Uncategorized

ஜோதிடம்

1230154.jpg

கும்பம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் காய் நகர்த்தி காரியத்தை கச்சிதமாக முடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். சி.எம்.டி.ஏ, எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா வரும். கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும்.

இந்தப் புத்தாண்டு உங்களின் 5-ம் வீட்டில் பிறப்ப தால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். மகளுக்கு இந்தாண்டு கல்யாணம் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள், பதவிகள் வர வாய்ப்பு உள்ளது. தூரத்து சொந்தம் தேடி வரும். பூர்வீக சொத்தை சீரமைப்பீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

இந்தாண்டு முழுக்க ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக தொடர்வதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். தினசரி நடைப்பயிற்சி மேற் கொள்வது நல்லது. கணவன் – மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். எதுவாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டு பேசி முடிவுகள் எடுக்கப் பாருங்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷ யங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

30.04.2024 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். அக்கம் – பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

01.05.2024 முதல் குரு ராசிக்கு 4-ல் நுழைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும். தாயாருடன் விவாதங்கள் வரக் கூடும். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

இந்தாண்டு முழுக்க நிழல் கிரகங்களான ராகு 2-ம் வீட்டிலும் கேது 8-ம் இடத்திலும் நீடிப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். பார்வைக் கோளாறு வரக்கூடும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். தனி நபர் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதைக் குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். திடீர் லாபம் உண்டு. புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது. உத்தியோகத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் ஓர் அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்சினைகள் வந்துச் செல்லும்.

இந்தப் புத்தாண்டு ஆரோக்கிய குறைவையும், காரியத் தடங்கல்களையும் தந்தாலும் தொடர் முயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை சென்று வணங்குங்கள். தந்தையில்லா பிள்ளைக்கு உதவுங்கள். மன நிம்மதி உண்டாகும்.

– வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *