EP01 நாடாளுமன்றத்தில் இவர்கள்: ஓராண்டுகூட இல்லை; ஆனாலும்..! – `சமூக நீதிக் காவலர்’ வி.பி.சிங் சாதித்தது என்ன?

Whatsapp Image 2024 03 08 At 14 51 27 1 .jpeg

இதுவரையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் அனைத்தும், எதிர்பாராத பல திருப்பங்கள் கொண்டதாகவே அமைந்திருக்கின்றன. அப்படித்தான், யாரும் எதிர்பார்க்காத தலைவர்கள் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். குஜராத் முதல்வராக இருந்த மோடி, பிரதமராக வருவார் என்று 2014-ம் ஆண்டுக்கு முன்பு பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை.

வி.பி.சிங்

அவருக்கு முன்பாக, தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ் உட்பட பலரும் அப்படி எதிர்பார்க்காத வகையில் பிரதமராக வந்தவர்கள்தான். இவர்களைப் பற்றிய சுவாரஸ்யம் நிறைந்த தேர்தல்கால அரசியல் வரலாற்றுப் பக்கங்களை இந்த மினி தொடரில் கொஞ்சம் புரட்டிப் பார்க்கப்போகிறோம்.

முன்னாள் பிரதமர்களில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு மட்டுமே தமிழ்நாட்டில் சிலைகள் உண்டு. இந்த வரிசையில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலை கடந்த ஆண்டு சென்னையில் திறக்கப்பட்டது. வி.பி.சிங் சிலையைத் திறந்துவைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூக நீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக்காட்டியவர் வி.பி.சிங்’ என்று குறிப்பிட்டார்.

ஸ்டாலின் – வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சி

ஆமாம். 1989, 1990-களில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மண்டல்குழுவின் பரிந்துரையை அவர் அமல்படுத்தினார். அதன் மூலம், இந்திய அரசியல் வரலாற்றில் அழியாத புகழை அவர் பெற்றிருக்கிறார்.

1974-ம் ஆண்டு, இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தக இணை அமைச்சராக இருந்த வி.பி.சிங், ராஜீவ் காந்தி தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். இந்திரா காந்தியின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சி பெற்றது. பிரதமர் நாற்காலியில் அமர்ந்த ராஜீவ் காந்திக்கு, அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற இமேஜ் இருந்தது.

தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் வி.பி.சிங்

உண்மையில், ராஜீவ் காந்தியைவிட க்ளீன் இமேஜ் கொண்ட அரசியல்வாதியாக இருந்தார், நிதியமைச்சர் வி.பி.சிங் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அப்போது, வரி ஏய்ப்பில் ஈடுபட்ட பெருநிறுவனங்கள்மீது, வி.பி.சிங் உத்தரவின் பேரில் சோதனை நடைபெற்றது. பெரும் தொழில் நிறுவனங்கள் மத்தியில் அது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்தச் சோதனையால் ராஜீவ் காந்திக்கு நெருக்கமான பலர் பாதிக்கப்பட்டனர். அதனால், பெரும் சங்கடத்துக்கு உள்ளான ராஜீவ் காந்தி, நிதித்துறையிலிருந்து பாதுகாப்புத்துறைக்கு வி.பி.சிங்கை மாற்றினார். அங்கு போன பிறகும் அவர் சும்மா இருக்கவில்லை. பாதுகாப்புத்துறையில் இருந்த முறைகேடுகளைத் துருவத் தொடங்கினார் வி.பி.சிங்.

வி.பி.சிங்

அதில், நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் வெளிவந்தது. நீர்மூழ்கிக் கப்பல்கள்  வாங்கியதில் ஏழு சதவிகித கமிஷன் வாங்கிய விவகாரம் அம்பலமானது. அந்த விவகாரம், ராஜீவ் காந்திக்குப் பெரும் கவலையைக் கொடுத்தது. ராஜீவ் காந்தியின் ’மிஸ்டர் க்ளீன்’ என்ற இமேஜ் அடிவாங்க ஆரம்பித்தது. அதனால், இருவருக்குமிடையே மோதல் ஏற்பட, அமைச்சர் பதவியை வி.பி.சிங் ராஜினாமா செய்தார்.

மேலும் வி.பி.சிங் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான், ஸ்வீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் இந்தியா ஆயுதம் வாங்குவதற்காக மூத்த காங்கிரஸ் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

போஃபர்ஸ் விமானங்கள் வாங்கியதில், காங்கிரஸ் தலைவர்களும் அதிகாரிகளும் ரூ. 64 கோடி கமிஷன் பெற்றனர் என்ற விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பணம், சுவிஸ் வங்கியில் போடப்பட்டது என்ற சர்ச்சையும் கிளம்பியது. போஃபர்ஸ் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானபோது, பாதுகாப்புத்துறை ராஜீவ் காந்தியின் வசம் இருந்தது. அந்த விவகாரம், காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பெரும் புயலை உருவாக்கியது.

ராஜீவ் காந்தி

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வி.பி.சிங், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார். பிறகு, ‘ஜனமோர்ச்சா’  என்ற புதிய கட்சியை அவர் தொடங்கினார். அப்போது, அலகாபாத் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வி.பி.சிங் வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து, ஜனமோர்ச்சாவும், சந்திரசேகர் தலைமையிலான ஜனதா கட்சியும் சேர்ந்து `ஜனதா தளம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கின. ஜனதா தளத்துடன், தி.மு.க., தெலுங்கு தேசம், லோக் தளம், அஸ்ஸாம் கண பரிஷத், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் சேர்ந்து ‘தேசிய முன்னணி’ என்ற பிரமாண்டமான கூட்டணி உருவானது.

இன்னொரு புறம், ராஜீவ் காந்தி அரசுக்கு எதிராக இடதுசாரிகள், பா.ஜ.க ஆகியோரும் தீவிரம் காட்டினர். அதனால், அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. மக்களவையைக் கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த ராஜீவ் காந்தி முடிவுசெய்தார். அந்தத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், பா.ஜ.க 85 தொகுதிகளிலும், சி.பி.எம் 33 தொகுதிகளிலும், சி.பி.ஐ 12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் கட்சி வெறும் 197 தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது. மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி அமைந்தது. ராஜீவ் காந்திக்கு நேரடிப் போட்டியாக களத்தில் நின்ற வி.பி.சிங், பிரதமரானார்.

வி.பி.சிங் சிலை திறப்பு விழா

1989-ம் ஆண்டு, டிசம்பர் 2-ம் தேதி முதல் 1990-ம் ஆண்டு, நவம்பர் 10-ம் தேதிவரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். அதாவது, அவர் ஓராண்டுக்காலம்கூட பிரதமராக இருக்கவில்லை. வெறும் 11 மாதங்களே ஆட்சியில் இருந்தாலும் `மக்களாட்சி’ என்ற வார்த்தைக்கு இந்திய அரசியல் அகராதியில் அர்த்தத்தைத் தந்தவர் வி.பி.சிங்.

மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த அவர் நடவடிக்கை எடுத்ததால், அதைக் கடுமையாக எதிர்த்த ஒரு பிரிவினர், அவரது ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்கான வேலைகளில் இறங்கினார்கள். அதில், அவர்கள் வெற்றியும் பெற்றனர். வி.பி.சிங் ஆட்சிக்கு 343 நாள்களில் முடிவுகட்டினார்கள். 1990-ம் ஆண்டு, நவம்பர் 10-ம் தேதி அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.

அவர் கொண்டுவந்த இட ஒதுக்கீட்டுக்கு இன்று ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், சமூகரீதியில் முற்பட்ட வகுப்பினருக்குக் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. இட ஒதுக்கீட்டு முறையை நேரடியாக ஒழித்துக்கட்டுவது அவ்வளவு எளிதல்ல.

எனவே, அதைப் புரிந்துகொண்ட ஆட்சியாளர்கள், மறைமுகமாக பல வழிகளில் இடஒதுக்கீட்டு முறையைப் பலவீனப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இதில் இன்னொரு பிரச்னை. மத்திய, மாநில அரசுப் பணியிடங்கள் பல்லாயிரக்கணக்கில் நிரப்படாமல் இருப்பதால், இட ஒதுக்கீடு முறை இருந்தாலும்கூட, அதனால் மக்களுக்குப் பலன் இல்லாமல் போகிறது. இது மிகப்பெரிய அவலம்.

இந்த நிலையில், ‘தகுதிவாய்ந்த நபர்கள் இல்லாத காரணத்தால், இட ஒதுக்கீட்டின்படி நிரப்படாமல் காலியாக இருக்கும் அரசுப் பணியிடங்களை பிற சமூகத்தினரைக் கொண்டு நிரப்பலாம்’ என்று மத்திய அரசு முடிவெடுத்ததாகவும், அதற்கான விதிமுறைகள் வகுப்படவிருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அப்படி எந்தவொரு முடிவும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்தார்கள்.

வி.பி.சிங்

‘சமூக நீதிக் காவலர்’ என்று அழைக்கப்படும் வி.பி.சிங் கண்ட கனவு நிறைவேற வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை சமீபகாலமாக எழுந்திருக்கிறது.

‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், `ஒருவன் சமூக அடிப்படையில்தான் பல்லாயிரம் வருடம் ஒடுக்கப்பட்டு இருக்கிறான். அதனால் சமூக அடிப்படியில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்’ என்கிற வாதத்தை முன்வைத்தவர் வி.பி சிங்!

(தொடரும்..!)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *