Uncategorized

ஜோதிடம்

1229754.jpg

மேஷம்: புரட்சிகரமான தொலை நோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்களே! பூர்வ புண்யாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சமடைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைப்பட்டு வந்த அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். புது வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் பொறுப்பு கூடும். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

நட்பு வட்டம் விரிவடையும். உங்களின் சுகஸ்தானாதிபதியாகிய சந்திரன் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மாதக் கணக்கில், வாரக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். மனோபலம் அதிகரிக்கும். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

இந்த வருடம் முழுக்க கேதுபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் ஆரோக்கியம் மேம்படும். மனதில் ஒரு வித தெம்பு, தைரியம் இருக்கும். ராகுவும் உங்களுக்கு ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தீராத கடன்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் -மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். வட்டிக்கு வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உங்களின் ஸ்டேட்டஸ் ஒரு படி உயரும்.

30.04.2024 வரை ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். 01.05.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.

ஷேர் மூலம் பணம் வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சேர்க்கை உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.

இந்த குரோதி வருடம் முழுவதுமாக உங்கள் ராசிக்கு சனிபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். வருமானம் உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். இயக்கம், சங்கம் இவற்றில் கவுரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் புது முதலீடு செய்து சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து ஓரளவு லாபம் பெறுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். பங்குதாரர்கள் உங்களது கருத்துகளை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்கள். கமிஷன், கட்டிட உதிரி பாகங்கள், கடல் வாழ் உயிரினம், பெட்ரோ – கெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பிரபலங்கள், நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவது, அழகு படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். கார்த்திகை, பங்குனி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடி வரும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.

இந்த குரோதி வருடம் நீங்கள் கையில் எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களை வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமான் கோயில் சென்று தரிசியுங்கள். சகல பாக்கியமும் உண்டாகும். கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள்.

– வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *