NLC: அரசின் பாதுகாப்புடன் நெற்பயிர்கள் விளைந்த நிலங்களில் இறங்கிய என்.எல்.சி… யார் பொறுப்பு?!

1067199.jpg

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்ளில் என்.எல்.சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாங்க வேண்டும், மாற்று குடியிருப்பு மற்றும் கடந்த காலங்களில் (2006 முதல் 2013 வரை நிலத்தை கையகப்படுத்தியதற்கு) ரூ.6 லட்சம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையின் காரணமாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

என்.எல்.சி

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (ஜூலை 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், என்.எல்.சி நிர்வாகம், விவசாயிகள் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று (ஜூலை 26) காலை வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக என்.எல்.சி இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட ராட்ச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு வந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணை போடும் பணி நடைபெற்றது. இதில் விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் வாய்க்கால் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தொடர்ந்து அந்த இடங்கள் பதற்றமானதால், விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்.பி ராஜாராமன் ஆகியோர் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், தண்ணீர் பீச்சி அடிக்கும் இயந்திரம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்து பாமக-வினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றபோது போலீஸார் அவர்களை கைது செய்து சேத்தியாதோப்பு தனியார் மண்டபத்தில் வைத்தனர்.

சீமான்

இந்த சம்பவத்திக்கு, ‘உழவைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இதன் வலியும் வேதனையும் புரியும். இந்த வலியும் வேதனையும் உண்ணக்கூடியவர்களுக்கும் உணரும் காலம் விரைவில் வரும். பயிர்களையெல்லாம் சாகடித்து நிலத்தைக் கையகப்படுத்துகிறோமே என்கிற, குறைந்தபட்ச அறிவும், அறமும், குற்ற உணர்வும் அற்றுப்போய் நிலத்தை அம்மணப்படுத்துவதுதான் அதிகாரத் திமிரின் அட்டூழியம்’ என்று சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவித்துவருகின்றனர்.

அதன்படி, “நெய்வேலி நிறுவனத்தில் பறிபோகும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தமிழர் நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்புக் காட்டுவது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்” என்று கடுமையாக விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவ்விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், “உழவர்களின் நண்பன் என்று தமிழகத்தை ஆளும் திமுக அரசு கூறிக்கொள்கிறது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதை சாதனையாகக் காட்டிக் கொள்கிறது. ஒருபுறம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இன்னொருபுறம் விவசாயிகளின் நிலங்களை அவர்களிடமிருந்து பறிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ரமதாஸ், தனது அறிக்கையில், “கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சி-க்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டிருக்கின்றன.

மக்கள்நலன் காக்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, “மக்களா…. பெரு நிறுவனங்களா? என்றால், மக்களின் பக்கம் தான் அரசுகள் நிற்க வேண்டும். ஆனால், சுற்றுச்சூழலை சீரழித்து மின்சாரம் தயாரித்து, அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்யும் என்.எல்.சி நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. அதற்காக மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் தயாராக இருக்கிறது. தமிழக அரசுக்கு இவ்வளவு துடிப்பும், ஆர்வமும் ஏன்?

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சியின் பங்களிப்பு இல்லாமலேயே தமிழகத்தின் மின்தேவையை சமாளிக்க முடியும் எனும் போது என்.எல்.சிக்கு ஆதரவாக தமிழக அரசு துடிப்பது ஏன்? இந்த அளவுக்கு என்.எல்.சிக்கு ஆதரவாக திமுக அரசு, உள்ளூர் அமைச்சர், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்படுவதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிந்துள்ளனர்.

இதை கடலூர் மாவட்ட உழவர்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும். அனைத்தையும் இழந்து விட்டு, கொதித்து நிற்கும் உழவர்கள் வெகுண்டெழுந்து போராடும் நிலையையும், அதனால் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சிக்கல் ஏற்படக்கூடிய நிலையையும் தமிழக அரசும், என்.எல்.சி நிறுவனமும் ஏற்படுத்தி விடக் கூடாது. உழவர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் காக்க எந்த எல்லைக்கும் சென்று போராட பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏ அருண்மொழித்தேவன்

‘விவசாயிகளின் பயிர்களை அழிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு, தமிழக அரசு துணை நிற்பதாக’ குற்றம்சாட்டியுள்ள அதிமுக, புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், “என்.எல்.சி நிறுவனத்துக்கு தங்கள் வீடு, நிலங்கள் கொடுத்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும், கோரிக்கைக்காவும் தொடர்ந்து போரடி வருகிறார்கள். விவசாயிகளை வஞ்சித்து கொண்டிருக்கின்ற என்.எல்.சி நிறுவனத்துக்கு தமிழக அரசு துணை போவது வேதனைக்குறிய விஷயமாகும். அறுவடைக்கு தயராகி நிற்கும் இந்த பயிர்கள் அழிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்கிறார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், “டெல்லியில் நிலக்கரித்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷியை சந்தித்து என்.எல்.சி தொடர்பாக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறேன். மிக முக்கியமாக, வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி நில எடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்குமாறும் கோரியிருக்கிறேன். அமைச்சரும், இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் பேசிவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அஸ்வத்தாமன்

எங்களுடைய தேவைக்காக எங்களுக்கு இவ்வளவு நிலம் வேண்டும் என்றுதான் என்.எல்.சி கூற முடியும். அதை எடுத்து தர வேண்டிய பகுதி தமிழக அரசை சார்ந்தது. தீர்வு எட்டப்பட்டு வரும் சூழ்நிலையில் மத்திய அமைச்சரை நான் சந்தித்துள்ள நிலையில், அவசர அவசரமாக இந்த செயலை தமிழக அரசின் அதிகாரிகள் செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே இது சம்பந்தமாக என்.எல்.சி சேர்மனை சந்தித்து பேசும் போது அவரிடம் நிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற தொகையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்தேன். ‘அது எங்களுடைய கைகளில் இல்லை. மாநில அரசாங்கம் கூறுகிற விலையை விட அதிகமாக தருவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறினார். இதிலிருந்தே, நில எடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை என்.எல்.சி-யினுடைய பகுதி என்பது மிக குறைந்த அளவு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இப்போது நிலம் எடுப்பது குறித்து எங்களுடைய மாநிலத் தலைவர் என்.எல்.சி சேர்மேன்னிடம் உடனடியாக பேசியுள்ளார். எனவே பாஜக எடுக்கிற தொடர்ச்சியான நடவடிக்கைகளால் நிச்சயமாக வளையமாதேவி, கருவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், கம்மாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில எடுப்பு பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்படும். அதுவரை தமிழக அரசின் அதிகாரிகள், இது போன்ற அவச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்” என்றார்.

கலெக்டர் அருண் தம்புராஜ்

நிலைமை இவ்வாறு இருக்க, என்.எல்.சி நிர்வாகத்தின் நிலம் கையகப்படுத்தும் பணியில், பாதிக்கப்பட்ட 74 விவசாயிகளுக்கு உயர் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்.எல்.சி. தற்போது பணிகளை மேற்கொண்டு வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பயிரிட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். இருந்தும் அவர்கள் பயிரிட்டு அழிந்த பயிருக்கு உயர் இழப்பீடு வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் பழ செல்வகுமார், “என்.எல்.சி என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம். அதன்படி இங்கு இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என்ன சலுகைகள் அரசிடம் எதிர்பார்க்கிறார்களோ அதைத்தான் என்.எல்.சி-யும் எதிர்பார்க்கிறது. மத்திய அரசால் நடத்தப்படும் இந்த பொதுத்துறை நிறுவனத்தை எதிர்த்து போராடுபவர்கள், மத்திய பாஜக அரசின் கூட்டணியில் இருப்பவர்கள்தான். இவர்கள் நேரடியாக அங்கேயே பேசி இந்த திட்டத்தை வராமல் இருப்பதற்கோ அல்லது மக்களின் பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகளை அங்கேயே பேசி சரி செய்யலாம். ஆனால், அவர்களின் சுயலாபத்துக்காக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மாநில அரசு மீது காழ்ப்புணர்ச்சியில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

உண்மையில் மக்களுக்காக போராடுபவர்கள் அங்குதான் பேச வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தை நாளை தனியாருக்கு தாரைவார்த்தால், புதிதாக வரும் அந்த நிறுவனம் மக்களிடம் நிலத்தை வாங்க முடியாது. எனவே அடுத்த முப்பது வருடத்துக்கு தேவையான நிலத்தை மத்திய அரசு அடியாள் வேலைபார்த்து மக்களிடமிருந்து பிடுங்குகிறார்கள். அதேநேரத்தில் அங்கிருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதாக சொன்னார்கள். அதுவும் இன்னும் ஏதும் நடக்கவில்லை. இப்போது தனியாருக்கு தாரை வார்க்க நிலத்தை கையகப்பத்தும் மத்திய அரசு, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *