மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சூரியன், குரு – சுக ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு – என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 22-04-2024 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: மேஷ ராசி அன்பர்களே… இந்த வாரம் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். மனதடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானம் நடுநிலைமையாக இருக்கிறது.
தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.
குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்களுக்கு சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள்.
கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: துர்க்கையை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சனி – லாப ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 22-04-2024 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: ரிஷப ராசியினரே… இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும்.
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பெண்களுக்கு எதை பற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம்.
அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: நவக்கிரகத்தை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சனி – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு – லாப ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 22-04-2024 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: மிதுன ராசியினரே… இந்த வாரம் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது.
கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும்.
அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க முன்ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |