கட்டுக்கட்டாக பணம்.. ரூ.41.9 கோடி பொன்முடி தொடர்பு இடங்களில் பறிமுதல்! இந்தோனேசியா பறந்த ரூ.100 கோடி | Rs.41.9 crore deposit found in Ponmudi related places by ED raid

Newproject13 1689620745.jpg

Chennai

oi-Noorul Ahamed Jahaber Ali

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ள அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

rs-41-9-crore-deposit-found-in-ponmudi-related-places-by-ed-raid

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் இல்லம், அலுவலகங்களில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதே நாள் இரவே அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

இந்த நிலையில் செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

பொன்முடி மற்றும் அவரது மூத்த மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கௌதம் சிகாமணி, அவரது இளைய மகனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவருமான மருத்துவர் அசோக் சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டன.

விழுப்புரம் மற்றும் சென்னை சைதாபேட்டையில் அமைச்சரின் வீடு, கௌதம் சிகாமணி அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், அசோக் சிகாமணிக்கு சொந்தமான மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் உள்ள வீட்டில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, அவரது மகன் அசோக் சிகாமணி ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வைத்தே தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அதேபோல் வங்கி அதிகாரிகளும் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.

தொடக்கத்தில் இந்த சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனை அடுத்து அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை 15 மணி நேரம் கழித்து முடிவுக்கு வந்து இருக்கும் நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள பொன்முடியின் அலுவலகத்தில் நாளை சோதனை தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்து உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், வைப்புத் தொகை தவிர்த்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு சுரங்க நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அனுப்பப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்கமளித்து உள்ளனர். இது தொடர்பாக பொன்முடி மீது அமலாக்கத்துரை வழக்கும் பதிவு செய்து உள்ளது. கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

English summary

The enforcement department has filed a case against Minister Ponmudi, who has reported that Rs.41.9 crore seized

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *