மணிப்பூர்: "நாட்டைக் காத்தேன் குடும்பத்தைக் காக்க முடியவில்லை"- பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கண்ணீர்

Whatsapp Image 2023 07 21 At 21 18 52.jpeg

பா.ஜ.க ஆளும் மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மைச் சமூகமான பழங்குடியல்லாத மைதேயி இனக்குழுவுக்கும், பழங்குடிச் சமூகமான குக்கி இனக்குழுவுக்கிடையே மே 3-ம் தேதி முதல் வன்முறைத் தீ அடங்காமல் எரிந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு முறையும் கலவரத்தில் இத்தனை உயிர்கள் பலியாகின என்று செய்திகள் வரும்போதெல்லாம், `கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகிறோம்’ என வெறும் வாய்வார்த்தையாகவே சொல்லிக்கொண்டிருந்தது இரட்டை இன்ஜின் பா.ஜ.க அரசு. பலி எண்ணிக்கை நூற்றைம்பதைத் தாண்டிவிட்டது. ஆனால், அவர்களின் அந்த ஒற்றை வாசகம் மட்டும் மாறவில்லை.

மணிப்பூர் வன்முறை – பாஜக

இப்படியிருக்க இவ்வளவு நாளாய் போலீஸாராலும், அரசாலும் இரண்டு மாதங்களாய் மூடிவைத்துவரப்பட்ட கொடூரமான சம்பவம், நேற்று முன்தினம் வீடியோவாக வெளியாகி நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி, மனிதத்தை எரித்துக்கொண்டிருக்கிறது. மே 4-ம் தேதியன்று குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு, நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அந்தச் சம்பவம், பா.ஜ.க ஆளும் இந்தியாவில் ஒரு கரும்புள்ளியாய் ஒட்டிக்கொண்டது.

எதிர்க்கட்சிகளின் பல்வேறு கண்டனங்களுக்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தத் தயார் என்று கூறிய மத்திய பா.ஜ.க அரசே, தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றன என்று மணிப்பூர் பற்றி வாய்திறக்காமல் இரண்டு நாள்களாக அவைகளை ஒத்திவைத்துவருகிறது. இன்னொருபக்கம் வீடியோ பரவி பிரச்னை வெடித்த பிறகு, அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் நான்கு பேரைக் கைதுசெய்துவிட்டதாகக் கூறும் மணிப்பூர் காவல்துறை, `இரண்டு மாதங்களாக ஆதாரம் கிடைக்காததால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறுகிறது.

மணிப்பூர் நிர்வாணக் கொடுமை

ஆனால், போலீஸார்தான் அந்தக் கொடூரக் கும்பலிடம் தங்களை விட்டுச் சென்றதாக, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் பகிரங்கமாகக் கூறுகிறார். இத்தகைய அவலங்களுக்கு மத்தியில் இன்னொரு மிகப்பெரும் அவலம் என்னவென்றால், அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரின் மனைவியாவார்.

இந்த நிலையில் அந்தக் கொடூரக்காட்சிகளை நேரில் பார்த்தவரும், ராணுவத்தில் பணியாற்றியவருமான அந்த நபர், தன் கண்முன்னே நடந்த அவலத்தைப் பற்றி தற்போது கூறியிருக்கிறார். பிரபல தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது இதை விவரித்த அந்த நபர், “இந்திய நாட்டுக்காக கார்கில், இலங்கையில் ராணுவ வீரராகச் சண்டையிட்ட என்னால், என் குடும்பத்தையும் என் மக்களையும் இன்று காப்பாற்ற முடியவில்லை. அந்தக் கொடூரக் கும்பல் பெண்களைத் தனியாக அழைத்துச் சென்றது. அதில் 2-3 பெண்கள் இருந்தனர். அந்தப் பெண்களில் ஒருவர் என் மனைவி. அந்தக் கும்பலில் இருந்தவர்கள் பெண்களிடம் ஆடைகளைக் கழற்றுமாறு கட்டாயப்படுத்தினர்.

மணிப்பூர் நிர்வாணக் கொடுமை

எங்கள் கிராமத்தினர் சிலர் அந்தப் பெண்களைக் காப்பாற்ற முயன்றபோது, அந்த மிருகங்கள் அதிலிருந்த பெண்ணின் தந்தையைக் கடுமையாகத் தாக்கிக் கொன்றனர். காவல்துறையும் மைதேயி சமூகத்தினருடன் நின்றது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்காலத்திலும் நாங்கள் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது போன்ற சூழ்நிலையில், எதிர்காலத்தில் நாங்கள் எவ்வாறு வாழ முடியும். நாங்கள் தனித்தனியாகத்தான் வாழ வேண்டும். அதுதான் சரியானதும்கூட” என்று கூறினார்.

இறுதியில் பிரதமரிடம் நீங்கள் என்ன கோரிக்கை வைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, “இத்தகைய குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *