`நடைப்பயணம் போகவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை..!' – ஜெயக்குமார் தடாலடி!

Vikatan 2023 07 530e4a18 B048 400e A0cb Ce5c643d081e 64b625190671f.jpg

அண்ணாமலையின் நடைப்பயணம், அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்விகளை எழுப்பினேன்.

“நடைப்பயணத்துக்குப் பிறகு மிக முக்கியத் தலைவராக அண்ணாமலை உருவெடுத்துவிடுவார் என்கிறார்களே… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கும். அவருக்கும் இருக்கிறது. அதை எப்படிக் குறைசொல்ல முடியும்?”

“தி.மு.க அரசைக் கண்டித்து பா.ஜ.க-போல அ.தி.மு.க-வும் ஒரு நடைப்பயணம் மேற்கொள்ளவில்லையே ஏன்?”

“எங்களுக்கு என்ன தேவை இருக்கிறது… நாங்கள் ஏற்கெனவே வளர்ந்துவிட்ட பெரிய கட்சி. மக்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். அ.தி.மு.க உயிரோட்டமாக இருக்கிறது.”

அண்ணாமலை

“அ.தி.மு.க வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட இயலாத அளவுக்கு ஆளுநர், அண்ணாமலை, மத்திய பா.ஜ.க அரசு என மும்முனைகளிலிருந்து அணை போடப்படுகிறதா?”

“அது சமூக வலைதளங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு வீண் பிம்பம். எங்களுக்கு யாரும் அணை போட முடியாது. நீங்கள் சொல்வதுபோல எங்களுக்கு யாராவது அணை போட்டால், எங்களால் இயங்க முடியுமா… எல்லா பிரச்னைகளுக்கும் நாங்கள் போராடிக்கொண்டுதானே இருக்கிறோம்?”

“ஆனால் பா.ஜ.க நடத்தும் போராட்டங்கள், உங்களைவிட மிக அதிகமாக இருக்கிறதே?”

“இதை முழுமையாக மறுக்கிறேன். அ.தி.மு.க இமயம்போல வளர்ந்திருக்கிறது. கட்சிரீதியாக எங்களுக்கு 75 மாவட்டங்கள் இருக்கின்றன. ஒரு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால், பத்தாயிரம் பேர் திரள்கிறார்கள். எங்கள் கட்சியின் போராட்டத்தோடு மற்ற கட்சிகளின் போராட்டத்தை எப்படி ஒப்பிட முடியும்… பா.ஜ.க-வை குறைசொல்ல நான் இதைச் சொல்லவில்லை. நாங்கள் பெரிய கட்சி என்பதற்காகச் சொல்கிறேன். ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தியபோது சென்னையே ஸ்தம்பித்ததே?”

அ.தி.மு.க பேரணி

“ `ஆளுநர் சட்டத்தை மீறி செயல்படுகிறார்’ என குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதினால், தி.மு.க சரண்டர் ஆகிவிட்டது என எடப்பாடி சொல்வது முரணாக இல்லையா?”

“முதல்வர் என்ன புனித அவதாரம் எடுத்து வந்தவரா… வானத்திலிருந்து குதித்த தேவதூதரா… யோக்கிய சிகாமணியா… ஊழலில் திளைத்து, ஊழலில் வளர்ந்த கட்சி தி.மு.க. அதனால்தான் ஆட்சி கலைந்தாலும் கவலையில்லை என ஸ்டாலின் சொல்கிறார். உளவுத்துறை மூலம் அவருக்கே தகவல் கிடைத்திருக்கலாம். அதனால் நம்பிக்கையில்லாமல் அப்படிச் சொன்னார். கடிதம் எழுத முதல்வருக்கு என்ன முகாந்திரம் இருக்கிறது என்ற அடிப்படையில் எங்கள் பொதுச்செயலாளர் கேட்டார்.”

“ஆட்சியைக் கலைக்கும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது?”

“சட்டம், ஒழுங்கு, ஊழல், மத்திய அரசு ஊழியர்களைப் பணிசெய்யவிடாமல் தடுப்பது, போதை வஸ்துகள் பயன்பாடு, விற்பனை அதிகரிப்பு, இந்த ஆட்சியில் எழுத்துரிமை-பேச்சுரிமை-கருத்துரிமை கிடையாது. எதிர்க்கட்சிகளை ஒடுக்க பொய் வழக்குகளைப் போடுகிறார்கள். ஆட்சி கலைக்கப்பட்டால், அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு மக்களுக்கே நல்ல செய்திதான்.”

ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

“அ.தி.மு.க ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் இருந்திருக்கின்றன. இப்போது சட்டம், ஒழுங்கைக் காக்க முதல்வர் நேரடியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்திக்கொண்டுதானே இருக்கிறார்?”

“மனிதன் தோன்றிய காலத்திலிருந்து குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. குற்றங்களைத் தடுப்பதும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதும்தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். அதை செய்ய தி.மு.க அரசு தவறிவிட்டது.”

“`அ.தி.மு.க ஆலமரம், பா.ஜ.க செடி’ என்றீர்களே… அந்தச் செடிக்கு எத்தனை இடங்கள் கொடுப்பீர்கள்?”

“அண்ணாமலைக்குப் பதிலடி கொடுக்கும்போது இந்தக் கருத்தைச் சொன்னேன். அவரே அவர் பேசியதை உணர்ந்துவிட்டார். சீட் குறித்துப் பேசுவதெல்லாம் இப்போது உகந்ததல்ல. கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதற்காக குழுக்கள் அமைப்போம். அந்தக் குழுக்கள் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி, எந்தெந்த தொகுதிகளைக் கொடுக்க முடியும்… கொடுக்க முடியாது என்று சொல்லும். அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவோம். அது மிகப்பெரிய பணி. ஒவ்வொரு கட்சிக்கும் ஆசை இருக்கலாம். ஆனால், ஆசைப்படுகிறார்கள் என்று எங்களால் தூக்கிக் கொடுத்துவிட முடியாது. எங்களுக்கு எங்கள் கட்சியின் நலன்தான் முக்கியம்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *