Uncategorized

ஜோதிடம்

1229762.jpg

கடகம்: சீர்திருத்தச் சிந்தனை அதிகமுள்ள நீங்கள், மந்திரியாக இருந்தாலும் மனதில் பட்டதை பளிச்சென பேசுவீர்கள்.குரோதி வருடம் பிறக்கும்போது சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் குடும்பத்தில், கணவன் – மனைவிக்குள் இருந்து வந்தப் பிணக்குகள் நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சமூகத்தில் மதிக்கத் தகுந்த அளவுக்கு கவுரவப் பதவியில் அமருவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிட்டும். சொந்த – பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று பணி அழைப்பு வரும்.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில் களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 30.04.2024 வரை குரு 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். விலை உயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் போராட்டங்கள் குறையும். தடைகளெல்லாம் நீங்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பதவிகள், பொறுப்புகள் தருவார்கள்.

இந்தப் புத்தாண்டு முழுவதுமாக சனி உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவிப்பீர்கள். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டினாலோ அதை பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது.

இந்த குரோதி வருடம் முழுவதும் ராகு பகவான் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளுங்கள். கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மனோபலம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். கவுரவப் பதவிகள் வரும். விலை உயர்ந்த தங்க ஆபரணம், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் வந்துப் போகும். எதிர்பார்த்த ஆர்டர் தாமதமாக வரும். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். பழைய ஏற்றுமதி – இறக்குமதி, லாட்ஜிங், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்து போகவும். ஐப்பசி, மாசி, தை மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புது அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் ஒருதலைபட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு. இந்தப் புத்தாண்டு சின்ன சின்ன கசப்பான அனுபவங்களைத் தந்தாலும் அனுபவ அறிவால் முன்னேறுவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் – உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்  சிம்ம தட்சிணாமூர்த்தியை ஏதேனும் ஒரு வியாழக் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். முடிந்தால் ஏழை நோயாளிக்கு மருந்து வாங்கிக் கொடுங்கள்.

– வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *