`இந்த 5 கேள்விகளுக்கு நாட்டின் பெண்கள் பதில் எதிர்பார்க்கிறார்கள் பிரதமரே!' – ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

Jairam Ramesh.jpg

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியிடம் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் பிரச்னைகள் குறித்து 5 கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், “மணிப்பூரில் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தொடரும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மாநிலத்தில், பெண்கள் தாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகியது. மணிப்பூர் மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க-வின் இரட்டை இன்ஜின் ஆட்சிதான் நடந்து வருகிறது. இன்றுவரை அந்த மாநிலத்திற்கு பிரதமர் ஏன் செல்லவில்லை… பாதிக்கப்பட்ட பெண்களை ஏன் கண்டுகொள்ளவில்லை?

மணிப்பூர் பழங்குடி பெண்கள் நிர்வாணக் கொடுமை

பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக, இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்த மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கூறியபோது இந்தியாவின் மகள்களுக்கு ஆறுதல் கூறாமல் பிரதமர் மோடி மௌனம் காத்தது ஏன்? இந்தப் பிரச்னையில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? பிரிஜ் பூஷன் சரண் சிங்கை `மோடி கா பரிவார்’ மோடியின் குடும்ப உறுப்பினராக மோடி கருதுகிறாரா?

அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வைச் சமாளிக்க மோடி அரசு தவறிவிட்டது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. இந்த விலைவாசி உயர்வின் பாதிப்பிலிருந்து குடும்பங்களைப் பாதுகாக்கும் திட்டம் பிரதமரிடம் உள்ளதா?

பிரதமர் மோடி

மோடியின் அநியாய ஆட்சியில் வேலை தேடும் பெண்களின் உயர் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருகிறது. டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமையின்கீழ் இருந்த ஆட்சியில் தற்போதைய நிலையை விட 20 சதவிகிதம் குறைவாகத்தான் இருந்தது. இது பொருளாதாரத்தின் நீண்டகால திறனைக் குறைக்கும் போக்கு. பெண்களை மீண்டும் பொருளாதார நீரோட்டத்திற்குக் கொண்டு வரப் பிரதமரிடம் தீர்வு இருக்கிறதா?

`பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’ யோஜனா, அதாவது பெண் சிசுக்கொலையைத் தடுத்தல் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கான அர்த்தமுள்ள முன்முயற்சிகளுக்குப் பதிலாக அதன் பட்ஜெட்டில் கணிசமான தொகை விளம்பரங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விளம்பரத்தில் தன் முகத்தைக் காட்டுவதற்குப் பிரதமருக்கு ஒரு வாய்ப்புக் களமா அது? இந்தியாவின் பெண்கள் பதில்களை எதிர்பார்க்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *