புதுச்சேரி: “செந்தில் பாலாஜியின் நிலைதான் முதல்வர் ரங்கசாமிக்கும்!” – காங்கிரஸ் எம்.பி சொல்வதென்ன ?

1622017278812.jpg

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் 139-ம் ஆண்டு அமைப்பு தினம், வைசியாள் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேரு, காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியின் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, “மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து மக்கள் விரோதமாகச் செயல்பட்டு வருகிறது. அதைத் தடுக்க வேண்டும் என்றால் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மோடியை கண்டு முதல்வர் ரங்கசாமி பயப்படுகிறார். மோடியை காட்டி ரங்கசாமியை மிரட்டுகிறார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். கவர்னர் தமிழிசையும் ரங்கசாமியை மிரட்டுகிறார். அதனால் பா.ஜ.க கூட்டணியை விட்டு ரங்கசாமி வெளியே வரவே மாட்டார்.

காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

ஒரு வேளை அவர் வெளியே வந்தால், தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் ரங்கசாமிக்கும் ஏற்படும். பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு செல்லாதீர்கள் என நான் ரங்கசாமியிடம் சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. சேராத இடத்தில் சேர்ந்தால் இந்த நிலைமைதான் ஏற்படும். நான் எப்போது ரங்கசாமியிடம் கூறினேன் என அனைவரும் நினைக்கலாம். தமிழிசை கவர்னராக பொறுப்பேற்றபோது எனது அருகில்தான் ரங்கசாமி அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம், பா.ஜ.க கூட்டணிக்கு போகாதீர்கள் என கூறினேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. அதன் பிறகு அவர் என் பக்கம் திரும்பவும் இல்லை. அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் பிரீபெய்டு மின் மீட்டர் கொண்டு வரப்பட்டது என கூறியுள்ளார். இதை அவர் ஒரு வார காலத்தில் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் அரசியலை விட்டே விலக வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *