மணிப்பூர்: துப்பாக்கிச்சூடு… தீ வைப்பு… மணிப்பூர் – மியான்மர் எல்லையில் பதற்றம்!

Whatsapp Image 2023 07 26 At 21 54 34.jpeg

மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரமானது, இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 140-க்கும் மேற்பட்டோர் இதுவரை வன்முறை வெறியாட்டங்களுக்கு பலியாகியிருக்கும் நிலையில், மத்திய, மாநில பா.ஜ.க அரசுகள் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், கலவர மேகங்கள் மாநிலத்தைச் சூழ்ந்திருக்கின்றன. இந்த நிலையில், மணிப்பூர் – மியான்மர் எல்லையில் வெடித்திருக்கும் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில் இருக்கும் நகரம் மோரே. இது மியான்ரின் எல்லையில் அமைந்திருக்கும் நகரமாகும். அந்தப் பகுதியில், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டபோது அத்தியாவசியப் பொருள்களை வாங்கச் சென்ற சில பெண்கள், அந்தப் பகுதியின் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

எரிக்கப்பட்ட பேருந்து

அதனால், மோரே பஜார் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள், பஜாரிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாதுகாப்புப் படையினருக்கும் அந்தப் பகுதியில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை வீரர்கள் காலியாக இருந்த வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு குழு, பாதுகாப்புப் படை வீரர்கள் பயன்படுத்திய ஒரு தற்காலிக விடுதிக்குத் தீ வைத்தது.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தியது. பாதுகாப்புப் படையினர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர், பதிலுக்கு கூட்டத்திலிருந்தும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் மியான்மர் – மணிப்பூர் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றச் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர், காங்போக்பி மாவட்டத்தில் காவலர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட இரண்டு பேருந்துகள் ஒரு கும்பலால் தீவைக்கப்பட்டது.

மணிப்பூர் மியான்மர் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள்

இந்த அசம்பாவித சம்பவங்களில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் காவல்துறை அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *