Uncategorized

ஜோதிடம்

1230139.jpg

துலாம் மற்றவர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ள நீங்கள், துவண்டு வருவோருக்கு தோள் கொடுப்பவர்கள்! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த குரோதி வருடம் பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறுவீர்கள். உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும். சாதிக்கும் எண்ணம் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள் என்றாலும் 6-ல் வீட்டில் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

இந்தாண்டு முழுக்க 5-ம் இடத்திலேயே சனி அமர்ந்திருப்பதால் முடிவுகள் எடுப்பதில் ஒருவித குழப்பமும், தடுமாற்றமும் இருந்துக் கொண்டேயிருக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரை நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தமாக அதிகம் செலவு செய்து சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் சரிசெய்து கொள்ளுங்கள்.

30.04.2024 வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.

மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். 01.05.2024 முதல் குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். மறதியால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இழக்க நேரிடும். முன்கோபத்தால் நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள்.

இந்தாண்டு முழுக்க ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரச்சினைகள் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புது பதவிகள் தேடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலமாக பணம் வரும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும்.

மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். எதிரானவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாய மடைவீர்கள். வேற்றுமொழி, மதம், அண்டை மாநிலத்தவர்களால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் உண்டாகும்.

கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொள்வீர்கள். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.

புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பற்று வரவு உயரும். சிலர் சொந்த இடம் அல்லது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புரோக்கரேஜ், ஸ்பெகுலேஷன், அழகு சாதனப் பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். மதிப்பு கூடும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டிவரும். பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெற்று புதுபதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு சின்ன சின்ன ஏமாற்றங்களை தந்தாலும் வெளிச்சத்தை நோக்கி பயணிக்க வைத்து சாதனைகள் படைக்கத் தூண்டும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள். வெற்றி நிச்சயம்.

– வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *