“பாஜக-வில் யாருடைய வாரிசும் இல்லையா… சொன்னால் பதவி விலகி விடுவார்களா?” – கொதித்த ஸ்டாலின்

Whatsapp Image 2023 07 29 At 3 33 53 Pm.jpeg

திமுக இளைஞர் அணியின், இரண்டாவது மாநில மாநாடு, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “இளைஞர் அணியின் மாநாட்டில் பங்கு கொள்வதால், சொந்த ஊரில் கால் வைக்கும் போது ஏற்படும் அந்த புத்துணர்ச்சியை உணர்கிறேன். சொந்த வீட்டிற்கு வந்தது போல் இருக்கிறது. இப்போது எனக்கு வயது 70. ஆனால் இருபது வயது நபர் போல் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் இளைஞர் அணிதான்.

2-வது இளைஞர் அணி மாநாடு – முதல்வர் ஸ்டாலின்

இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு கிடைத்துள்ள பொறுப்பு உங்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். அதனால், இதை நீங்கள் பொறுப்பாக காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உதயநிதி ஸ்டாலின் 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞர் அணிக்கு சேர்த்து தி.மு.க-வின் வலிமையை கூட்டியிருக்கிறார். தேர்தலின் போது மேற்கொண்ட அவரின் செங்கல் பிரசாரத்தை மறக்க முடியாது. எதிர்கட்சிகளே அதை இன்னும் மறக்கவில்லை.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2019 தேர்தலுக்கு முன்பு ஊராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாடு முழுவதும் சுற்றி சுழன்று வேலை செய்தார். எதிரிகள் பரப்பும் அவதூறுகளை முறியடிக்கும் வகையில் கோவில்பட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, கலைஞர் பிறந்த ஊரிலிருந்து விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பரப்புரை பயணத்தை தொடங்கினார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் அவர் போட்டியிட்டாலும் மற்ற தொகுதியில் தான் அவர் அதிகமாக பிரசாரம் செய்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சட்டமன்ற உறுப்பினராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஏராளமான திட்டங்களை மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை மெரினாவில் திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளி தோழர்கள் அலையோடு விளையாடும் வீடியோ பார்த்திருப்பீர்கள். அதை பார்த்தபோது என்மனதில் சொல்லமுடியாத அளவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அது அவருக்கு மட்டுமல்ல நமது ஆட்சிக்கும் நல்ல பெயரைக் கொடுத்தது. 234 தொகுதிகளிலும் திராவிட பயிற்சி பாசறை கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி முடித்தார். இது அவரின் மகத்தான சாதனை. திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்தான் நமது இயக்கத்திற்கான விதைகள்.

உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பணி மற்றும் ஆட்சிப் பணியை ஒரே நேரத்தில் செய்து கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயரை வாங்கி கொடுக்கிறார். அதனால் நான், பிறந்த பலனை அடைந்தது போல நிம்மதியுடன் இருக்கிறேன். இளைஞர் அணியின் தீர்மானங்கள் நிறைவேற்றும் போது நான் மேடையில் இல்லை. நேற்று அந்த தீர்மானம் அனைத்தையும் செயலாளர் என்னிடம் காண்பித்தார். அதை பார்த்ததும், எனக்குள் ஒரு நிம்மதி வந்துவிட்டது. இல்லம்தோறும் இளைஞர் அணி என்றத் தீர்மானத்தை நான் பாராட்டுகிறேன். இது முக்கியமானத் தீர்மானம். கடந்த சில ஆண்டுகளாக கழகத்தை நோக்கி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

2-வது இளைஞர் அணி மாநாடு

இரண்டு ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றும் திட்டங்கள், மாணவர்கள் இளைஞர்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்த வேண்டும். புதிதாக இளைஞர் அணிக்குள் வருபவர்கள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை முழுமையாக தெரிந்தவர்கள், புரிந்தவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய இயக்கம் பேசி பேசி எழுதி எழுதி வளர்ந்த இயக்கம். நமது இயக்கத்தில் எத்தனை பேர் சேர்ந்தார்கள் என்பதைவிட, சேர்ந்த இளைஞர்கள் திராவிட எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்களா என்பது தான் முக்கியம். அதைத்தான் உன்னிப்பாக கவனித்துவருகிறேன்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றை அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளான சமூகநீதி, மொழி பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகியவற்றை குறித்து வகுப்பு நடத்த வேண்டும். நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்தது… தற்போது எப்படி இருக்கிறது? ஒவ்வொரு வீட்டிலும் அப்போது எத்தனைப் பேர் படித்தவர்கள்… தற்பொழுது எவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள்…. இரவு தூங்குவதற்கு முன்பாக திராவிட இயக்கத்தின் வரலாற்றை படிக்க வேண்டும். நமக்கு அடுத்தும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் வாரிசுகள் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். வாரிசு வாரிசு என்று ஏன் திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால் நம் எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறானோ அதே ஆயுதத்தை நாமும் எடுக்க வேண்டும்.

2-வது இளைஞர் அணி மாநாடு – முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்

கொள்கையை பேச எண்ணிக்கையை விட எண்ணம் தான் முக்கியம். முரசொலி தான் என்னை உருவாக்கியது. உங்களையும் உருவாக்கும். நாள்தோறும் பொய் சொல்லி இல்லாததை ஊதி பெரிதாகி, அதைப்பற்றியே நாம் பேச வேண்டும் எனச் சதி செய்பவர்களின் கருத்திற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அண்ணா, பெரியார், கலைஞர், ஆகியோர் என்னை செதுக்கிய சிற்பிகள். நானும் அவர்களைப் போல அடையாளமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதே போல தான் நீங்களும் இருக்க வேண்டும். உங்களின் வளர்ச்சி, கொள்கை வளர்ச்சியாக இருக்க வேண்டும். பதவியின் வளர்ச்சியாக இருக்கக் கூடாது.

நான் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதால் பெருமை கொள்கிறேன் என்று நினைக்கிறீர்களா… நாட்டிற்கு நன்மை செய்யும் இடத்தில் நான் இருக்கிறேன் என்றுதான் பெருமை கொள்கிறேன். அண்ணா, கலைஞர் உட்கார்ந்த நாற்காலியில் நான் உட்காரவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அதனால்தான் இது தனிப்பட்ட என்னுடைய ஆட்சி மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சி. கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த வாழவைக்கும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. இந்தியா என்ற பெயரை கேட்டாலே சிலர் அலறுகிறார்கள். பாட்னா கூட்டமும், அதைத் தொடர்ந்த பெங்களூரு கூட்டமும் வெற்றி பெற்றிருக்கிறது. இதை பார்த்து பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மோடி – அமித் ஷா

பா.ஜ.க-வில் யாருடைய வாரிசும் கட்சியில் இல்லையா… அதில் இருக்கும் வாரிசுகளை சொன்னால், நாளை காலையே பதவி விலகி விடுவார்களா… மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திடீரென்று மீனவர்கள் மீது பாசம் வந்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சென்னையில் பிரதமர் மோடி பேசும்போது, 1600 மீனவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் விடுவிக்கப்பட்டதாக சொல்கிறார். அப்படி என்றால் பா.ஜ.க ஆட்சியில் 1600 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார்களா? குற்ற வழக்குகளில் தொடர்புடைய மத்திய அமைச்சர்கள் எல்லாம் பிரதமருடைய அமைச்சரவையில்தானே இருக்கிறார்கள்?

செந்தில் பாலாஜி குறித்து கேள்வி கேட்கும் அமைச்சர் அமித் ஷாவுக்கு, குற்றவழக்குகளில் இருப்பவரகள் எல்லாம் பிரதமர் அமைச்சரவையில் இருப்பவர்கள் தானே… அவர்களை கேள்வி கேட்கும் தைரியம் இருக்கிறதா? அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு குறித்து எனக்குப் பேசத் தோன்றுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் என்னால் பேச முடியவில்லை. புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரான கட்சிகளை மிரட்டி பா.ஜ.க-வுக்கு மாற்றும் செயலில் ஈடுபடுகிறது பா.ஜ.க அரசு. நாட்டில் அமலாக்க துறையை வழிநடத்துவதற்கு தகுதியான அதிகாரிகளே இல்லையா? எதற்கு சஞ்சய் குமாரின் பதவி நீட்டிப்பு? மத்திய அமைச்சர்களின் ஆட்டமெல்லாம் இன்னும் சில மாதங்களுக்குத்தான்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

பா.ஜ.க-வின் ஆட்சி முடியப் போகிறது. இந்தியாவிற்கு விடியல் பிறக்கப் போகிறது. அமித் ஷா தமிழ்நாட்டிற்காக ஒன்றிய அரசின் புதிய திட்டங்களை திறந்து வைக்க வந்தாரா… ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க வந்தாரா…. இல்லையே… ஏதோ பாதை யாத்திரையை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாத யாத்திரையல்ல… பாவ யாத்திரை. இரண்டு மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூருக்கு சென்று அமைதி யாத்திரை நடத்த முடிந்ததா…

குடும்பக் கட்சி என்று திரும்பத் திரும்ப சொல்கிறார். கேட்டு கேட்டு புளித்து போய்விட்டது. ஒன்றிய அரசின் ஆட்டமெல்லாம் இன்னும் சில மாதங்கள்தான். இந்தியாவை காப்பாற்ற India விற்கு வாக்காளியுங்கள். மக்களை சந்திப்பது தான் மகத்தான பணி. இளைஞர் அணியில் இருந்துதான் நாங்கள் அனைவரும் வந்தோம். நாங்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் அனைவரும் ஒரு காலத்தில் வரத்தான் போகிறீர்கள். தலைவர் என்ற முறையில் மட்டுமல்ல உங்களில் ஒருவனாக உங்களை வாழ்த்துகிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *