Uncategorized

ஜோதிடம்

1234801.jpg

சுற்றுப்புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 6-ம் வீட்டில் சென்று மறைகிறார். 6-ம் வீடு ஆறாக்கும், கூறாக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. முடிந்தவரை மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

உறவினர்கள், தோழிகள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம் நிகழ்ச்சிகளை எல்லாம் நீங்கள் தான் செலவு செய்து பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும். கணவருடன் கருத்து மோதல் வரும். மாமனார், மாமியார், நாத்தனார் வகையிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட அவர்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். முன்கோபத்தை குறைக்கப் பாருங்கள்.

யாரேனும் உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. தவறு செய்யாமலேயே நீங்கள் தவறு செய்தாக சிலர் வீண் பழி சுமத்துவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கோபத்தை காட்ட வேண்டாம். அவர்களின் திறமையைக் கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை ஊக்கப்படுத்தப் பாருங்கள். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவதற்கெல்லாம் வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

குரு 2-ம் வீட்டை பார்ப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. நீங்கள் எதிர்பார்க்கும் தேதியில் பணம் கிடைக்காவிட்டாலும் கடைசி நேரத்தில் கைக்கு வந்து சேரும். குரு 10-ம் வீட்டை பார்ப்பதால் வேறு வேலைக்கு மாற வேண்டி வரும். புது வேலைக் கிடைக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். எதையும் காலத்தில் கட்டிவிடுவது நல்லது. வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். காசோலைகள் தருவதற்கு முன்பாக யோசித்து தருவது நல்லது.

குருபகவானின் நட்சத்திர பயணம்: 1.5.2024 முதல் 13.6.2024 வரை உங்களின் பாக்யாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. புதிய வேலை கிடைக்கும். தந்தை உதவுவார். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களைகட்டும். அரசால் ஆதாயமுண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டுக்கு புதிய சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை உங்களின் அஷ்டமாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் வீண் அலைச்சல்கள் அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் பயணங்கள், வீண் செலவுகள் என அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சிறு சிறு விபத்துகள், உடல் நலக்குறைவுகள் வந்து போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை உங்களின் பூர்வ புண்ணிய விரயாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மகனுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். வீடு மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பெயர், புகழ், கௌரவம் கூடும்.

ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். இடப்பெயர்ச்சி உண்டு. வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்களால் தொந்தரவுகள் ஏற்படும். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம்.

சிறுசிறு அபராதத் தொகை கட்ட வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும். சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக் கூடும். வீட்டில் கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய் பிரச்சினை வந்துப் போகும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி – இறக்குமதி, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம்.

இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக்ட் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். ஆவணி மாதத்தில் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் பொறுப்பு அதிகமாகும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள்தான் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வுப் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த குருமாற்றம் உங்களை இமேஜை ஒருபடி குறைத்தாலும், உடல் நலக் குறைவையும் தந்தாலும் சகிப்புத் தன்மையாலும், சாதுர்யமான பேச்சாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.

பரிகாரம்: தேனி மாவட்டம், குச்சனூர் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் யானை வாகனத்துடன் ராஜ தோரணையில் அருள்பாலிக்கும் ஸ்ரீராஜயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவுங்கள். வெற்றிகள் தேடி வரும்.

(நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *