`தமிழ்நாட்டு அரசியலில் தலையை நுழைப்பதற்கு தமிழிசைக்கு என்ன அருகதை இருக்கிறது?’ – சாடும் புதுவை திமுக | Puducherry DMK questioned lieutenant Governor Tamilisai for criticizing Tamil Nadu Government

65605fd3523c3.jpg

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காகச் சென்ற தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, “தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை, தமிழக அரசு இன்னும் எச்சரிக்கையுடன் கையாண்டிருக்க வேண்டும். எச்சரிக்கை முன்னேற்பாடுகளைச் சரியாக எடுத்திருக்க வேண்டும். தமிழக மழை வெள்ளத்தில் திராவிட மாடல், திண்டாடும் மாடலாக மாறிவிட்டது” என்று தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தமிழிசையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பேசியிருக்கும் புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா, “புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, தான் இன்னும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் என்ற நினைப்பிலேயே தினம் தினம் அரசியல் விமர்சனம் செய்து வருகிறார். அவரது பேச்சில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற பழைய  துருபிடித்த வார்த்தை மட்டும்தான் இல்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின்

மற்றபடி அவர் பா.ஜ.க தலைவராக இருந்தபோது என்னவெல்லாம் அரசியல் பேசினாரோ, அதே பேச்சைத்தான் தற்போது ஆளுநராக இருக்கும்போதும் பேசி வருகிறார். ஆளுநர் என்ற பதவியின் கௌரவத்தையும், தகுதியையும் குழிதோண்டி புதைத்து வருகிறார். திராவிட மாடல் என்பது சமூகநீதியாகும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கப் பெறுவது. தமிழிசை போன்ற சூத்திர சமூகம், டாக்டராக, இன்ஜினீயராக, பட்டதாரியாக, ஆட்சியாளராக உயர்வதற்கான அடித்தளம் அது. கடந்த 100 ஆண்டுக்கால தமிழக முன்னேற்றமே அதுதான். அதைக்கண்டு அலரும் பா.ஜ.க–வினர், எதற்கெடுத்தாலும் திராவிட மாடலை ஒப்பிடுவதும், குறை காண்பதும் அற்பத்தனமானது. இவ்வளவு பேசும் தமிழிசை அவர்களே, நீங்கள் பொறுப்பில் உள்ள இந்த புதுச்சேரியின் யோக்கியதை என்ன… தலைமைச் செயலர், துறை செயலர் உள்ளிட்ட எந்த அதிகாரியும் வேலையே செய்வதில்லை என்று, உங்களை மேடையில் வைத்துக் கொண்டே முதல்வர் ரங்கசாமி குற்றப்பத்திரிகை வாசித்தாரே… நீங்கள் தானே புதுச்சேரி மாநில தலைமை நிர்வாகி, அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *