என்.எல்.சி-க்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை – காவல்துறை கையாண்ட `விதம்' எப்படி?!

F05e89af Be47 4cfc 8de6 E13faa0bf2c8.jpg

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், நிரந்தரத் தொழிலாளர்கள், கம்பெனி தொழிலாளர்கள், சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும் என்.எல்.சி நிர்வாகம், தமிழக அரசுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் கொடுத்து வருகிறது.

நெய்வேலி அனல் மின்நிலையம்

இந்த நிலையில் நிலக்கரி எடுப்பதற்குப் போதுமான நிலம் இல்லை என்றும், அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் 1,000 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்தப்போகிறோம் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது என்.எல்.சி நிர்வாகம். அதையடுத்து, இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்காக மேல் வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழைப் பகுதிகளில் 2006 – 2013 காலகட்டங்களில் கையகப்படுத்திய நிலங்களில் கடந்த 26-ம் தேதி பணியைத் தொடங்கியது என்.எல்.சி நிர்வாகம். என்.எல்.சி சுரங்க நீரை வெளியேற்ற புதிய பரவனாறு அமைக்கும் அந்தப் பணிக்காக, நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயப் பயிர்கள் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, கால்வாய் தோண்டப்பட்டது. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீஸார் பாதுகாப்புடன் பணியைத் தொடர்ந்தது என்.எல்.சி நிர்வாகம்.

இதற்கிடையில், விவசாய நிலங்களில் ஜே.சி.பி இயந்திரத்தை இறக்கியதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தார்கள். அதையடுத்து, என்.எல்.சி-க்கு எதிராக ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். அதைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியது. அதோடு போராட்ட அறிவிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி ஜியாஉல்ஹக் தலைமையில் 2,000 போலீஸார் நெய்வேலி பகுதியில் குவிக்கப்பட்டனர். அத்துடன் நெய்வேலி நுழைவுவாயிலை சீல் வைத்ததுடன், வஜ்ரா வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.

என்.எல்.சி

முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நெய்வேலிக்கு வந்த அன்புமணி, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில், “தனியாருக்கு விற்கப்படவிருக்கும் என்.எல்.சி-க்காக தமிழக அரசு ஏன் நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும்… அது அரசின் வேலை கிடையாது. மீண்டும் தமிழக அரசை எச்சரிக்கிறோம். நிறுத்திக்கொள்ளுங்கள். இனி ஒரு பிடி மண்ணைக்கூட கையகப்படுத்தக் கூடாது. இதுவரை கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படையுங்கள்” என்று பேசிவிட்டு கீழே இறங்கினார். தொடர்ந்து பா.ம.க வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுடன் என்.எல்.சி நுழைவுவாயில் பகுதியை நோக்கிச் சென்றார் அன்புமணி. அவர்களை போலீஸார் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள் போலீஸார்மீது தண்ணீர் பாக்கெட்டை வீசியதுடன், போலீஸ் வாகனங்களை கல்வீசித் தாக்கினர். அதனால் போலீஸார் தடியடி நடத்த ஆரம்பித்தனர். ஆனால், அதன் பிறகும் போலீஸார்மீது கல்வீச்சைத் தொடர்ந்தனர் பா.ம.க-வினர். அதில் நெய்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீதின் மண்டை உடைந்தது. அவர் உட்பட 12 போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து, வானை நோக்கி கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. அப்படியும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், கல்வீசியவர்களை கலைப்பதற்காக, காவல்துறையின் வஜ்ரா வாகனம் மூலம் அவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அன்புமணி இருந்த காவல் பேருந்தின்மீதும் கற்கள் விழுந்தன. இதையடுத்து, பேருந்தில் இருந்து இறங்கிய பா.ம.க வழக்கறிஞர் பாலு, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர், அன்புமணி உட்பட கைதுசெய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

நெய்வேலி.

இதற்கிடையே, கலவரத்தில் காயமடைந்து என்.எல்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த காவலர்களை, தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஜூலை 28-ம் தேதி மாலை சந்தித்து ஆறுதல் கூறி, உடல்நலம் விசாரித்தார். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்திலேயே கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், என்.எல்.சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி ஆகியோருடன் டி.ஜி.பி ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி கண்ணன், “என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பா.ம.க முற்றுகைப் போராட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 பேர் கைதுசெய்யப்பட்டனர். போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அன்புமணியைக் கைதுசெய்தபோது, பா.ம.க தொண்டர்கள் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்தச் சம்பவத்தால் 6 காவலர்கள், 14 காவல் அதிகாரிகள் காயமடைந்தனர். 3 வாகனங்கள் சேதமடைந்தன. அவர்களுக்கு என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அன்புமணி கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு மண்டலத்தில் சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாக 800 பேர் வரை கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்” என்றார். இந்தச் சந்திப்பின்போது, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி பகலவன், விழுப்புரம் டி.ஐ.ஜி ஜியாஉல் ஹக் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஐ.ஜி கண்ணன்

இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “என்.எல்.சி விவகாரம் சர்ச்சையானது முதலே வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் அங்கு அனுப்பிவைக்கப்பட்டார். பா.ம.க போராட்டம் அறிவித்ததும் இரவு நேர அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த நேரங்களில் வெளியூர் செல்பவர்களுக்கு தனியார் வேன்கள் பயன்படுத்தப்பட்டன. காவல்துறை பாதுகாப்பும் வழங்கியது. அதோடு பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத் தலைவர்கள் சிலரிடம் முன்கூட்டியே பேச ஆரம்பித்தோம்.

அன்புமணி ராமதாஸிடமும் எந்த ஓர் அசம்பாவிதமும் ஏற்படாதவாறு போராட்டம் நடக்க வேண்டும் எனச் சொல்லியே அனுமதி கொடுக்கப்பட்டது. அதோடு டெல்டா மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் மூலமாகவும் அவரிடம் பேசப்பட்டது. வடக்கு மண்டலத்தின் பல இடங்களிலிருந்து காவல்துறையில் பணியாற்றும் இளைஞர்கள் பலர் வரவழைக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்களை என்.எல்.சி நிறுவனத்துக்குள் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அன்புமணி வந்து பேசிய பிறகு அவரை வேனில் ஏற்றும்போது, அந்த வேன்மீதும் சிலர் கல் எரிய ஆரம்பித்தனர். உடனே அவருக்கான பாதுகாப்பை அங்கு உறுதிசெய்தோம். அதன் பிறகு மண்டபத்துக்கு கொண்டு சென்றதும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி, காவல்துறை உயர் அதிகாரிக்கு கால் செய்து அன்புமணியிடம் பேச வைத்தார். அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தின் வீரியம் குறைய ஆரம்பித்தது.

கடலூர்:

என்.எல்.சி

போராட்டக்காரர்கள் கல் எரிந்தும்கூட, அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால்தான் கண்ணீர் புகை குண்டுகளைக்கூட வானை நோக்கிச் செலுத்தினோம். அதைத்தான், சிலர் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றனர். எந்த ஒரு சூழ்நிலையிலும் வன்முறையாக மாறிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைத்தோம். ஏனென்றால் இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி சம்பவம் போல் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

எங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், 28-க்கும் மேற்பட்டோர்மீது பொது சொத்துகள் சேதப்படுத்தியது, கலவரம் உருவாகத் தூண்டுதலாக இருந்தது போன்ற காரணங்களுக்காக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதுபோல் நடந்ததை அன்புமணியே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை” என்றார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *