`அட்டாக்’ மோடில் அமித் ஷா; அடித்து ஆடும் ஸ்டாலின் – தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

64889a8a6dbca.jpg

234 தொகுதிகளிலும் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை ஜூலை 28-ம் தேதி, ராமநாதபுரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். அதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “அண்ணாமலை மேற்கொள்ளப்போகிற இந்த நடைப்பயணம், தமிழ்நாட்டின் குடும்ப ஆட்சியை ஒழிக்கப்போகிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து விடுவிப்பதற்கான நடைப்பயணம் இது. சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துவதற்காக நடத்தப்படுகிற நடைப்பயணம் இது” என்றார்.

சமீபத்தில் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் மிகப்பெரிய சர்ச்சையாகி, அதிமுக-வினருக்கும் அண்ணாமலைக்கும் இடையே மிகப்பெரிய மோதல் போக்கு உருவான சூழலில், “எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சிக்கால ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மீண்டும் கொண்டுவருவதற்காக நடத்தப்படும் நடைப்பயணம் இது” என்றும் அமித் ஷா கூறியது அதிமுக-வினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணாமலை நடைப்பயணம்

அந்தக் கூட்டத்தில் திமுக-வையும் காங்கிரஸையும் அமித் ஷா வழக்கத்தைவிடக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பதும் கவனிப்பை ஏற்படுத்தியது. “காங்கிரஸ் கட்சிக்கும் ஸ்டாலினுக்கும் ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள் மக்களிடம் வாக்குச் சேகரிக்கச் செல்லும்போது அவர்களுக்கு காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், இஸ்ரோ ஊழல்தான் நினைவுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கையில் தமிழ் மக்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர். அப்போது திமுக அவர்களோடுதான் கூட்டணியில் இருந்தது” என்றார்.

“தமிழ்நாடு அரசு நாட்டிலேயே, உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக இருக்கிறது’’ என்று சாடிய அமித் ஷா, “ஊழல் வழக்கில் ஓர் அமைச்சர் கைதுசெய்யப்பட்டு இப்போதும் சிறையில் இருக்கிறார். அவரை இன்னும் அமைச்சராக வைத்திருக்கிறீர்கள். நீங்கள் வெட்கப்பட வேண்டும் ஸ்டாலின் அவர்களே… சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்கலாமா… அவர் இந்நேரம் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா… ஆனால், ஸ்டாலின் செய்ய மாட்டார். ஏனென்றால், அவரிடமிருந்து ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டால் எல்லா ரகசியங்களையும் சொல்லிவிடுவார். அதனால் வாங்காமல் இருக்கிறார். திமுக அரசைப் பற்றி அண்ணாமலை ஒரேயொரு ட்வீட் போட்டால் திமுக ஆட்சிக்கு பூகம்பே ஏற்படுகிறது. அவர்கள் செய்த பல கோடி ரூபாய்க்கான ஊழல் இப்போது வெளிவந்திருக்கிறது. அண்ணாமலையின் ஒரு ட்வீட்டுக்கே பூகம்பம் வருகிறது என்றால், நடைப்பயணம்  முடியும்போது என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்” என்றார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ராமேஸ்வரத்திலிருந்து தனது பாதயாத்திரையைத் தொடங்குகிறார். அதன் தொடக்க விழாவில் அமித் ஷா.

“எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு அவர்கள் குடும்பத்தை வளர்க்க வேண்டுமென்பதுதான் நோக்கம். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியைப் பிரதமர் ஆக்க வேண்டும். ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க வேண்டும். லாலு பிரசாத்துக்கு தேஜஸ்வியை முதல்வராக்க வேண்டும். மம்தா பானர்ஜிக்கு அவருடைய மருமகனை முதல்வராக்க வேண்டும். உத்தவ் தாக்கரேவுக்கு அவருடைய மகனை முதல்வராக்க வேண்டுமென்று விருப்பம்” என்று வாரிசு அரசியல் குறித்தும் அமித் ஷா சாடினார்.

கடந்த முறை அமித் ஷா வேலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுச் சென்ற, சில நாள்களிலேயே செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்து கைதுசெய்யப்பட்டார். இந்த முறை அமித் ஷா நேரடியாக திமுக அரசு மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததால் இது, அரசியல்ரீதியாக விவாதத்தைத் தூண்டியிருக்கிறது.

மறுபக்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமித் ஷாவின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பேசினார்.

“ `இந்தியா’ கூட்டணி. `இந்தியா’ என்ற பெயரைக் கேட்டால், சிலர் பதறுகிறார்கள். எங்கு சென்றாலும் திமுக-வை விமர்சிக்கிறார் பிரதமர் மோடி. திமுக ஆட்சி கோடிக்கணக்கான குடும்பங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. பாஜக நடத்துவது பாதயாத்திரை அல்ல, பாவயாத்திரை. குஜராத்தில் 2002-ம் ஆண்டில் நடந்ததற்கும், தற்போது மணிப்பூரில் நடந்துகொண்டிருப்பதற்கும் மன்னிப்புக் கேட்கும் பாவயாத்திரை.

2-வது இளைஞரணி மாநாடு – முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அமித் ஷா பேசியிருக்கிறார். குற்ற வழக்கு உடையவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். இது குறித்து பிரதமரிடம் அமித் ஷா கேட்பாரா… பாஜக தங்கள் அரசியல் எதிரிகளைச் சலவை செய்யும் வாஷிங் மெஷினாக அமலாக்கத்துறையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி முடியப்போகிறது. மத்திய அரசின் ஆட்டமெல்லாம் சில மாதங்கள்தான். 2014-ல் பதவியேற்பு விழாவுக்கு ராஜ பக்சேவை அழைத்தவர்கள், இலங்கைப் பிரச்னை குறித்துப் பேச உரிமை இருக்கிறதா?” என்று மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அரசியல் களம் இப்போதே பரபரக்கத் தொடங்கிவிட்டது என்பதை இரு தரப்பு விமர்சனங்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரனிடம் பேசினோம். “அமித் ஷாவின் வருகை பாதயாத்திரையைத் தொடங்கி வைப்பதற்காக என்றாலும், தேர்தல் பிரசாரத்துக்கான தொடக்கம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவார் என பேச்சுகள் அடிபடும் நிலையில், அங்கே பாதயாத்திரையைத் தொடங்கியிருப்பதும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்கிறது. அண்ணாமலைக்கு டெல்லியின் ஆசீர்வாதம் இருக்கிறதா, இல்லையா என்பதையும் விளக்கும்விதமாக அமித் ஷாவின் பேச்சு இருந்தது.

ஜெகதீஸ்வரன்

`அண்ணாமலை ஒரு ட்வீட் போட்டாலே திமுக அரசுக்கு பூகம்பம் வருகிறது’ என அமித் ஷா கூறியிருப்பது, அண்ணாமலை பாஜக-வில் முக்கியமான தலைவர் என்பதாக அமித் ஷாவே கொடுத்திருக்கும் விளக்கமாகத்தான் பார்க்க முடிகிறது. ஆனால் `திமுக ஃபைல்ஸ்-2’ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வேறு கதை.  அதேபோல, செந்தில் பாலாஜி மீது குற்றம் இருந்தால், நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் பதவியைத் தானாக இழக்கப்போகிறார். பாஜக-வில் இருப்பவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே… 2016-ல் திமுக, அதிமுக-போல ஊழல் கட்சிகள் இல்லை எனப் பேசியவர் அமித் ஷா. ஆனால், இப்போது ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். எனவே, இது முழுக்க அரசியல் பிரசாரம்தான். எதிர்க்கட்சிகள் 70,000 கோடி ஊழல் செய்திருக்கின்றன என்றால் 9 ஆண்டுகள் மத்தியில் பாஜக-தானே ஆட்சியில் இருந்தது… ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு என்ன செய்தது என்று இதுவரை ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, பதிலளிக்கும் வகையில் மிகப்பெரிய பட்டியலை அமித் ஷா வாசித்தார். ஆனால் அரிசி கொடுப்பது, குடிநீர்க் குழாய் கொடுப்பது, காஸ் இணைப்பு கொடுப்பதெல்லாம் மத்திய, மாநில அரசுகளின் கடமை. அதைச் சாதனைபோல சொல்ல முடியாது. வர்தா, கஜா போன்ற பேரிடர்கள் வந்தபோது மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. இது போன்ற பேரிடர் நிதி பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு மாதிரியும் கொடுக்கப்படுவது பாரபட்சம்தான். ஆனால் அது பற்றியெல்லாம் அமித் ஷா பேசப்போவதில்லை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *