Uncategorized

ஜோதிடம்

1230135.jpg

சிம்மம் ஏர்முனையாக இருந்தாலும், போர் முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்பவர்களே! உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சுருங்கிய முகம் மலரும். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்தப் பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தில் தீர்வு கிடைக்கும். தம்பதிக்குள் அன்யோன்யம் உண்டாகும்.

சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிட்டும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் விருந்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும். புது சிந்தனைகள் பிறக்கும். பிள்ளைகளின் நெடுநாள் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அவர்களின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.

ராசிநாதன் சூரியனும், ஜீவனாதிபதி சுக்ரனும் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 30.04.2024 வரை உங்கள் ராசிக்கு குருபகவான் 9-ல் நிற்பதால் பிரச்சினைகளை தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும் பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மகன், தாயாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் நுழைவதால் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

இந்த வருடம் முழுக்க சனி உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதால் முன்கோபம் அதிகமாகும். கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். திருமண முயற்சிகள் தாமதமாக முடியும். முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும்.

இந்தாண்டு முழுக்க ராகு 8, கேது 2-ம் இடத்திலும் நீடிப்பதால் இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். முன்கோபம் அதிகமாகும். பல் வலி, காது வலி வந்துப் போகும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். வறட்டு கவுரவத்துக்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு லாபம் வரும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடை வீர்கள். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர் பாதையில் செல்வது நல்லது. இடமாற்றம் உண்டு. புரட்டாசி, ஐப்பசி, தை மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாகும். வேறு சில புது வாய்ப்புகளும் வரும். சம்பளம் உயரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

இந்த தமிழ் புத்தாண்டு முற்பகுதியில் சின்ன சின்ன முடக்கங்களையும், சங்கடங்களையும் தந்தாலும், மையப்பகுதியில் வருங்காலத் திட்டங்களை ஓரளவு நிறைவேற்றித் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 7 கி.மி தொலைவில் உள்ள அழிசூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருளாலீசுவரரை சென்று வணங்குங்கள். ஏழைக் கன்னிப்பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள். வசதி, வாய்ப்பு பெருகும்.

-வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *