்தால்‌ விரிவாக விளக்கம்‌ அளிக்கலாம்‌. பொத்தாம்‌ பொதுவாக, பிரிவினையை பிரதிபலிக்கிறது என்று அவர்‌ சொல்வதைப்‌ புலம்பலாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

‘திராவிடம்‌’ என்ற சொல்‌ ஒருகாலத்தில்‌ இடத்தின்‌ பெயராக, இனத்தின்‌ பெயராக, மொழியின்‌ பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல்‌ கோட்பாட்டின்‌ பெயராக இருக்கிறது. திராவிடம்‌ என்ற அரசியல்‌ கோட்பாட்டு வடிவம்‌ என்பது பண்டித அயோத்திதாசர்‌ , சர்‌.பிட்டி. தியாகராயர்‌, டாக்டர்‌ நடேசனார்‌, டி.எம்‌.நாயர்‌, தந்தை பெரியார்‌, இரட்டைமலை சீனிவாசன்‌, எம்‌.சி.ராஜா, பேரறிஞர்‌ அண்ணா, பாவேந்தர்‌ பாரதிதாசன்‌, கலைஞர்‌ போன்றவர்களால்‌ கடந்த நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல்‌ கருத்தியல்‌ ஆகும்‌. ‘சாதி பேதமற்ற திராவிடர்காள்‌’ என்று அழைத்தவர்‌ பண்டித அயோத்திதாசர்‌. இத்தகைய திராவிட இயக்கத்தின்‌ அடிப்படைக்‌ கொள்கைகள்‌ என்பவை, சுயமரியாதை, சமூகநீதி, சமதர்மம்‌, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, இந்தியக்‌ கூட்டாட்சி ஆகும்‌. இதனை உள்ளடக்கியது தான்‌ ‘திராவிட மாடல்‌’ ஆட்சியியல்‌ கோட்பாடு ஆகும்‌. இதில்‌ பிரிவினை எங்கே இருக்கிறது?

ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த அனைவரும்‌ சூத்திரர்கள்‌ என்ற கருதுகோளை விதைத்தது மனு நூல்‌. அதன்‌ 10-வது அத்தியாயம்‌ 44-வது சூத்திரத்தில்‌ தமிழகம்‌ என்பது திராவிடம்‌ என்றே அழைக்கப்படுகிறது. பெளண்டரம்‌, ஒளண்டரம்‌, திராவிடம்‌, காம்போசம்‌, யவநம்‌, சகம்‌, பரதம்‌, பால்ஹீகம்‌, சீநம்‌, கிராதம்‌, தநதம்‌, கசம்‌ இத்தேசங்களை யாண்டவர்க ளனைவரும்‌ மேற்சொன்னபடி சூத்திரராய்விட்டார்கள்‌’ என்கிறது மனு. எது தமிழர்களைக்‌ கொச்சைப்படுத்துவதற்குப்‌ பயன்படுத்தப்பட்ட சொல்லோ, அதனையே அரசியல்‌ ஆயுதமாகப்‌ பயன்படுத்தியது திராவிட இயக்கம்‌.

இத்தகைய திராவிட இயக்கமானது கடந்த நூறு ஆண்டு காலமாக, தமிழ்நாட்டின்‌ எழுச்சிக்கும்‌, மீட்சிக்கும்‌, உணர்ச்சிக்கும்‌ உயர்வுக்கும்‌, அடித்தளம்‌ அமைத்துவிட்டதே என்ற கோபத்தில்‌ திராவிடம்‌ என்ற சொல்லின்‌ மீது தனது காழ்ப்புணர்ச்சியைக்‌ காட்டி வருகிறார்‌ ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி. அவருக்கு ‘தமிழ்நாடு’ என்ற சொல்‌ பிடிக்கவில்லை. அதற்காக, தமிழ்நாடு என்ற மாநிலத்தின்‌ பெயரை மாற்றிக்‌ கொள்ள முடியாது. அவருக்கு ‘திராவிட இயக்கம்‌’ பிடிக்கவில்லை. அதற்காக திராவிடம்‌ என்ற சொல்லை நாங்களும்‌ மாற்றிக்‌ கொள்ளப்‌ போவது இல்லை. அடுத்து என்ன செய்யப்‌ போகிறார்‌ ஆளுநர்‌? ஆளுநராக வந்தவர்‌, இந்த மாநிலத்துக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்திருக்கிறாரா என்றால்‌ அதுவும்‌ இல்லை.

அமைச்சர் தங்கம் தென்னரசு

தினமும்‌ ஏதாவது புலம்பிக்‌ கொண்டு இங்குள்ள அரசியல்‌ களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார்‌. சனாதன, வர்ணாசிரம சக்திகளுக்கான திண்ணைப்‌ பிரசாரக்‌ களமாக ஆளுநர்‌ மாளிகையை மாற்றிக்‌ கொண்டு வருகிறார்‌. எந்த அவதாரம்‌ போட்டு வந்தாலும்‌ ஆரிய மாயையை அடையாளம்‌ காணும்‌ பேரறிஞர்‌ அண்ணாவின்‌ தம்பிகள்‌ நாங்கள்‌. கலைஞரின்‌ உடன்பிறப்புகள்‌ நாங்கள்‌. ஆர்‌.என்‌.ரவியின்‌ அன்றாடப்‌ புலம்பல்கள்‌ பற்றி எல்லாம்‌ எங்களுக்கு எந்தக்‌ கவலையும்‌ இல்லை. அவரை நாங்கள்‌ பொருட்படுத்தவே இல்லை என்பது தான்‌ உண்மை. திராவிட இயக்கத்தின்‌ கொள்கைகள்‌ தமிழ்நாட்டு மக்கள்‌ மனதில்‌ பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு நாள்தோறும்‌ தொண்டாற்றி வரும்‌ ஆளுநர்‌ அவர்களுக்கு நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *