Tamil News Today Live: “பாஜக-வுக்கு இப்போது பிடிக்காத வார்த்தை ‘இந்தியா'! '' – முதல்வர் ஸ்டாலின்

1689806568 Whatsapp Image 2023 02 02 At 5 00 39 Pm.jpeg

மதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட வழக்கு; ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்!

ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன்

மதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. கனல் கண்ணன் 30 நாள்கள் தினமும் காலை மற்றும் மாலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் க்ரைம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது.

“பா.ஜ.க-வுக்கு இப்போது பிடிக்காத வார்த்தை ‘இந்தியா’!”

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர், “இத்தனை நாள் இந்தியாவின் தேசபக்திக்கு தாங்கள் மட்டுமே ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள்போல செயல்பட்டுவந்த பா.ஜ.க-வினரும் அதன் பரிவாரத்தினரும், ஜனநாயக இயக்கங்களின் கூட்டணிக்கு `இந்தியா’ என்ற பெயர் சூட்டியதும், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே தயக்கம் காட்டுகின்றனர். அவர்களின் போலி தேசபக்தி முகமூடி கழன்று தொங்குவதைக் காண முடிகிறது.

இந்தியா என்ற சொல் இப்போது அவர்களுக்குப் பிடிக்காத சொல்லாகிவிட்டது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என மதவாத சிந்தனையுடன் பேசிய பா.ஜ.க-வினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

செந்தில் பாலாஜி – உயர் நீதிமன்றம் – அமலாக்கத்துறை

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிரடியாகக் கைதுசெய்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், அவரை விடுவிக்கக் கோரியும் அவருடைய மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாவது நீதிபதி செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது எனத் தீர்ப்பளித்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

நாடாளுமன்றக் கூட்டம் – ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவிருக்கிறது. கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்க இன்று மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார். `தேனி தொகுதியில் அவரின் வெற்றி செல்லாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, மேல்முறையீடு செய்ய கால அவகாசம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார்!

மணிப்பூர் கலவரம்

மணிப்பூரில் பழங்குடியல்லாத மைதேயி சமூகத்துக்கும், குக்கி உள்ளிட்ட பழங்குடி சமூகத்துக்கிடையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக கலவரம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இது குறித்துப் பேசாமல், மெளனமாக இருப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், `மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார்’ என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமா… தீவிரவாதிகள் என 5 பேர் கைது! 

போலீஸ்

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடத்த திட்டம் தீட்டியதாக, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் ஐந்து பேரை இன்று கைதுசெய்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட சயீத் சுஹெல், உமர், ஜானித், முதாசிர், ஜாஹித் ஆகிய ஐந்து பேரும் ஏற்கெனவே 2017-ல் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதோடு, தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இவர்களிடமிருந்து ஏழு துப்பாக்கிகள், தோட்டாக்கள், வாக்கி டாக்கி உட்பட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

ஸ்டாலின் – பொன்முடி சந்திப்பு..!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு, பிறகு சென்னைக்குத் திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களின் அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “இதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். போகப்போக இன்னும் பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அதிலும் நிச்சயம் வெற்றி காண்போம். எல்லாவற்றையும் நாங்கள் சட்டரீதியாகச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

ஸ்டாலின்

இதற்கிடையே, நேற்று மாலை தன்னுடைய மகன் கெளதம சிகாமணியுடன் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். மாலை 4 மணிக்குத் தொடங்கிய விசாரணை, இரவு 10 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை, அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்தார். அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும், விசாரணையின் போக்கு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *