Article 370: “அரசின் முடிவை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு!" – உச்ச நீதிமன்றம்

Gridart 20231211 103458674.jpg

மத்தியில் ஆளும் பா.ஜ.க, கடந்த 2019-ல் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த அதே ஆண்டில் ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு முன்னறிவிப்புமில்லாமல், இன்டர்நெட்டை துண்டித்து, மாநில அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறைப்படுத்தி, அரசியலமைப்பு பிரிவு 370 (Article 370)-ஐ நீக்கியது. அதோடு, மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து, மாநிலத்தையே இரண்டாகப் பிரித்தது. பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்திருப்பதாக பா.ஜ.க பெருமையுடன் தற்போது கூறிவருகிறது.

Article 370 – மோடி

உச்ச நீதிமன்றமும், ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும் என கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தது. மேலும், பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நேற்று முன்தினம் ஸ்ரீநகருக்கு வந்த பிரதமர் மோடி கூட. “இதுதான் நாம் எதிர்பார்த்த புதிய ஜம்மு காஷ்மீர், 370 நீக்கப்பட்ட பிறகே ஜம்மு காஷ்மீருக்கு இந்த சுதந்திரம் கிடைத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் இன்று சுதந்திரமாக சுவாசிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இருப்பினும், பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக பா.ஜ.க அரசை எதிர்க்கட்சிகள் இன்றும் விமர்சித்துவருகின்றன. இந்த நிலையில், பிரிவு 370 நீக்கப்பட்ட நாளை காஷ்மீரின் ‘கறுப்பு நாள்’ என்று வாட்ஸ்அப்பில் கருத்து பகிர்ந்த பேராசிரியருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில், அரசின் முடிவை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருக்கிறது.

Article 370

முன்னதாக, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் கல்லூரியில் பணிபுரியும் காஷ்மீரி பேராசிரியர் ஜாவேத் அகமது ஹசாம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவில், `ஆகஸ்ட் 5 ஜம்மு காஷ்மீரின் கறுப்பு தினம். ஆகஸ்ட் 14 பாகிஸ்தான் சுதந்திர தினம்’ என்று மெசேஜ் பதிவிட்டதற்கு எதிராக, மகாராஷ்டிரா காவல்துறை அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A-ன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு, மும்பை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர் மனு தாக்கல் செய்தார். ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அதையடுத்து பேராசிரியர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில், பேராசிரியரின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்ற அமர்வு, “பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாளை ‘கறுப்பு தினம்’ என்று விவரிப்பது, எதிர்ப்பு மற்றும் வேதனையின் வெளிப்பாடாகும். அரசின் நடவடிக்கைகள் மீதான ஒவ்வொரு விமர்சனமும் அல்லது எதிர்ப்பும் 153-ஏ பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்பட்டால், இந்திய அரசியலமைப்பின் இன்றியமையாத அம்சமான ஜனநாயகம் நிலைக்காது.

உச்ச நீதிமன்றம்

மேல்முறையீட்டாளர் பயன்படுத்திய ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள், பல்வேறு மத, இன, மொழி அல்லது பிராந்திய குழுக்கள் அல்லது சாதிகள் அல்லது சமூகங்களுக்கிடையில் பகைமை, வெறுப்பு அல்லது தவறான உணர்வுகளைத் தூண்டுவதாக இல்லை.

இது ஒரு எதிர்ப்பு மட்டுமே. மேலும், இது அவரது பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். பிரிவு 19(1)(a) மூலம் பேச்சு சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் கீழ், ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த நடவடிக்கை அல்லது அந்த விஷயத்தில் அரசின் ஒவ்வொரு முடிவையும் விமர்சிக்க உரிமை உண்டு. எனவே, அரசின் முடிவில் தனக்கு மகிழ்ச்சியில்லை என்று கூற அவருக்கு உரிமை இருக்கிறது.

பாகிஸ்தான் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவிப்பது நல்லெண்ண அடிப்படையிலான செயலாகும்.

பேச்சுரிமை

நமது நாடு 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயகக் குடியரசாக இருந்து வருகிறது. நமது நாட்டு மக்களுக்கு ஜனநாயக விழுமியங்களின் முக்கியத்துவம் என்னவென்பது தெரியும். எனவே, இந்த வார்த்தைகள் பல்வேறு மத குழுக்களிடையே ஒற்றுமையின்மை அல்லது பகை, வெறுப்பு அல்லது தீய எண்ணத்தை வளர்க்கும் என்று முடிவு செய்ய முடியாது. ஒரு சில தனிநபர்கள் வெறுப்புணர்வையோ அல்லது தவறான எண்ணத்தையோ வளர்த்துக் கொள்வதால், பிரிவு 153-Aன் துணைப்பிரிவு (1)-ன் உட்பிரிவு (a)-ஐ சேர்ப்பது போதுமானதாக இருக்காது” என்று தீர்ப்பளித்து வழக்கை ரத்து செய்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *