`செந்தில் பாலாஜி, எந்தச் சட்டப்பிரிவின்கீழ் அமைச்சர் தகுதியை இழக்கிறார்?' – கேள்வியெழுப்பிய நீதிபதி

Whatsapp Image 2023 07 14 At 17 54 40.jpeg

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி, துறை ஏதும் இல்லாத அமைச்சராக நீடிப்பார் என கடந்த மாதம் 16-ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரியும், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்வதாகவும் ஜூன் 29-ம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர் ரவி, அடுத்த சில மணி நேரத்தில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாக அறிவித்தார். ஆளுநரின் இந்த முடிவை ரத்துசெய்யக் கோரி, வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜி

அதேபோல, `செந்தில் பாலாஜி எந்தத் தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார்?’ என தமிழக அரசிடம் விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி கொளத்தூரைச் சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன், அ.தி.மு.க முன்னாள் எம்.பி ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, “செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் அதிகாரத்தை இழந்துவிட்டார்.

அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தாலே, அவர்கள் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிடுகின்றனர். ஒரு மாதத்துக்கு மேல் காவலிலுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்?” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, “இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகத் தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் எனும்போது, எந்தச் சட்டப்பிரிவின்கீழ் செந்தில் பாலாஜி தன்னுடைய தகுதியை இழக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, “செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ-வாக நீடிக்கலாம். ஆனால், எந்தத் துறையும் இல்லாமல் அமைச்சராக நீடிக்க முடியாது.

செந்தில் பாலாஜி

இதே போன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் அமைச்சர்களாக நீடிக்கவில்லை. மேலும், சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என்ற வழக்கு, இதுதான் முதல் முறை. இது போன்ற வழக்கு வேறு எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 163-ல் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது என ஆளுநர் கூறியிருக்கிறார்.

எனவே, அவர் அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அவர் அமைச்சராக நீடித்தால் அவர்மீது அமலாக்கத்துறை பதிவுசெய்திருக்கும் வழக்கு விசாரணையில் அவர் தலையிட வாய்ப்பிருக்கிறது என்ற அச்சம் இருக்கிறது. எனவே, அவரை முதல்வரே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என வாதிட்டார். அதைத் தொடர்ந்து, எம்.எல்.ரவி தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி, “செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது.

முதல்வர் ஸ்டாலின் – செந்தில் பாலாஜி

மேலும், நீக்கத்துக்கும், அதை நிறுத்திவைத்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் எந்தப் பதவியிலும் இல்லை. அவர் அமைச்சராகப் பதவியில் தொடர அவருக்கு மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படவில்லை” என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *