Uncategorized

ஜோதிடம்

1231674.jpg

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே! நீங்கள் இரக்க சிந்தனை கொண்டவர்கள். கிரகநிலை – தனவாக்கு ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது சப்தம ஸ்தானம் – பாக்கிய ஸ்தானம் – லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் – புதன்கிழமையும் – திருவோண நக்‌ஷத்ரமும் – சுப நாமயோகமும் – பவ கரணமும் – சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு – மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

மீனம் ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: தைரிய ஸ்தானத்திற்கு மாறும் குரு பகவானால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடந்து மனநிம்மதி அடைவீர்கள். அனைத்து விஷயங்களும் படிப்படியாக சீராகும். வருமானம் உயரும். வீண் விரயம் ஏற்படாத வகையில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீர்கள். செய்தொழிலில் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். புதியவர்கள் கூட்டாளிகள் ஆவார்கள். இதனால் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.

புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். ஆற்றல் மிகுந்தவர்களையும், திறமைசாலிகளையும் உறுதுணையாகக் கொண்டு புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் இல்லம் தேடி விருந்தினர்கள் வருவார்கள். மற்றவர்கள் முடியாது என்று விட்டுவிட்ட காரியங்களைக் கூட நீங்கள் சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள்.

உங்களின் மன பலத்தை மூல தனமாக்கிகொள்வீர்கள். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கும். குடும்பத்தாருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். மற்றபடி வெளியாட்களிடம் உங்களின் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விட்டுக்கொடுத்து முடித்துக்கொள்ளவும்.

நம்பகமான கூட்டாளிகளிடம் முக்கியமான வேலைகளைப் பிரித்துக் கொடுத்து அவர்களின் விருப்பப்படி செயல்பட அனுமதிப்பீர்கள். அனுபசாலிகளின் வழிகாட்டுதலின்படி குறித்த காலத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களின் காரியங்கள் நேர்த்தியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் ஒத்துழைப்புடன் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள்.

பெற்றோர் வழியில் சில மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். உடன் பிறந்தோரால் அனாவசியப் பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் அவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அனாவசியமான பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பயணங்களின் போது கவனம் தேவை. மற்றபடி பிள்ளைகளுக்கு சிறப்பான வருமானம் தரும் உத்யோகம் கிடைக்கும். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் வாக்குகொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நல்லபடியாக முடியும். கூட்டாளிகள் உங்களை நம்பிப் புதிய முதலீடுகளில் ஈடுபட சம்மதிப்பார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று உங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இதனால் சக வியாபாரிள் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்களுக்கு கட்சியில் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உட்கட்சிப் பூசல்களில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனம். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு முடித்துக் கொடுத்த பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெற முயற்சிக்கவும். ரசிகர்களின் மனம் புண்படாத வகையில் நடந்துகொள்ளுங்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பார்கள். எனவே அவர்களின் மனம் குளிர நடந்துகொண்டு அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டு உங்கள் செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதனால் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். மற்றபடி விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு செலுத்தி வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியால் புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.

உத்திரட்டாதி: இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். காரிய வெற்றி உண்டாகும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. வியாபாரிகளுக்கு காரிய தடை ஏற்படலாம். கவனம் தேவை. காரிய அனுகூலம் உண்டு. ஆனால் தாமதப்படும். எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் அடையும். கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும். வெளியூர் சென்றுவர நேரிடலாம்.

ரேவதி: இந்த குரு பெயர்ச்சியால் மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும் | சிறப்பு பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஷட் ஷண்முகாய நம:” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன் | அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *